தமிழர் தாயகப் பிரதேசமான முல்லைத்தீவு

ஒட்டுசுட்டானில் கல் அகழ்வு- வாவெட்டி மலை சூறையாடல்

ஈழத் தமிழர்களின் மரபுரிமை திட்டமிட்டு அழிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு
பதிப்பு: 2019 ஜூலை 26 15:13
புலம்: முல்லைத்தீவு, ஈழம்
புதுப்பிப்பு: ஜூலை 29 12:51
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#Mullaituvu
#Tamils
#Tamilgenocide
#lka
#oddusuddan
#srilanka
தமிழ் பேசும் மக்களது தாயகமான வடக்கு கிழக்கு மாகாணங்களில் 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இலங்கை அரசின் ஆதரவுடன் நேரடியாகவும் மறைமுகமாகவும் நில அபகரிப்புத் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இறுதிப் போரினால் முழுமையாகப் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் ஒன்றான ஒட்டுசுட்டான் வாவெட்டி மலையில் மேற்கொள்ளப்படும் கல் அகழ்வு நடவடிக்கையினால் குறித்த பகுதி முழுமையாக அழிவடையும் அபாயம் ஏற்பட்டுள்ளததாகப் புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் இராமலிங்கம் சத்தியசீலன் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார்.
 
ஈழத் தமிழர் வர­லாற்­றுடன் தொடர்­பு­டை­ய ஒட்­டு­சுட்டான் தான்­தோன்­றீ­வரர் ஆல­யத்­தோடு தொடர்­பு­டை­ய­ வாவெட்டிமலை ஆபத்தை எதிர்நோக்கியுள்ளது. தொல்­பொருள் வல­ய­மாக வாவெட்டிமலை அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் கொழும்பை மையமாகக் கொண்டு செயற்படும் இலங்கைத் தொல்­பொருள் ஆராட்சித் திணைக்களம் அதனைப் பராமரிப்பதில்லை.

கொழும்பில் உள்ள இரண்டு தனியார் நிறுவனங்கள் கொழும்பு நிர்வாகத்திடம் அனுமதியைப் பெற்று இலங்கைப் பொலிஸாரின் ஒத்துழைப்புடன் கருங்கற்களை அகழந்தெடுத்து கொழும்புக்கு ஏற்றுவதாகப் பிரதேச மக்கள் கூறுகின்றனர்

இந்த மலையில் கல் அகழ்வு இடம்­பெறுவதற்கு இலங்கைப் பொலிஸாரும் இராணுவத்தினரும் ஒத்துழைப்பதாகப் பிரதேச மக்களும் குற்றம் சுமத்துகின்றனர்.

வர­லாற்றுச் சிறப்புமிக்க ஒட்­டு­சுட்டான் தான்­தோன்­றீஸ்­வரர் ஆல­யத்­துடன் தொடர்­பு­டைய வாவெட்டி மலையிலுள்ள வாவெட்டி ஈஸ்­வரர் ஆல­யத்தில் சென்ற பதின்நான்காம் திகதி மக்கள் வழி­பா­டு­களி்ல் ஈடுபட்டிருந்தனர்.

வாவெட்டி
2017 ஆம் ஆண்டில் இருந்து ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் கோயிலில் வேட்டைத் திருவிழா நடைபெற்று வருகின்றது. அங்கு செல்லும் மக்கள் வாவெட்டிமலைக்கும் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். சென்ற பதின்நான்காம் திகதி ஞாயிற்றுக்கிழமை வாவெட்டிமலையில் வழிபாடுகள் இடம்பெற்றபோது எடுக்கப்பட்ட படம் இது. ஈழத் தமிழர்களின் மரபுரிமைகள் கொழும்பை மையப்படுத்திய தொல்பொருள் ஆராட்சித் திணைக்களத்தினால் திட்டமிட்டு புறக்கணிக்கப்படும் நிலையில், இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க பிரதேசங்களை ஈழத் தமிழர்கள் ஒவ்வொருவரும் பாதுகாக்க முற்பட வேண்டுமென பிரதேச மக்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

எனவே ஒட்டிசுட்டானில் அமைந்துள்ள வாவெட்டி மலையானது தமிழர்களின் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டிய வரலாற்றுச் சின்னங்களில் ஒன்றெனக் குறிப்பிட்ட சத்தியசீலன் தமிழ் மன்னர்களின் ஆட்சிக் காலம் முதல் 2009 ஆம் ஆண்டு வரை சிறப்பாக பேணிப் பாதுகாக்கப்பட்டு வந்ததாக சுட்டிக்காட்டினார்.

வாவெட்டி மலையில் இரண்டு கல் அகழும் தொழிற்சாலைகள் நிறுவப்பட்டு பெருமளவில் அகழ்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ஒரு வருடத்தில் 600 கியூப் கல் அகழ்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும் தற்போது மூவாயிரம் கியூப் கல் அகழப்படுவதாக விசனம் வெளியிட்டார்.

இலங்கைத் தொல்பொருள் திணைக்களத்தினால் அடையாளப்படுத்தப்பட்ட இடங்களில் ஒன்றாக வாவெட்டி மலை காணப்படுகின்றது. ஆனால் தொல்பொருள் திணைக்களம் இதனைப் பாதுகாக்கக் தவறிவருவதாக அவர் குற்றம் சுமத்தினார்.

தமிழர்களுடைய மரபுரிமைகளை அழிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தொல்பொருள் திணைக்களம் செயற்படுகின்றதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக கூர்மை செய்தித் தளத்திற்கு அவர் குறிப்பிட்டார்.

நாளொன்றுக்கு அதிகளவான கனரக வாகனங்கள் குறித்த பகுதிக்கு வந்து செல்வதாகவும் இதனைத் தடுத்து நிறுத்துவதற்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் விரைவாக நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழர் பாரம்பரிய மரபுரிமைகளை அழிக்கும் இலங்கை ஒற்றையாட்சி அரசின் நடவடிக்கைக்கு வாவெட்டி மலையும் இலக்காகி விடும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பில் உள்ள இரண்டு தனியார் நிறுவனங்கள் கொழும்பு நிர்வாகத்திடம் அனுமதியைப் பெற்று இலங்கைப் பொலிஸாரின் ஒத்துழைப்புடன் கருங்கற்களை அகழந்தெடுத்து கொழும்புக்கு ஏற்றுவதாகப் பிரதேச மக்கள் கூறுகின்றனர்

ஆயிரத்து எண்ணுாறு ஆண்டுகளுக்கு முன்னர் வன்னியை ஆட்சி செய்த தமிழ் மன்னர்கள் இந்த ஆலயத்தை உருவாகியிருந்ததாக வரலாற்று ஆதாரங்கள் உள்ளதென பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.