வடமாகாணத்தின்

வவுனியாவில் தங்கவைக்கப்பட்டிருந்த வெளிநாட்டு அகதிகள் ஒரு தொகுதியினர் சுயவிருப்பில் வெளியேற்றம்

பலர் தொடர்ந்தும் வவுனியாவில் தஞ்சம்
பதிப்பு: 2019 ஜூலை 27 13:39
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஜூலை 27 23:25
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#Vavuniya
#AfghanRefugees
#Negombo
#Eastersundayattack
#lka
#srilanka
இலங்கையின் தலைநகர் கொழும்பின் புறநகர்ப் பகுதியான நீர்கொழும்பில் தங்கியிருந்த நிலையில் கடந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலை அடுத்து வவுனியா பூந்தோட்டம் நலன்புரி முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் அகதிகளின் ஒரு தொகுதியினர் மீண்டும் நீர்கொழும்பு நலன்புரி முகாமுக்கு திரும்புவதாக புனர்வாழ்வு நிலையம் தெரிவித்துள்ளது. பல்வேறு சர்ச்சைகள் மற்றும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் தமிழர் தாயகமான வடமாகாணத்தில் இலங்கை அரசாங்கத்தினால் ஒரு சில தமிழ் அரசியல் பிரதிநிதிகளின் ஆதரவுடன் குறித்த வெளிநாட்டு அகதிகள் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
 
பூந்தோட்டம் அகதி முகாமில் சுமார் நூற்றுப்பதின்மூன்று பேர் தங்க வைக்கப்பட்டிருந்ததாகவும் இவர்களில் வவுனியாவிலிருந்து நீர்கொழும்பு முகாமிற்கு இருபது பேர் தமது சுயவிருப்பின் காரணமாக சென்றுள்ளதாகவும் புனர்வாழ்வு நிலையம் குறிப்பிட்டுள்ளது.

தற்போது பதினைந்து பேர் பூந்தோட்டம் நலன்புரி நிலையத்திலிருந்து நீர்கொழும்பிற்கு செல்ல விரும்பம் தெரிவித்துள்ள நிலையில் பூந்தோட்டம் நலன்புரி நிலையத்தில் இருந்து நேற்று முந்தினம் ஐந்து பேரும், நேற்று வெள்ளிக்கிழமை இரவு ஒருவரும் சென்றுள்ளனர் என்றும் இவர்களை விட மேலும் ஒன்பது பேர் செல்வதற்கு விருப்பம் தெரிவித்துள்ள போதிலும் அவர்களுக்கான அனுமதி இன்னும் கிடைக்கவில்லை எனவும் தற்போது எண்பத்து ஏழு பேர் குறித்த முகாமில் இருப்பதாகவும் புனர்வாழ்வு நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பல்வேறு காரணங்களின் அடிப்படையில் ஐ.நா அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயத்தின் உதவியோடு இலங்கையில் அகதிகளாகத் தஞ்சமடைந்து நீர்கொழும்பில் குடியமர்த்தப்பட்டிருந்த பாகிஸ்தான், பங்களாதேஷ் நாடுகளைச் சேர்ந்த ஆயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்டோர் தற்கொலைத் தாக்குதல்களுக்கு உதவியளித்திருக்கலாமோ என்ற சந்தேகத்தில் அவர்களை வெளியேற்றுமாறு கோரி நீர்கொழும்பில் சிங்கள மக்கள் பெரும் அழுத்தங்களைக் கொடுத்து வந்தனர்.

இதனை அடுத்து குறித்த அகதிகள் வடமாகாணத்தில் குடியமர்த்தப்பட்டிருந்த நிலையில் அவர்கள் மீண்டும் நீர்கொழும்புக்கு தமது சுயவிருப்பத்தின் அடிப்படையில் செல்வதாக கொழும்பில் உள்ள ஐ.நா அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயத் தகவல்கள் கூறுகின்றன.