வடக்கு - கிழக்கு மாகாணங்களில்

காணாமல்போனோர் அலுவலகத்தை ஏற்க முடியாது - சர்வதேச நீதிக்கு வலியுறுத்தல்

நீதி வழங்கலில் ஏற்படும் தாமதங்கள் உறவுகளைத் தேடுவோரின் மரணத்திற்கு அடிப்படையாக அமையும்
பதிப்பு: 2019 ஜூலை 29 12:48
புலம்: முல்லைத்தீவு, ஈழம்
புதுப்பிப்பு: ஜூலை 29 16:41
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#srilanka
#slomp
#tamils
#lastwar
#lka
#relationsofmissingpersons
#mullaituvu
#northandeast
இலங்கையில் நடத்தப்பட்ட தமிழின அழிப்புப் போரின் போதும் அதற்குப் பின்னரான காலங்களிலும் அப்போதிருந்த சிங்கள அரச தலைவர்களின் உத்தரவுக்கு அமைவாக இலங்கை இராணுவத்தினராலும் அவர்களுடன் இணைந்து இயங்கிய ஒட்டுக்குழுக்களாலும் கடத்தப்பட்டும் கையளிக்கப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்டுள்ளவர்களின் உறவினர்களில் 38 பேர் தமது போராட்டத்துக்கு எந்தவித அடிப்படைத் தீர்வுகளையும் காணாமலேயே உயிரிழந்துள்ளதாக, தமிழர் தாயகமான வடக்கு - கிழக்கில் உணவுத்தவிர்ப்புடன் கூடிய தொடர் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் அமைப்பு விசனம் வெளியிட்டுள்ளது.
 
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளவர்களைத் தேடி அவர்களது உறவினர்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் தொடர் போராட்டம் இரண்டு வருடங்களை அண்மிக்கவுள்ள நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுவந்த முப்பத்து எட்டுப் பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். கடந்த வாரம் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த தாயார் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், இலங்கை அரசினால் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் பொய்த்துப் போயுள்ள நிலையில், காணாமல் ஆக்கப்பட்டோரைத் தேடிவரும் உறவுகள் தொடர்ச்சியாக உயிரிழந்துவரும் நிலையில் தமது கோரிக்கைக்குத் தீர்வை வலியுறுத்தி வடக்குக் கிழக்கைச் சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் அமைப்பு கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள கண்டன அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

புதுக்குடியிருப்பு - இரணைப்பாலையைச் சேர்ந்த திருமதி செபமாலைமுத்து திரேசம்மா 24.07.2009 அன்று மாரடைப்புக் காரணமாக உயிரிழந்தார். இவரது மகனான செபமாலைமுத்து ஜெயபிரகாஸ் என்பவர் 01.07.2008 அன்று இலங்கைக் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் கடந்த 11 வருடங்களாகத் தனது மகனைத் தேடித் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு உடல், உள ரீதியாக பாதிக்கப்பட்டு 24.07.2019 அன்று மாரடைப்பால் உயிரிழந்துள்ள அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும், அவருடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டுவரும் முல்லைத்தீவு வலிந்து காணாமலாக்கப்பட்டுள்ளவர்களின் உறவினர்களுக்கும் வடக்கு - கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளவர்களின் உறவினர்களின் அமைப்பின் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவிப்பதுடன் அவரது மகனை உறவாகக் கொண்டு அவருக்கான நீதியைப் பெற்றுக்கொடுக்க உத்வேகத்துடன் போராடுவோம் என்பதை உறுதியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.

அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த கனகரத்தினம் காந்தமலர், சபாரத்தினம் மனோன்மணி, தெய்வேந்திரன் இந்திரா, நாகராசா சிவமணி, சாமித்தம்பி திரவியம், திருகோணமலையைச் சேர்ந்த சுந்தரம்பிள்ளை அருந்தவம், தவரட்ணம் பத்மாவதி, ராமன் கமலம், வீரகத்தி அமிர்தலிங்கம், சொக்கன் பரமேஸ்வரி, சுந்தரம் லெட்சுமிப்பிள்ளை, நாகராசா சிவசோதி, மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த பரமசிவம் தெய்வஈஸ்வரி, மகேந்திரன் உதயராணி, லவநீதன் இளவரசி, தம்பிமுத்து அமரசிங்கம், அழகிப்போடி சந்திரசேகரம், சந்திரகேசரம் ஞானசௌந்தரி, யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த மாசிலாமணி புஸ்பராணி, கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த கனகரத்தினம் மகேஸ்வரி, பாவிலு சந்தியோகு மரியான் சரோரூபன் குரூஸ், வைத்தியலிங்கம் யோகரட்ணம், ஈஸ்வரன் உருத்திராதேவி, துரைசிங்கம் ஈஸ்வரி, சிதம்பரப்பிள்ளை யோகராசா மற்றும் அரசியல் கைதியான தனது கணவனை விடுதலை செய்யக்கோரி எம்முடன் இணைந்து போராடிய ஆனந்தசுதாகர் யோகராணி, மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த ஜசிந்தா பீரிஸ், வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த கந்தையா அரியரத்தினம், அரியதாஸ் புவனேஸ்வரி, முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த அன்ரன் அல்பிரட், செபநாயகம் மரியமலர், செபஸ்ரியான்பிள்ளை ஆரோக்கியநாதன், ச.விஜயலட்சுமி, கோணமலை பொன்னம்பலம், வேலு சரஸ்வதி, செபமாலைமுத்து திரேசம்மா ஆகியோரின் (இங்கு வழங்கப்பட்ட மரணமானவர்களின் விபரங்கள் எமது அமைப்பில் பதிவுசெய்யப்பட்ட தரவுகள் மட்டுமே. எமது பதிவுகளுக்கு உட்படாதவர்களின் எண்ணிக்கை இங்கு குறிப்பிடப்பட்டதை விட அதிகமாக இருக்கும் என எண்ணுகின்றோம்) மரணத்துடன், எமது உறவுகளை மீட்பதற்காகப் பேராடி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ள நிலையிலும் இலங்கை சிங்கள அரசாங்கமோ சர்வதேச சமூகமோ எமக்கான நீதியை விரைவில் பெற்றுத்தருவதற்கு முயலாமையினை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

எமது போராட்டமானது எமது உறவுகளை மீட்டல், அவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அறிதல், நீதியைப் பெறல் என்பவற்றுடன் இனிவரும் காலங்களில் எமது சமூகத்திற்கு மட்டுமல்லாமல் மனித குலத்திற்கே இவ்வாறான பிரச்சனைகள் நிகழாதிருக்கவேயாகும். ஆயினும் எமது போராட்டமானது மிகக் கடினமானது. ஏனெனில் எமக்கான நீதியைப் பக்கச்சார்பற்று வழங்கக்கூடிய சர்வதேச பொறிமுறையைக் கட்டமைக்கவும் நீதியைப் பெற்றுக்கொள்ளவும் கடுமையாகப் போராட வேண்டிய நிலை காணப்படுகின்றது.

மனித குலத்திற்கான நீதியானது, நபர்களின் எண்ணிக்கை சார்ந்தோ, பாதிக்கப்பட்டவர்களிடம் உள்ள வளங்கள் சார்ந்தோ அல்லது நீதி வழங்குனர்கள் மற்றும் நீதி வழங்குனர்களின் பங்காளிகளின் தேவையின் அடிப்படையிலோ அமையுமெனின் அதன் பெயர் நீதியன்று. ஆயினும் இன்றைய காலத்தில் உள்நாட்டு மற்றும் சர்வதேச நீதிப் பொறிமுறைகள் மேற்கூறப்பட்டதன் அடிப்படையில் இடம்பெறுவதாக நாம் உணர்ந்ததன் விளைவாக, உளச்சோர்வுக்கும் நோய்களுக்கும் உள்ளாகி மரணத்தைத் தழுவிக்கொண்டிருக்கின்றோம்.

2004 இல் சந்திரிக்கா அம்மையாரால் உருவாக்கப்பட்ட அதிபர் செயலக ஆணைக்குழுக்களாலோ, 2013 இல் மகிந்த ராஜபக்சவினால் உருவாக்கப்பட்ட பரணகம ஆணைக்குழுவினாலோ, தற்போதைய ரணில் அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட காணாமல் போனோருக்கான அலுவலகம், சிங்கள சார்புநிலை உள்ளக நீதி நிறுவனங்கள் ஆகியன எமக்கான நீதியைப் பெற்றுக்கொடுக்கவில்லை. பெற்றுக்கொடுக்கப்போவதுமில்லை என்பதுடன் காலதாமதங்கள் ஊடாக உறவுகளைத் தேடுபவர்களை உடல், உள ரீதியாக பலவீனப்டுத்தி உயிரிழக்கவும் காரணமாக உள்ளன. அரசியல் பிரிதிநிதிகளின் செயற்பாடுகளானது வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களது எதிர்பார்ப்புக்களை நிறைவுசெய்யும் வகையில் அல்லாது அரசியல் நலன்களுக்காக எமது பிரச்சனைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மாறாக அவர்கள் பாரிய அழுத்தங்களை அரசாங்கத்தின் மீது பிரயோகித்து சர்வதேசத்தின் பங்களிப்புடனான நீதிப்பொறிமுறையை உபயோகிக்க வேண்டும்.

மேலும் உள்ளுர் மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்கள் அரசாங்கத்தின் பிரதிநிதிகள் போன்று குறைகள் நிறைந்த காணாமலாக்கப்பட்டோர் அலுவலகத்தினை ஏற்றுக்கொள்ளுமாறு எம்மீது அழுத்தம் வழங்குவதனை நிறுத்தி, எமக்கான நீதி விரைவில் கிடைக்கப்பெறுவதற்கு அரசாங்கத்திற்கு அழுத்தமும் ஆலோசனையும் வழங்க வேண்டும்.

இவற்றில் ஏற்படும் தாமதங்களால் நாம் நேரடியாக சர்வதேச விசாரணையைக் கோருகின்றோம். ஆயினும் சர்வதேச நிறுவனங்கள் மீதான நம்பிக்கைகளைக் குறைக்கும் வகையில் அவர்களாலும் காலதாமதம் செய்யப்படுவதோடு, நீதி வழங்கலில் அவர்களின் பங்களிப்பு மற்றும் இலங்கை சிங்கள அரசாங்கம் மீதான அழுத்தம் போதாதுள்ளதாகக் கருதுகின்றோம். ஆயினும் மக்கள் மயப்படுத்தல் ஊடாக எமது போராட்டம் வலுப்பெறுவதற்கும் அதனூடாக உறவுகளை மீட்கவும் விரைவாக நீதியைப் பெறமுடியுமெனக் கருதுகின்றோம்.

நீதி வழங்கலில் ஏற்படும் தாமதங்கள் மேலும் உறவுகளைத் தேடும் உறவுகளின் மரணத்திற்கு அடிப்படையாக அமையும். அதன் விளைவுகளும் புறக்கணிப்பும் எமது இனத்தின் எதிர்கால சந்ததியின் அகிம்சை மீதான நம்பிக்கையைக் கேள்விக்குறியாக்கி பல பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும். இந்நிலை உருவாகாதிருக்க சர்வதேச சமூகத்தின் பிரசன்னத்தினூடாக விரைவான நீதிப்பொறிமுறை அமைக்கப்பட்டு எமக்கான நீதி வழங்கப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றோம் என வடக்கு - கிழக்கு மாகாணங்களின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களது சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.