வடமாகாணம் - கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி்க் குழுக் கூட்டத்தில்

கொழும்பு நிர்வாகத்தின் தலையீடுகளைத் தவிர்க்குமாறு தீர்மானம்

இலங்கை இராணுவம் காணிகளைக் கையளிக்க வேண்டுமெனவும் வலியுறுத்தல்
பதிப்பு: 2019 ஜூலை 29 23:13
புலம்: கிளிநொச்சி. ஈழம்
புதுப்பிப்பு: செப். 01 23:22
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#Kilinochchi
#Poonakary
#tamils
#lks
#Srilanka
வடமாகாண அரச அதிகாரிகள் மத்தியில் கொழும்பு நிர்வாகம் மேற்கொண்டு வரும் தலையீடுகளைத் தவிர்க்க வேண்டுமெனக் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் ஆகியோரின் இணைத் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா கிளிநொச்சி அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் உள்ளிட்ட வடமாகாண அரச அதிகாரிகள் பலரும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். இதன்போதே இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அதிகாரியொருவர் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார்.
 
கிளிநொச்சி - கௌதாரிமுனைப் பிரதேசத்தில் சட்டத்திற்கு முரணாக மேற்கொள்ளப்பட்டு வரும் மண் அகழ்வுக்கு இலங்கைப் பொலிஸார் ஒத்துழைப்பு வழங்குகின்றமை தொடர்பாக அதிகாரிகள் எடுத்துக் கூறியிருந்தனர்.

மண் அகழ்வை மேற்கொள்ளச் சட்டரீதியாக அனுமதி வழங்கப்பட வேண்டுமெனவும் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. கொழும்பை மையமாகக் கொண்ட நிறுவனம் ஒன்றினால் கிளிநொச்சி - உருத்திரபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டு வரும் தொழில்நுட்ப ரீதியான கோபுரங்கள் மக்களுக்கு ஆபத்தானவை என்றும் பிரதேச சபைகளிடம் அனுமதிபெறாமல் தொழில்நுட்பக் கோபுரங்கள் அமைக்கப்படுவதாகவும் பிரதேச சபைகளின் தவிசாளர்கள் கூட்டத்தில் விசனம் தெரிவித்தனர்.

கிளிநொச்சி
ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் வடமாகாண அரச உயர் அதிகாரிகள், இலங்கைப் படை அதிகாரிகள், இலங்கைப் பொலிஸார் ஆகியோர் கலந்துகொள்ளும்போது எடுக்கப்பட்ட படம் இது. கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற கூட்டத்தில் தமிழரசுக் கட்சியின் ஆட்சியில் உள்ள பிரதேச சபைகளின் தவிசாளர்கள், உறுப்பினர்கள் ஆகியோரும் பங்குபற்றியிருந்தனர். சிவில் நடவடிக்கைகளில் இலங்கை இராணுவம் தலையிடுகின்றமை குறித்தும் கூட்டத்தில் விசனம் தெரிவிக்கப்பட்டதாகக் கூர்மைச் செய்தியாளர் கூறுகின்றார்.
right photo
அதேவேளை பேருந்து நிலையம், விளையாட்டு மைதானம், பூநகரிக் குளம், மாவட்டக் கலாசார மண்டபம், பொதுநூலகம், ஏ-9 சமாந்தர வீதி, பூநகரிக்கான குடிநீர் போன்ற பல திட்டங்கள் இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், ஆனாலும் அந்தத் திட்டங்கள் இதுவரை பூர்த்தியடையவில்லை எனவும் அரச அதிபர் கூட்டத்தில் தனது ஆதங்கத்தை வெளியிட்டார்.

கிளிநொச்சி கரைச்சிப் பிரதேச சபைக்குச் சொந்தமான நூலகக் காணியில் உள்ள இலங்கைப் படையினர் வெளியேறி காணியைக் கையளிக்குமாறு பிரதேச சபைத் தவிசாளர் அ.வேழமாலிகிதன் கூட்டத்தில் வேண்டுகோள் விடுத்தார்.

குறித்த காணியைக் கையளிக்க முடியுமெனக் கூட்டத்தில் கலந்துகொண்ட இலங்கைப் படையின் கிளிநொச்சிக் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் ரவிப்பிரிய கூறியுள்ளார். வட்டக்கச்சி விவசாயப் பண்ணை மற்றும் விவசாயப் பாடசாலைக் காணியை இலங்கைப் படையினர் விடுவிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கம் கிளிநொச்சியில் மேற்கொள்ளும் திட்டங்களுக்குத் தமிழ் மொழியில் பெயர் வைக்கப்பட வேண்டுமெனவும் சிங்கள மொழியிலான பெயர்களைத் தவிர்க்குமாறும் கூட்டத்தில் கலந்துகொண்ட அதிகாரிகள் கோரிக்கை விடுத்தனர்.

தமிழ் மொழியிலேயே பெயர்கள் வைப்பதெனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஆனால் இந்தத் தீர்மானங்கள், பிரேரணைகள் அனைத்தும் சட்டவலுவற்ற கிளிநொச்சி மாவட்டச் செயலக அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளதாகக் கிளிநொச்சிப் பிராந்தியச் செய்தியாளர் மு.தமிழ்ச்செல்வன் தனது முகநூல்ப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

முன்னரும் இப்படிப் பல தீர்மானங்கள், பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அவை எதுவுமே நடைமுறைப்படுத்தப்படவில்லை என்ற தொனியில் அவரது முகநூல் பதிவு அமைந்துள்ளது.