முல்லைத்தீவு மாவட்டத்தின்

புதுக்குடியிருப்பு - சுதந்திரபுரம் கிராமசேவகரை இடமாற்றுமாறு மக்கள் வலியுறுத்தல்

பிரதேச செயலகத்தில் கோரிக்கை மனுக் கையளிப்பு
பதிப்பு: 2019 ஜூலை 30 23:10
புலம்: முல்லைத்தீவு, ஈழம்
புதுப்பிப்பு: ஓகஸ்ட் 06 03:01
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#Mullaituvu
#Puthukkudijiruppu
#lastwar
#GS
#tamils
#srilanka
#lka
போரினால் பெருமளவு அழிவுகளைச் சந்தித்த முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட சுதந்திரபுரம் கிராமசேவகரை அங்கிருந்து இடமாற்றுமாறு வலியுறுத்தி கிராம மக்கள் இணைந்து புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் மனு ஒன்றைக் கையளித்துள்ளனர். போரினால் பாதிக்கப்பட்டு கட்டம் கட்டமாக தமது வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்பிவரும் மக்களுக்கான சேவைகள் உரிய முறையில் வழங்கப்படுவதில்லை எனவும் கிராம அலுவலர் மீதான குற்றச்சாட்டுக்களையும் சுட்டிக்காட்டி சுதந்திரபுரம் கிராம மக்கள் ஒன்றிணைந்து புதுக்குடியிருப்பு பிரதேச செயலரிடம் தமது கோரிக்கை மனுவைக் கையளித்துள்ளதாக முல்லைத்தீவு செய்தியாளர் கூர்மை செய்தித்தளத்திற்கு குறிப்பிட்டார்.
 
சுதந்திரபுரம் கிராம அலுவலரது தன்னிச்சையான செயற்பாடு காரணமாக 38 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீட்டுத்திட்டக் கோரிக்கையை முன்வைத்து கிராம மக்களால் வழங்கப்பட்ட பத்திரங்கள் அடங்கிய கோவைகளும் தவறவிடப்பட்டுள்ளதாக சுதந்திரபுரம் கிராம சக்தித் திட்டத்தின் தலைவர் பூபதி கூர்மை செய்தித்தளத்திற்கு சுட்டிக்காட்டினர்.

எழுநூற்று இருபத்தாறு அங்கத்தவர்களைக் கொண்ட கிராம சக்தி திட்டத்தின் மூலம் குறித்த பகுதியில் பல செயற்பாடுகளை மேற்கொண்டபோதும் கிராம சேவகர் தமக்கு எந்தவித உதவியையும் வழங்குவதில்லை எனவும் தமது கருத்துக்களுக்கு மதிப்பளிப்பதில்லை எனவும் விசனம் வெளியிட்டார்.

இந்த விடயம் தொடர்பாக பிரதேச செயலரிடமும் ஏனையவர்களிடமும் முறையிட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அவர் தமது பகுதியில் உள்ள 38 குடும்பங்களுக்கு வீட்டுத்திட்டம் கூட வழங்கப்படவில்லை என ஆதங்கம் வெளியிட்டார்.

வீட்டுத்திட்டத்துக்கான விண்ணப்பங்கள் நிரப்பப்பட்டு தமக்கான கோவைகள் கிராம அலுவலரிடம் கையளிக்கப்பட்டபோதும் தற்போது அந்த விபரங்கள் எவையும் தம்மிடம் இல்லை எனவும் மீள அவற்றைக் கையளிக்குமாறும் கோரப்படுவதாக பூபதி கவலை வெளியிட்டதுடன் அந்தக் கோவைகளுக்கு என்ன நடந்தது என்பதனைத் தெரியப்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

சுதந்திரபுரம் கிராமத்தில் கடந்த இரண்டு மாதங்களில் இரு வீடுகள் தீக்கிரையாகியுள்ள நிலையில் அது தொடர்பாக கிராம அலுவலரிடம் முறையிட்டும் இதுவரை அவர் அதனை நேரடியாகச் சென்று பார்வையிடவில்லை எனவும் ஆதங்கம் வெளியிட்டார்.

இவை மாத்திரமன்றி கிராமத்தவர்களான முதியவர்களுடன் அவரது அணுகுமுறை பிழையான முறையில் காணப்படுவதாகவும் தன்னுடன் இணங்கிப் போகின்றவர்களுடன் செயற்பாடுகளை முன்னெடுப்பதாகவும் எனவே இதற்கு விரைவில் தீர்வு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தியே இருநூற்று இருபத்தாறு பேர் இணைந்து கையொப்பமிட்டு உதவி அரசாங்க அதிபர் பிரிவில் குறித்த மகஜரைக் கையளித்துள்ளதாக அவர் மேலும் குறிபிட்டார்.