2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர்

பௌத்தமயமாக்கப்படுகின்றது தமிழர் தாயகம் - தடுத்து நிறுத்தாவிட்டால் நல்லூரிலும் விகாரை- ரவிகரன் எச்சரிக்கை

வடக்கில் 131 விகாரைகள் - தொல்பொருள் திணைக்களத்தின் அறிக்கையில் தகவல்
பதிப்பு: 2019 ஓகஸ்ட் 01 23:38
புலம்: முல்லைத்தீவு, ஈழம்
புதுப்பிப்பு: ஓகஸ்ட் 01 23:41
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#Mullaituvu
#tamils
#srilanka
#lka
#lastwar
தமிழர் தாயகமாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள வளங்கள் உட்பட மக்களது பூர்வீக நிலங்களும் இலங்கையில் உள்ள பெரும்பான்மை இனத்தவர்களால் சூறையாடப்பட்டுவரும் நிலையில், இந்த நிலை இவ்வாறு தொடருமாக இருந்தால் தமிழர்களின் கலாசார நகரமான யாழ்ப்பாணத்தில் உள்ள நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் வெகு விரைவில் விகாரை அமைக்கப்படும் நிலை உருவாகும் என முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 
முல்லைத்தீவு - கொக்குளாயில் பௌத்தர்கள் இல்லாத இடத்தில் தமிழ் மக்களின் காணிகளை அடாத்தாகப் பறித்து இராணுவ உதவியுடன் பௌத்த பிக்கு விகாரை அமைத்துள்ளார் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம் என சுட்டிக்காட்டிய அவர், இது தடுத்து நிறுத்தப்படாவிட்டால் முல்லைத்தீவு மாவட்டம் விரைவில் பௌத்தமயமாகிவிடும் என கூர்மை செய்தித்தளத்திற்கு வழங்கிய நேர்காணலில் குறிப்பிட்டார்.

2009 ஆம் ஆண்டு போர் இடம்பெற்றபோதும் அதற்கு முன்னரும் முல்லைத்தீவின் எந்தவொரு இடத்திலும் விகாரைகள் இருக்கவில்லை எனவும், காலங்காலமாக தமக்குத் தெரிந்தவரை அல்லது அதற்கு முன்பும் விகாரைகள் இருந்ததாக தான் அறியவில்லை என்றும் தமது முன்னோர்களும் அதைத்தான் சொல்லிக்கொண்டிருக்கின்றார்கள் என்றும் ரவிகரன் கூர்மைக்கு சுட்டிக்காட்டினார்.

நல்லூரில் விகாரை உருவாகும் என்பதைக் கடந்த நூற்று இருபத்து மூன்றாவது வடக்கு மாகாணசபை அமர்வில் நான் முன்வைத்திருந்தேன். நாவற்குழியில் விகாரை அமைக்கப்பட்டுள்ளது, வலிகாமம் மேற்கில் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கடந்த 2015 ஆம் ஆண்டு மே மாதம் மூன்றாம் திகதி நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் விகாரைகள் குறித்து ஒரு எதிர்வுகூறல் அங்கு முன்வைக்கப்பட்டிருந்தது. இதன்போது யாழ்ப்பாண மாவட்டத்தில் ஆறு விகாரைகளும், கிளிநொச்சியில் மூன்று விகாரைகளும், மன்னார் மாவட்டத்தில் இருபது விகாரைகளும், வவுனியாவில் முப்பத்து ஐந்து விகாரைகளும், முல்லைத்தீவு மாவட்டத்தில் அறுபத்து ஐந்து விகாரைகளும் என்ற அடிப்படையில் வடக்கில் 131 விகாரைகள் தொல்பொருள் திணைக்களத்தின் அறிக்கையின் படி உள்ளதாகவும் அல்லது இருந்தததாகவும் அன்று சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

அன்று பௌத்த விகாரைகள் இல்லாத இடங்களில் விகாரைகள் அமைத்து வடமாகாணம் முழுவதையும் பௌத்த மயமாக்கும் செயற்பாடுகள் பற்றி கருத்து தெரிவிக்கப்பட்டிருந்தது.

அன்று நாடாளுமன்றத்தில் எதிர்வுகூறப்பட்ட விகாரைகள் என்று பார்க்கின்றபோது, கொக்குளாயில் ஒரு விகாரை, நாயாறு நீராவியடி ஏற்றத்தில் ஒரு விகாரை, வட்டுவாகலில் விகாரை, கேப்பாபுலவு, மாங்குளம் இவ்வாறாக தொடர்ச்சியாக விகாரைகளை அமைத்து வருகின்றனர். எந்தவொரு பௌத்த குடும்பங்களும் இல்லாத இடங்களில் அரச காணிகளில் அல்லது தனியார் காணிகளை அபகரித்து அல்லது மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அரச காணிகளில் மதத் திணிப்பு மேற்கொள்ளப்படுகின்றது.

நாவற்குழியில் விகாரை திறந்து வைக்கப்பட்டதில் அனைவருக்கும் தெரியக்கூடிய ஒரு விடயம், இன்று போர் நடக்கவில்லை அல்லது எதிர்ப்பு நடவடிக்கைக்கு ஆயுதம் தாங்கிய குழுக்கள் இல்லை இந்த நிலையில் இராணுவம் அங்கே குவிக்கப்பட்டு இராணுவத்தின் பாதுகாப்புடன் அந்த விகாரையைத் திறந்துவைத்துள்ளார்கள்.