யாழ்ப்பாணம் - நாவற்குழியில் 1996 ஆம் ஆண்டு 24 தமிழ் இளைஞர்கள் கொலை

மைத்திரியால் பதவி உயர்வு பெற்ற இராணுவ அதிகாரியின் வழக்கு - சட்டத்தரணிகளுக்கு அச்சுறுத்தல்

விசாரணையை இழுத்தடிப்பதாகக் குற்றச்சாட்டு
பதிப்பு: 2019 ஓகஸ்ட் 01 23:37
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: ஓகஸ்ட் 02 19:08
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#Mahinda
#Rajapaksa
#MaithripalaSirisena
#Jaffna
#tamils
#Srilanka
#lka
யாழ்ப்பாணம் - நாவற்குழியில் 1996 ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தினரால் 24 இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டிருந்தனர். அந்த 24 பேரில் மூன்று இளைஞர்கள் தொடர்பான ஆட்கொணர்வு மனு யாழ்ப்பாணம் - சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றத்தில் இன்று வியாழக்கிழமை எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது பாதிக்கப்பட்ட மூன்று இளைஞர்களின் உறவினர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகளான குமாரவடிவேல் குருபரன், எஸ்.சுபாசினி ஆகியோரை நீதிமன்ற வளாகத்தில் வைத்து இலங்கைப் புலனாய்வுப் பிரிவினர் படம் எடுத்துள்ளனர். இரகசியமாகப் புகைப்படம் எடுத்தவர்களை குருபரன் அடையாளம் க்ண்டுள்ளார்.
 
இந்த வழக்கு விசாரணையைத் தடுத்து நிறுத்த பல்வேறு அழுத்தங்கள் கொடுக்கப்பட்ட போதும் அண்மையில் குறித்த வழக்குத் தொடர்பான விசாரணைகளை சாவகச்சேரி நீதிவான் நீதிமன்று முன்னெடுப்பதற்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் கட்டளை பிறப்பித்திருந்தது.

இந்தப் 12 பேரில் ஒன்பது பேர் ஏற்கனவே 2002ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்திருந்தனர். ஆனால், அந்த மனுக்களின் விசாரணைகளை யாழ்ப்பாணத்தில் நடத்தக் கூடாதென, அப்போது யாழ் மாவட்டத் தளபதியாக இருந்த சரத் பொன்சேகா, 2003ஆம் ஆண்டு தாக்கல் செய்த மனுவை அடுத்து, அந்த வழக்கு அனுராதபுரத்திற்கு மாற்றப்பட்டிருந்தது.

குறித்த வழக்கை சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றம் விசாரிப்பதற்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் வழங்கிய கட்டளையைத் தள்ளுபடி செய்யக் கோரி இலங்கைச் சட்ட மா அதிபர் மேன்முறையீட்டு சிறப்பு மனு ஒன்றை இலங்கை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். ஆனால் இடைக்காலத் தடையுத்தரவின்றி அந்த மனு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தமிழர் தாயகப் பிரதேசங்களில் இலங்கை இராணுவத்தின் கட்டளை அதிகாரியாக 1996 ஆம் ஆண்டு செயற்பட்டு தமிழ் இளைஞர்கள் யுவதிகள் பலர் காணாமல் ஆக்கப்பட்டதற்கும் கொல்லப்பட்டமைக்கும் காரணமான மேஜர் ஜெனரல் துமிந்த கெப்பிட்டிவலன்ன இந்த வழக்கின் பிரதான எதிரியாவார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த ஆண்டு யூன் மாதம் இலங்கை இராணுவத்தின் காலாட் படையின் பணிப்பாளர் நாயகமாக பதவி உயர்வு வழங்கியிருந்தார்.

இலங்கைப் படையினரின் சிங்கப் படைப்பிரிவைச் சேர்ந்த துமிந்த கெப்பிட்டிவலன்ன, 1996ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் - நாவற்குழி முகாமின் பொறுப்பதிகாரியாகப் பதவி வகித்தபோது தமிழ் இளைஞர்கள் 24 பேர் கைது செய்யப்பட்டுப் பின்னர் காணாமல் ஆக்கப்பட்டிருந்தனர்.

அது தொடர்பான வழக்கில் இவர் முதலாவது எதிரியாக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தினால் அடையாளப்படுத்தப்பட்டிந்த நிலையிலேயே பதவி உயர்வு வழங்கப்பட்டிருந்தது.

மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் தமிழர் தாயகத்தில் போர் நடைபெற்றபோது, பிரதிப் பாதுகாப்பு அமைச்சராக பதவி வகித்திருந்த இலங்கையின் தற்போதை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் மேஜர் ஜெனரல் துமிந்த கெப்பிட்டிவலன்ன நெருங்கிய தொடர்பை பேணிவந்தார்.

இதன் காரணத்தினால் கடந்த மூன்று ஆண்டுகளில் பதவி உயர்வுகளைப் பெற்று இறுதியாக பூநகரியில் உள்ள 66 ஆவது டிவிசன் கட்டளை அதிகாரியாகவும், மேஜர் ஜெனரல் துமிந்த கெப்பிட்டிவலன்ன பணியாற்றித் தற்போது இலங்கையின் காலாட்படையின் பணிப்பாளராக பதவி உயர்வு பெற்றிருக்கிறார். இவர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் நெருங்கிய நண்பராகவும் உள்ளார்.

சரத் பொன்சேகா தற்போது ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினராகவும் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராகவும் பதவி வகிக்கின்றார்.

துமிந்த கெப்பிட்டிவலன்னவினால் யாழ் நாவற்குழியில் கைதுசெய்யப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்ட 24 இளைஞர்களில் 12 இளைஞர்களின் உறவினர்கள், 2017ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஒன்பதாம் திகதி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்தப் 12 பேரில் ஒன்பது பேர் ஏற்கனவே 2002ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்திருந்தனர். ஆனால், அந்த மனுக்களின் விசாரணைகளை யாழ்ப்பாணத்தில் நடத்தக் கூடாதென, அப்போது யாழ் மாவட்டத் தளபதியாக இருந்த சரத் பொன்சேகா, 2003ஆம் ஆண்டு தாக்கல் செய்த மனுவை அடுத்து, அந்த வழக்கு அனுராதபுரத்திற்கு மாற்றப்பட்டிருந்தது.

இதனால் வேறொரு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்கை இன்னுமொரு நீதிமன்றத்தில் விசாரிக்க முடியாதெனக் கூறி, 2017 ஆம் ஆண்டு தாக்கல் செய்த 12 பேரில் ஒன்பது பேரின் மனுக்களை அப்போது யாழ் நீதிபதியாக இருந்த எம். இளம்செழியன் தள்ளுபடி செய்திருந்தார்.

ஏனைய மூன்றுபேரின் மனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொண்டார். இந்த வழக்கின் முதலாவது எதிரியாக துமிந்த கெப்பிட்டிவலன்ன, இரண்டாவது எதிரியாக இராணுவத் தளபதி, மூன்றாவது எதிரியாக சட்ட மா அதிபர் ஆகியேர் குறிப்பிடப்பட்டிருந்தனர்.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இரண்டாம் ஆம் திகதி யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை இடம்பெற்றபோது. இலங்கைச் சட்டமா அதிபர் திணைக்கள மூத்த சட்டத்தரணிகள் இவர்கள் சாரபில் முன்னிலையாகியிருந்தனர்.

2008 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் எட்டாம் திகதி கொழும்பு கல்கிசையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க படுகொலையில் துமிந்த கெப்பிட்டிவலன்ன மறைமுகமாக உடந்தையாக இருந்தார் என்ற குற்றச்சாட்டை முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபஜ ராஜபக்ச முன்வைத்திருந்தார்.

இதனால் துமிந்த கெப்பிட்டிவலன்ன வெளிநாடு சென்றிருந்தார். பின்னர் 2015 ஆம் ஆண்டு மைத்திரி - ரணில் அரசாங்கம் ஆட்சியமைத்ததும் இலங்கைக்குத் திரும்பிய இவர், மீண்டும் இராணுவ சேவையில் இணைந்து கொண்டார்.

இலங்கை இராணுவத் தலைமையகத்தின் செயற்பாட்டுப் பணிப்பாளராக 2015 ஆம் ஆண்டு பதவி வகித்தார். 2017ஆம் ஆண்டு மே மாதம் மேஜர் ஜெனரலாக தரமுயர்த்தப்பட்டிருந்தார்.

2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈழத் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை யுத்தத்தில் இவருடைய பங்களிப்பு முக்கியமானதாக இருந்தது.

2015 ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலில், தமிழ் மக்கள் வாக்களித்ததால், மஹிந்த ராஜபக்சவை விட இரண்டு இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற மைத்திரிபால சிறிசேன, இன்று தமிழர் தாயகப் பிரதேசங்களில் இராணுவ செயற்பாடுகளுக்கு முன்னுரிமை வழங்குவதாக தமிழரசுக் கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் இலங்கை நாடாளுமன்றத்தில் ஏலவே குற்றம் சுமத்தியிருந்தார்.

இறுதிப் போரில் ஈடுபட்டு போர்க்குற்றச் செயலில் ஈடுபட்டவர்கள் என அடையாளம் காணப்பட்ட இலங்கைப் படை உயர் அதிகாரிகள் பலருக்கு ஏற்கனவே பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. வேறு சிலர் பதவி உயர்வு பெற்று வெளிநாடுகளிலும் பணியாற்றுகின்றனர்.

இந்த நிலையிலேயே சட்டத்தரணிகளான குருபரன், எஸ்.சுபாசினி ஆகியோருக்கு அச்சுறுத்தல் விடுக்கும் நோக்கில் படம் எடுக்கப்பட்டுள்ளதாகப் பலரும் கூறுகின்றனர்.