இலங்கை ஜனாதிபதித் தேர்தல்- கரு ஜயசூரிய விவகாரத்தினால் அதிருப்தியடைந்த

சஜித் பிரேமதாச மைத்திரியுடன் இணையும் சாத்தியம்!

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் பிளவுகள் அதிகரிப்பு - மகிந்த தரப்பு அமைதி
பதிப்பு: 2019 ஓகஸ்ட் 02 10:15
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஓகஸ்ட் 02 11:54
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#SajithPremadasa
#slpresidentelection
#RanilWickremesinghe
#UNP
#Srilanka
#lka
#tamils
இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் தலையீடுகள் அதிகரித்துள்ளதால் பிரதான சிங்கள அரசியல் கட்சிகளிடையே குழப்பங்கள், முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன. மகிந்த ராஜபக்சவை மையப்படுத்திய ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுன கட்சி ஏனைய சிறிய பத்துக் கட்சிகளுடன் கூட்டுச் சேர்ந்து எதிர்வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளர் ஒருவரை களமிறக்கத் தயாராகவுள்ளது. இந்த நிலையில் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி தமக்கு ஆதரவான கட்சிகளை இணைத்து ஐக்கிய தேசிய முன்னணி என்ற பெயரில் ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொள்ளவுள்ளது. புதிதாக உருவாக்கப்படவுள்ள முன்னணிக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினரும் சபாநாயகருமான கரு ஜயசூரிய தலைமைப் பொறுப்பை ஏற்கவுள்ளார்.
 
இது குறித்து கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று வியாழக்கிழமை அலரிமாளிகையில் சுமார் 45 நிமிடங்கள் கரு ஜயசூரியவோடு பேசியதாக கட்சித் தகவல்கள் கூறுகின்றன.

கரு ஜயசூரியவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க வேண்டுமென கட்சிக்குள் அழுத்தங்கள் அதிகரித்துமுள்ளன. ரணில் விக்கிரமசிங்கவும் அதனை விரும்புகிறார். இதனால் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவில் கட்சிக்குள் முரண்பாடுகள் அதிகரித்துள்ளன.

குறிப்பாக ஜனாதிபதி வேட்பாளராகத் தெரிவு செய்யப்படுவாரென ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டிருந்த கட்சியின் பிரதித் தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாச, கட்சியில் தன்னுடைய ஆதரவாளர்களுடன் வேறொரு அணியில் இணைந்து போட்டியிடவுள்ளதாகக் கட்சித் தகவல்கள் கூறுகின்றன.

கட்சியின் மூத்த தலைவரும் சபாநாயகருமான கரு ஜயசூரியவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிப்பதற்குக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட மூத்த உறுப்பினர்கள் பலர் முடிவு எடுத்துள்ளதாகச் செய்திகள் புதன்கிழமை இரவு வெளியானதையடுத்து சஜித் பிரேமதாச அதிருப்தியடைந்துள்ளார்.

ஏற்கனவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மையப்படுத்திய எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக சஜித் பிரேமதாசா நியமிக்கப்படலாமெனக் கூறப்பட்டிருந்தது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் சஜித் பிரேமதாசாவோடு அது பற்றி உரையாடியுமிருந்தார்.

ஆனாலும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்படக் கூடிய வாய்ப்புகள் காணப்பட்டதால் மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பை சஜித் பிரேமதாச நிராகரித்திருந்தார்.

எனினும் கட்சிக்குள் தற்போது ஏற்பட்டுள்ள முரண்பாடுகளினால் சஜித் பிரேமதாச மைத்திரிபால சிறிசேனவின் யோனையை ஏற்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மையப்படுத்திய எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராகக் கூடிய வாய்ப்புகள் உள்ளதாக கொழும்பு அரசியல் தகவல்கள் கூறுகின்றன.

மகிந்த ராஜபக்சவை மையப்படுத்திய ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனக் கட்சி பொருத்தமான ஒருவரை வேட்பாளராக நியமிக்க முடிவு செய்துள்ளது. இதனால் மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மையப்படுத்திய எதிர்க்கட்சிகள் சஜித் பிரேமதாசாவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கக் கூடிய வாய்புகள் உள்ளதாகக் கட்சித் தகவல்கள் கூறுகின்றன.

ஆகவே இம்முறை மூன்று பிரதான வேட்பாளர்கள் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடலாமென எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும் சஜித் பிரேமதாசவை ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக நிறுத்த வேண்டுமென ரணில் வி்க்கிரமசிங்கவுக்கு அழுத்தங்கள் அதிகரித்துள்ளன.

இதேவேளை இந்த முரண்பாடுகளை அடுத்து மைத்திரிபால சிறிசேனவை சஜித் பிரேமதாச சந்திக்கவுள்ளதாக கொழும்பு அரசியல் தகவல்கள் கூறுகின்றன. இந்த மாதம் நடுப்பகுதிக்குள் ஜனாதிபதி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட வேண்டும்.

இதனால் பிரதான அரசியல் கட்சிகள் தீவிரமாகச் செயற்பட்டு வருகின்றன. ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் டிசம்பர் மாதம் ஏழாம் திகதிக்கு முன்னர் நடைபெறும் என்று இலங்கைச் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.