அப்பாவிப் பொதுமக்கள் கொன்றொழிக்கப்பட்ட

வல்வைப் படுகொலையின் 30 ஆம் ஆண்டு நினைவேந்தல் வல்வெட்டித்துறையில் அனுட்டிப்பு

72 பொதுமக்களது படுகொலை - இதுவரை நீதி வழங்கப்படவில்லை
பதிப்பு: 2019 ஓகஸ்ட் 03 11:27
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: ஓகஸ்ட் 06 02:29
main photo main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#Jaffna
#Valvettituraimassacre
#1989_Valvettituraimassacre
#tamils
#srilanka
#lka
யாழ்ப்பாணம் - வல்வெட்டித்துறைப் பகுதியில் அப்பாவிப் பொதுமக்கள் 72 பேர் அநியாயமாகப் படுகொலை செய்யப்பட்ட வல்வைப் படுகொலையின் முப்பதாம் ஆண்டு நினைவேந்தல் நேற்று வெள்ளிக்கிழமை அனுட்டிக்கப்பட்டது. கடந்த 1989 ஆம் ஆண்டு ஆடி அமாவாசை தினத்தன்று இந்திய இராணுவத்தினரால் கொல்லப்பட்ட பொது மக்களை நினைவுகூர்ந்து வல்வெட்டித்துறைப் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில், வல்வெட்டித்துறை நகரில் நினைவேந்தல் நடைபெற்றது.
 
இதன்போது பொதுச்சுடர் ஏற்றப்பட்டு மலர் தூவி கொல்லப்பட்ட மக்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினர்கள் உட்பட பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்ததாக யாழ்ப்பாண செய்தியாளர் கூர்மை செய்தித்தளத்திற்கு சுட்டிக்காட்டினார்.

1989 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 2 ஆம் திகதி வல்வெட்டித்துறையின் ஊரிக்காடு, பொலிகண்டி இராணுவ முகாம்களிலிருந்து விடுதலைப்புலிகளை அழிக்கும் நோக்குடன் புறப்பட்ட இந்தியப் படையினர் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தியதுடன், இதன் பின்னான நாட்களில் வல்வெட்டித்துறையிலும் அதனைச் சூழவுள்ள பகுதிகளிலும் ஊரடங்குச் சட்டத்தினை பிரகடனப்படுத்தியிருந்தனர்.

இந்தியப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதலின்போது பொதுமக்கள் வெட்டியும், எரித்தும் கொல்லப்பட்டதுடன் பால் வேறுபாடின்றி 72 பேர் கொல்லப்பட்டதுடன், 100 பேர் காயமடைந்திருந்தனர். அத்துடன் 123 வீடுகள் முற்றாக எரிக்கப்பட்டதுடன், 45 கடைகள் வரை சூறையாடப்பட்டு தீயிடப்பட்டதாக இச்சம்பவத்தின்போது பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

இவை மாத்திரமன்றி வல்வெட்டித்துறை சனசமூக நிலையம் தீக்கிரையாக்கப்பட்டதுடன், நூலகத்தில் மாட்டி வைக்கப்பட்டிருந்த மகாத்மா காந்தி, நேரு, நேதாஜி, இந்திராகாந்தி போன்ற தலைவர்களின் படங்கள் நொருக்கப்பட்டு தீயிடப்பட்டதோடு, 176 மீன்பிடிப் படகுகளும் எரிக்கப்பட்டன.

தமிழ் மக்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதல்கள் மற்றும் கொலைச் சம்பவங்களுக்கு இதுவரை எவ்வித நீதியும் வழங்கப்படாததைப் போன்றே வல்வைப் படுகொலைக்கும் இதுவரை எவ்வித நீதியும் இல்லை.