வடமாகாணம்

கிளிநொச்சியில் கடும் வரட்சி- 7947 குடும்பங்கள் பாதிப்பு

நன்னீர்க் கிணறுகள் அமைந்துள்ள பூநகரி பழைய வைத்தியசாலை வளாகம் இராணுவக் கட்டுப்பாட்டில்
பதிப்பு: 2019 ஓகஸ்ட் 04 11:25
புலம்: கிளிநொச்சி, ஈழம்
புதுப்பிப்பு: ஓகஸ்ட் 06 02:14
main photo main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#Kilinochchi
#drought
#poonakary
#lastwar
#slmilitary
#srilanka
#lka
வடக்கு- கிழக்குப் பகுதிகளில் நிலவும் தொடர் வரட்சியினால் கிளிநொச்சி மாவட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நாற்பத்து நான்கு கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த ஏழாயிரத்து தொள்ளாயிரத்து நாற்பத்து ஏழு குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது. வரட்சியினால் கரைச்சி, கண்டாவளை, பூநகரி, பச்சிலைப்பள்ளி ஆகிய நான்கு பிரதேச செயலர் பிரிவுகளிலும் நாற்பத்து நான்கு கிராம அலுவலர் பிரிவைச் சேர்ந்த இருபத்து ஏழாயிரத்து ஐந்நூற்று அறுபத்து நான்கு பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.
 
கரைச்சிப் பிரதேச செயலர் பிரிவில் பத்துக் கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த ஐயாயிரத்து நானூற்று எழுபத்தொரு பேருக்கும் கண்டாவளைப் பிரதேச செயலர் பிரிவில் ஏழு கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த இரண்டாயிரத்து எண்பது பேருக்கும் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் பதினேழு கிராம அலுவலர் பிரிவுகளில் உள்ள ஏழாயிரத்து தொள்ளாயிரத்து எண்பத்து மூன்று பேருக்கும் பச்சிலைப்பள்ளிப் பிரதேச செயலர் பிரிவில் எட்டுக் கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த ஆயிரத்து நாணூற்று எழுபத்திரண்டு பேருக்கும் குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குறிப்பிட்ட அரசாங்க அதிபர் கடந்த இருபத்து நான்காம் திகதி வறட்சி தொடர்பான நடவடிக்கைகளுக்காக அனர்த்த முகாமைத்துவ அமைச்சினால் 1.6 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை 1964 ஆம் ஆண்டு ஏற்பட்ட அனர்த்தத்திற்கு பின்னர், பூநகரி வடக்கு பிரதேசத்திலுள்ள 12 ஆயிரத்து 500 ஏக்கர் விவசாய காணியில், கடலுக்கு அண்மித்துள்ள ஏழாயிரம் ஏக்கர் காணி, உவர் நீராக மாறியுள்ளது. எஞ்சிய காணிகளில் விளைச்சல் பற்றாக்குறையாக உள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

பூநகரிப் பிரதேசத்திற்கு உட்பட்ட ஞானிமடம், செட்டியகுறிச்சி, சித்தன்குறிச்சி, நல்லூர், ஆலங்கேணி போன்ற சகல பகுதிகளிலும் குடிநீருக்கு பாரிய தட்டுப்பாடு நிலவுகின்றது.

பிரதேச சபையினால் வேறு இடங்களிலிருந்து குடிநீர் கொண்டு வரப்படுகின்ற போதிலும் அது போதாமலுள்ளது. இதனால் பிரதேச மக்கள் பாரிய இடர்பாடுகளை எதிர்நோக்கி வருகின்றனர்.

இது தவிர பூநகரியில் உள்ள பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் குடிநீர் இன்மையால் நெருக்கடி நிலைமையை எதிர்கொண்டுள்ளனர்.

எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பிரச்சினைக்கு விரைவில் உரிய தீர்வைப் பெற்றுத்தர வேண்டும் என்பதே பிரதேச மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இதேவேளை நன்னீர்க் கிணறுகள் அமைந்துள்ள பூநகரி பழைய வைத்தியசாலை வளாகம் தொடர்ந்தும் இலங்கை இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலுள்ளது. இதனால் பூநகரி பிரதேச மருத்துவமனையில் அதிகரித்துள்ள நீர்ப்பற்றாக்குறையால் நோயாளர்களை பராமரிக்க முடியாதுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நன்னீர்க் கிணறுகள் ஒருங்கே அமைந்துள்ள பூநகரி பழைய வைத்தியசாலை தொடர்ந்தும் இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.