உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் மீண்டும்

இலங்கையில் தாக்குதல் நடத்தப்படலாம் - இலங்கை வாழ் அமெரிக்கர்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை

வழமையான அறிவுத்தல்தான் என்கிறார் அலெய்னா ஸ்டெப்ளிட்ஸ்
பதிப்பு: 2019 ஓகஸ்ட் 05 10:34
புலம்: கிளிநொச்சி, ஈழம்
புதுப்பிப்பு: ஓகஸ்ட் 06 02:20
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#usembassylk
#srilanka
#colombo
#lka
#eastersundayattack
இலங்கையில் கடந்த உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலை அடுத்து தற்போது நாடு வழமைக்குத் திரும்பியுள்ள நிலையில் இலங்கையின் பாதுகாப்பு தொடர்பில் அமெரிக்கத் தூதரகம் விடுத்த எச்சரிக்கை தமது நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்ட வழமையான அறிவுத்தல்தான் என்று இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலெய்னா ஸ்டெப்ளிட்ஸ் தனது ருவிட்டர் தளத்தின் ஊடாக தெரிவித்துள்ளார். இலங்கையில் மீண்டும் தாக்குதல் நடத்தப்படலாம் எனவும் கொழும்பில் உள்ள அமெரிக்க நாட்டவர்களை அவதானமாக இருக்குமாறும் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை அமெரிக்கத் தூதரகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் செய்தி வெளியிட்டிருந்தது.
 
எனினும் இலங்கையில் மீண்டுமொரு தாக்குதல் நடத்தப்படுவதற்கான வாய்ப்புக்கள் குறித்து இதுவரை தமக்கு எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என இராணுவப் பேச்சாளர் சுமித் அத்தபத்து தெரிவித்திருந்த நிலையில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

இலங்கையில் மீண்டும் தாக்குதல் நடத்தப்படலாம் எனவும் ஆகவே இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் அமெரிக்க நாட்டு எச்சரிக்கையுடன் இருக்குமாறும் கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் செய்தி வெளியிட்டிருந்தது.

இலங்கையிலுள்ள சுற்றுலாத்தளங்கள், போக்குவரத்து நிலையங்கள், சந்தைகள், வணிக வளாகங்கள், விடுதிகள், அரச அலுவலகங்கள், வழிபாட்டுத்தலங்கள், பூங்காக்கள், உணவகங்கள், கேளிக்கை விடுதிகள், பிரமாண்டமாக நடத்தப்படும் விளையாட்டுகள் மற்றும் கலாசார நிகழ்வுகள், விமான நிலையங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட பிரதான பகுதிகள் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு இலக்காகலாம் என அமெரிக்கா சுட்டிக்காட்டியிருந்தது.

இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலின்போது பங்களாதேஷ் பிரஜை ஒருவர், சீனர்கள் இருவர், பதினொரு இந்தியர்கள், டென்மார்க் பிரஜைகள் மூவர், ஜப்பான் பிரஜை ஒருவர், நெதர்லாந்து பிரஜை ஒருவர், போர்த்துக்கல் பிரஜை ஒருவர், சவுதி அரேபியர்கள் இருவர், ஸ்பைன் பிரஜைகள் இருவர், சுவிற்சர்லாந்து பிரஜை ஒருவர், துருக்கி பிரஜைகள் இருவர், பிரிட்டன் பிரஜைகள் ஆறு பேர், அமெரிக்கப் பிரஜை ஒருவர், அமெரிக்க பிரித்தானிய இரட்டைப் பிரஜா உரிமை கொண்ட இருவர், சுவிற்சர்லாந்து நெதர்லாந்து இரட்டைப் பிரஜா உரிமை கொண்ட ஒருவர், அவுஸ்திரேலிய இலங்கை இரட்டைப் பிரஜை உரிமை கொண்ட இருவர் என 42 பேர் தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.