உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பற்றிய வாக்குமூலம்

பாதுகாப்புச் சபைக் கூட்டத்துக்கு அழைப்படுவதில்லை - ரணில்

மைத்திரி மீது வெளிப்படையாகவே குற்றம் சுமத்தும் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம்
பதிப்பு: 2019 ஓகஸ்ட் 06 23:19
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஓகஸ்ட் 09 18:38
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#esterSundayattack
#slparliament
#RanilWickremesinghe
#RW_UNP
#MaithripalaS
#srilanka
#lka
இலங்கையில் ஏப்ரல் இருபத்தியொராம் திகதி உயிர்த்த ஞாயிறன்று நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல் தொடர்பான எந்தவொரு புலனாய்வுத் தகவல்களும் தனக்குக் கிடைக்கவில்லையென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இலங்கை நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு வழங்கிய வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குப் பின்னரான சூழலில் இலங்கைப் பாதுகாப்புச் சபைக் கூட்டத்திற்கு பிரதமர் என்ற முறையில் கூட தான் அழைக்கப்படுவதில்லை என்றும் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார். இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற தெரிவுக்குழு முன்னிலையில் ரணில் விக்கிரமசிங்க வாக்குமூலம் வழங்கினார். இந்த ஆண்டு பெப்ரவரி மாதத்தின் பின்னர் இலங்கைப் பாதுகாப்புச் சபைக் கூட்டம் நடைபெறவேயில்லையென்றும் ரணில் கூறினார்.
 
இலங்கையின் பாதுகாப்புத் தொடர்பாக கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் எதனையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனக்கு அறிவிப்பதில்லை எனவும் ஆனால் இலங்கைப் புலனாய்வுத் தகவல்கள் சட்டம் ஒழுங்கு அமைச்சினால் இரு வாரங்களுக்கு ஒருமுறை வழங்கப்படுவதாகவும் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.

ஐ.எஸ் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பின் கொள்கைகளை ஏற்று இலங்கை முஸ்லிம் இளைஞர்கள் பலர் சிரியாவுக்குச் சென்று பயிற்சி பெற்றமை தொடர்பாகவும் சிரியாவில் இலங்கை முஸ்லிம் இளைஞன் ஒருவர் கொல்லப்பட்டமை குறித்தும் தகவல்கள் ஏற்கனவே கிடைத்திருந்தன.

ஆனால் சிரியாவில் பயிற்சி பெற்ற முஸ்லிம் இளைஞர்கள் இலங்கையில் தாக்குதல் நடத்துவது பற்றிய புனாய்வு அறிக்கைகள் எதுவுமே கிடைக்கவில்லை என்று ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.

ஏப்ரல் ஒன்பதாம் ஆம் திகதி இந்தியப் புலனாய்வுப் பிரிவினரால் விடுக்கப்பட்ட எச்சரிக்கைத் தகவல், வழங்கப்படவில்லை. இலங்கைப் படையினருக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தல் எச்சரிக்கையும், பிரதமர் என்ற முறையில் தனது பாதுகாப்புப் பிரிவுக்கு வழங்கப்படவில்லையென அவர் கூறினார்.

ஏப்பரல் 21 ஆம் திகதி தாக்குதல் இடம்பெற்ற பின்னர்தான் விபரங்களை அறிந்து கொண்டதாக ரணில் விக்கிரமசிங்க கூறினார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தமது அரசாங்கத்தின் மீது இருந்த கோபமும் முரண்பாடுகளுமே உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களுக்குக் காரணம் என்ற தொனியில் ரணில் விக்கிரமசிங் கூறினார்.

இன்று வாக்குமூலம் வழங்கிய இலங்கைப் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேரட்ண மைத்திரிபால சிறிசேன மீது நேரடியாகவே குற்றம் சுமத்தினார்.

ரணில் விக்கிரமசிங்கவுடன் ஏற்பட்ட முரண்பாடுகளினால் பாதுகாப்புச் சபைக் கூட்டத்தை மைத்திரிபால சிறிசேன கூட்டவில்லையென்றும் குறிப்பிட்டார்.