வடமாகாணம் முல்லைத்தீவு

ஒட்டுசுட்டான் இளைஞன் மீது துப்பாக்கிச் சூடு- இராணுவத்துக்கு எதிராக மக்கள் கோசம்

சம்பவ இடத்திலிருந்து பதினைத்துக்கும் மேற்பட்ட துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளதாகத் தகவல்
பதிப்பு: 2019 ஓகஸ்ட் 08 12:16
புலம்: முல்லைத்தீவு, ஈழம்
புதுப்பிப்பு: ஓகஸ்ட் 09 18:17
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#Gunfire
#slarmy
#tamils
#mullaituvu
#srilanka
#lka
முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் அம்பகாமம் மம்மில் பிள்ளையார் ஆலயத்துக்கு அருகாமையில் டிப்பர் வாகனத்தில் மணல் ஏற்றிக் கொண்டிருந்த நால்வர் மீது நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இலங்கை இராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்த டிப்பர் வாகன சாரதி, மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மணல் ஏற்றியவர்கள் மீது அங்கு சென்ற நான்கு இராணுவத்தினர் தாக்குதல் நடத்த முற்பட்டபோது, மணல் ஏற்றியவர்களில் மூன்று பேர் தப்பியோடியதை அடுத்து வாகன சாரதியை நோக்கி இலங்கை இராணுவத்தினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
 
இதன்போது காயமடைந்த சாரதியைக் கைதுசெய்த இராணுவத்தினர், அவருடைய முகத்தில் கடுமையாகத் தாக்கியதோடு, முதுகுப் பகுதியில் துப்பாக்கியால் அடித்துக் காயப்படுத்தியுள்ளதாக பிரதேச மக்கள் கூர்மை செய்தித் தளத்திற்குத் தெரிவித்தனர்.

காயமடைந்த டிப்பர் வாகன சாரதியான சோரான்பற்று பளையைச் சேர்ந்த 30 வயதுடைய பேரம்பலம் கமலேஸ்வரன் மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட சத்தத்தைக் கேட்ட மக்கள் குறித்த பகுதியில் ஒன்றுகூடி அந்த இடத்தில் இராணுவத்தினர், பொலிஸார் ஆகியோரை அழைத்த போதிலும் தாக்குதல் நடத்திய இராணுவத்தினர் அந்த இடத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளதுடன், அவர்களை அந்த இடத்துக்குக் கொண்டு வருமாறு வலியுறுத்தி மக்கள் தொடர்ச்சியாக அந்த இடத்தில் நின்ற போதும் அவர்களை அந்த இடத்துக்கு இராணுவத்தினர் கொண்டு வர மறுத்ததுடன் பொலிசாரும் அவர்களைக் கைதுசெய்ய மறுத்திருந்தனர்.

தாக்குதல் நடத்திய இராணுவத்தினரைக் கைதுசெய்யுமாறு மக்கள் கோரிய போதும், இலங்கைப் பொலிசார் அவர்களைக் கைதுசெய்யாத நிலையில் பிரதேச மக்கள் மாங்குளம் பொலிஸ் நிலைய வாசலில் ஒன்றுகூடியதுடன் தாக்குதல் நடத்திய இராணுவத்தைக் கைதுசெய்யும் வரை அந்த இடத்திலிருந்து அகல மாட்டோம் எனக்கூறி நேற்று அதிகாலை 3.45 வரை அங்கு தங்கியிருந்தனர்.

இதன்போது அந்த இடத்துக்கு வந்த பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, இது தொடர்பாக நீதிமன்றத்தின் ஊடாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாகத் தெரிவித்ததுடன் மக்களை அங்கிருந்து செல்லுமாறும் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு நீதி பெற்றுத்தரப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து மக்கள் சம்பவ இடத்திலிருந்து கலைந்து சென்றதுடன் மாங்குளம் பொலிசார் மற்றும் பொலிஸ் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு அங்கிருந்து பதினைந்துக்கும் அதிகமான துப்பாக்கி ரவைகளை மீட்டுச் சென்றுள்ளனர்.