ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு - கிழக்கு தமிழ் பேசும் தாயக மக்கள் பிரதான இலக்கு

தமிழர்களின் வாக்குகளைப் பெற சஜித் முயற்சி - சந்திப்புகள் தீவிரம்

ஆனால் ஐக்கிய தேசியக் கட்சியில் நம்பிக்கையில்லையென பிரமுகர்கள் கூறியுள்ளனர்
பதிப்பு: 2019 ஓகஸ்ட் 08 23:16
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஓகஸ்ட் 09 16:30
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#sajithpremadasa
#RanilWickremesinghe
#KaruJayasuriya
#slpresidentelection
#tamils
#srilanka
#lka
தமிழர் தாயகம் வடமாகாணம் - முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களுக்குச் சென்ற அமைச்சர் சஜித் பிரேமதாச, அங்குள்ள இளைஞர்களுடன் உதைபந்தாட்டம் விளையாடியுள்ளார். தமிழ் மக்கள் ஜனாதிபதித் தேர்தலில் தனக்கு வாக்களிப்பார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். தமிழ் மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக ஐக்கிய தேசியக் கட்சி வடக்கு - கிழக்கு தாயகப் பகுதிகளில் வாழும் பிரமுகர்கள் வர்த்தகர்கள் மற்றும் பொது அமைப்புகள், சங்கங்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி வருகின்றது. ஆனால் கலந்துரையாடலுக்குச் செல்லும் பிரமுகர்கள் பலர் ஐக்கிய தேசியக் கட்சியின் கடந்தகால வரலாறுகளைப் பற்றிப் பேசுவதாகவே கூறப்படுகின்றது.
 
சிங்கள அரசியல் கட்சிகளை நம்புவதற்கு தமிழ் மக்கள் தயாராக இல்லையென மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் அமைச்சர் சஜித் பிரேமதாசவிடம் சந்திப்பொன்றில் கூறியதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களை இலக்குவைத்தே சஜித் பிரேமதாச செயற்பட்டு வருவதாக முல்லைத்தீவில் உள்ள பொது அமைப்பின் பிரதிநிதியொருவர் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்துள்ளார்.

ஈழத் தமிழர்களின் வாக்குகளை நம்பியே தன்னை வேட்பாளராக நியமிக்குமாறும் சஜித் பிரேமதாச ரணில் விக்கிரமசிங்கவிடம் வலியுறுத்தி வருவதாகவும் கட்சித் தகவல்கள் கூறுகின்றன.

ஆனால் ரணில் விக்கிரமசிங்கவுக்கு விசுவாசமாகச் செயற்பட்டு வரும் ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளா் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், கரு ஜயசூாிய வேட்பாளராக வருவதையே விரும்புவதாகவும் மற்றுமொரு தகவல் கூறுகின்றது.

இதேவேளை, வேட்பாளரைத் தெரிவு செய்ய ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய குழுவிலும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவிலும் வாக்கெடுப்பு நடத்துமாறு கட்சியின் பிரதித் தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாச கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரியுள்ளார்.

கட்சியின் மூத்த உறுப்பினர்களான சஜித், கரு ஜயசூரிய ஆகியோரிடையே ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக கடும் போட்டி நிலவுகின்றது. ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட கட்சியின் மூத்த உறுப்பினர்கள் பலர் கரு ஜயசூரியவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்குமாறு வலியுறுத்தி வருகின்றனர்.

கட்சியின் வேறு சில உறுப்பினர் சஜித் பிரேமதாசவை நியமிக்குமாறு வற்புறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், ரணில் விக்கிரமசிங்கவை திங்கட்கிழமை இரவு மூடிய அறையில் சந்தித்துப் பேசிய சஜித் பிரேமதாச. உறுப்பினர்களிடையே வாக்கெடுப்பு நடத்துமாறு கோரியுள்ளார்.

ஆனால் ரணில் விக்கிரமசிங்க அதற்கு இணக்கம் தெரிவிக்கவில்லை. எனினும் கட்சியில் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவாகவுள்ள உறுப்பினர்கள் பலர் வாக்கெடுப்பு நடத்துமாறு கோரி வருகின்றனர்.

வியாழக்கிழமை ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்த மூத்த உறுப்பினர்கள் சிலரும் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென வற்புறுத்தியுள்ளதாக கட்சித் தகவல்கள் கூறுகின்றன.

தற்போது சபாநாயகராகப் பதவி வகிக்கும் 78 வயதான கரு ஜயசூரிய வயதில் மூத்தவராக இருந்தாலும் கட்சியில் சஜித் பிரேமதாசவை விட இளையவர் என்று கட்சி உறுப்பினர்கள் பலர் கூறுகின்றனர். 1997 ஆம் ஆண்டு கொழும்பு மாநகர சபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற கரு ஜயசூரிய 1999 ஆம் ஆண்டு மேல் மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டு எதிர்க்கட்சித் தலைவராகவும் பதவி வகித்திருந்தார்.

பின்னர் 2000 ஆம் ஆண்டு இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஐக்கிய தேசியக் கட்சியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்திருந்தார்.

ரணில் விக்கிரமசிங்கவினால் ஐக்கிய தேசியக் கட்சியில் அறிமுகம் செய்யப்பட்டு 2006 ஆம் ஆண்டு 17 உறுப்பினர்களுடன் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து பிரிந்து சென்று மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் அமைச்சராகவும் பதவி வகித்திருந்தார். 2009 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்தார். கரு ஜயசூரிய பிரபல தொழில் அதிபர் என்பது குறிப்பிடத்தக்கது.