வடமாகாணம்

வீடமைப்புத் திட்டத்தில் சிங்கள மரபுரிமைகளுக்கு முதலிடம்

தமிழ் அடையாளங்கள் புறக்கணிப்பு - சிங்கள மொழிப் பெயர்கள் தமிழிலும் எழுதப்பட்டுள்ளன
பதிப்பு: 2019 ஓகஸ்ட் 10 16:03
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: செப். 09 22:39
main photo main photo main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#Mannar
#Housingscheme
#slpresidentelection
#tamils
#srilanka
#lka
வடக்குக் கிழக்குத் தாயகப் பிரதேசங்களில் அபிவிருத்தி என்ற பெயரில் இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுவரும் அபிவிருத்தித் திட்டங்களில் தமிழர் மரபுரிமைகள் புறக்கணிக்கப்பட்டு, சிங்கள மரபுரிமைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. அத்துடன் சிங்கள மொழியில் வைக்கப்பட்ட பெயர்கள் அப்படியே தமிழ் மொழியிலும் எழுதப்படுகின்றன. குறிப்பாக, வீடமைப்புத் துறை அமைச்சர் சஜித் பிரேமதாச மேற்கொண்டுவரும் வீடமைப்புத் திட்டங்களில் சிங்கள மரபுரிமைகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருகின்றன. முல்லைத்தீவு செல்வநகர் பிரதேசத்தில் ஏற்கனவே அமைக்கப்பட்ட வீடமைப்புத் திட்டத்தில் பௌத்த சிங்கள மரபுரிமைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுத் தமிழர் மரபுரிமைகள் வீடமைப்புத் திட்டத்தில் முற்றாகவே புறக்கணிக்கப்பட்டிருந்தன.
 
இந்த நிலையில், மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஜோசப்வாஸ் கிராமத்தில் மேற்கொள்ளப்பட்ட வீடமைப்புத் திட்டம் சிங்கள மரபுரிமைகளோடு சென்ற வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாணம் - சாவகச்சேரி மந்துவில் திருவேரபுரம், சங்கானை ஆகிய கிராமங்களிலும் இன்று சனிக்கிழமையும் அமைச்சர் சஜித் பிரேமதாச வீடுகளைக் கையளித்துள்ளார்.

Sajith
இலங்கை அரசாங்கத்தின் வீடமைப்புத்துறை அமைச்சினால் அமைக்கப்பட்டு வரும் கம்முதாவ செமட்ட செவன என்ற சிங்கள மொழியில் பெயரிடப்பட்ட வீடமைப்புத் திட்டத்தின் மற்றுமொரு பகுதி மன்னர் ஜோசப்வாஸ் புரம் நகரில் அமைக்கப்பட்டு மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. சிங்கள மொழிப் பெயர்கள் தமிழில் எழுதப்பட்டுள்ளதையும் சிங்கள மரபுரிமைகள் பொறிக்கப்பட்டுள்ளதையும் படத்தில் காணலாம். செல்வம் அடைக்கலநாதனும் நிற்கிறார். அமைச்சர் சஜித் பிரேமதாச 2015 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் இடம்பெற்ற இலங்கை ஒற்றையாட்சி அரசின் நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரங்களின்போது ஆயிரம் விகாரைகள் அமைக்கப்படும் எனக் கூறியிருந்தார். அத்தோடு சிங்கள பௌத்த மரபுரிமைகளுக்கே முக்கியத்துவம் வழங்கப்படும் எனவும் சொல்லியிருந்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்திலும் ஆயிரம் விகாரைகள் அமைக்கப்படுமெனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இவ்வாறானதொரு நிலையிலேயே இந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் கட்சியின் வேட்பாளராகக் களமிங்க முற்படும் சஜித் பிரேமதாச, வடக்குக் கிழக்குத் தாயகப் பகுதிகளுக்குப் பயணம் மேற்கொண்டு ஆதரவு கோருகிறார். இளைர்களோடு சேர்ந்து உதைப்பந்தாட்ட விளையாட்டுக்களிலும் ஈடுபடுகின்றார்.

கம்முதாவ செமட்ட செவன என்று பெயரிடப்பட்ட அந்த வீடமைப்புத் திட்டத் திறப்பு விழாக்களில் அமைச்சர் சஜித் பிரேமதாச பிரதம அதிதியாகவும் கலந்து கொண்டார். தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா, நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், இ.சரவணபவன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

இருநூற்று முப்பத்தொன்பதாவது மாதிரிக் கிராமமான ஜோசப்வாஸ் கிராமத்தில் 67 வீடுகளும், 230 ஆவது மாதிரிக் கிராமமான ஜோசப்புரம் மாதிரிக் கிராமத்தில் அமைக்கப்பட்ட 28 வீடுகள் உள்ளடங்களாக 95 வீடுகள் கையளிக்கப்பட்டுள்ளன.

சாவகச்சேரி - திருவேரபுரம் கிராமத்தில் இருபது வீடுகளும் சங்கானையில் 36 வீடுகளும் கையளிக்கப்பட்டுள்ளன. இந்தக் கிராமங்களில் சிங்கள பௌத்த மரபுரிமைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாக வீட்டைப் பெற்றுக் கொண்ட குடும்பஸ்தர் ஒருவர் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார்.

சிங்கள பௌத்த மக்கள் இல்லாத தமிழ் பேசும் மக்கள் பெரும்பான்மையாக வாழும் தாயகப் பிரதேசங்களில் அமைக்கப்படும் வீடமைப்பு மற்றும் பொதுக் கட்டடங்களில் தமிழர் மரபுரிமைகளுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும்.

Sajith Premadasa
வடக்கு-கிழக்குத் தாயகப் பகுதிகளில் பௌத்த சிங்கள மரபுரிமைகளை வீட்டுத் திட்டம் என்ற பெயரில் இலங்கை அரசாங்கம் திணித்து வருகிறது. கம்முதாவ செமட்ட செவன என்ற சிங்கள மொழியில் பெயரிடப்பட்டுள்ள வீடமைப்புத் திட்டத்தின் மற்றுமொரு பகுதியை யாழ் சாவகச்சேரி மந்துவில் திருவேரபுரம், சங்கானை ஆகிய கிராமங்களில் இன்று சனிக்கிழமை அமைச்சர் சஜித் பிரேமதாச கையளித்தார். தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் உள்ளிட்ட தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் பலர் படத்தி;ல் காணப்படுகின்றனர். தமிழர் பிரதேசங்களில் அமைக்கப்படும் வீடமைப்புத் திட்டங்களில் ஈழத் தமிழர்களின் மரபுரிமைகளுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டுமென மாவை சேனாதிராஜா இலங்கை நாடாளுமன்றத்தில் கூறியிருந்தார். ஆனால் இன்று இடம்பெற்ற நிகழ்வில் காணப்படும் பௌத்த சிங்கள மரபுரிமைச் சின்னங்கள் பொறிக்கப்பட்டுள்ளமை தொடர்பாக எதுவுமே பேசாது அமைதியாக இருந்ததாக மக்கள் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தனர்.
ஆனால் திட்டமிடப்பட்ட முறையில் சிங்கள பௌத்த மரபுரிமைகள் வேண்டுமென்றே திணிக்கப்படுவதாக மக்கள் கூறுகின்றனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதில் கவனம் செலுத்துவதில்லை என்றும் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

அமைச்சர்களான சஜித் பிரேமதாச சம்பிக்க ரணவக்க ஆகியோர் வீடமைப்பு மற்றும் மெகா சிற்றி அபிவிருத்தித் திட்டம் என்ற போர்வையில் வடக்கு - கிழக்குத் தாயகப் பகுதிகளில் சிங்கள மரபுரிமைகளைத் திணித்து வருவதாக வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஏலவே குற்றம் சுமத்தியிருந்தார்.

திருகோணமலை - கன்னியா வெந்நீருற்றுப் பிரதேசம், முல்லைத்தீவு நீராவியடிப் பிள்ளையார் ஆலயம் போன்ற இடங்களில் பௌத்த தாதுக் கோபுரங்கள், விகாரைகள் அமைக்கப்பட்டு சிங்கள மரபுரிமைகளாக அடையாளப்படுத்தும் திட்டங்களை எதிர்த்துக் கடந்த மாதம் பெரும் போராட்டங்கள் இடம்பெற்றிருந்தன.

ஆனாலும் அதைனப் பொருட்படுத்தாது யாழ்ப்பாணம் மன்னார் ஆகிய பிரதேசங்களில் கையளிக்கப்பட்ட வீடமைப்புத் திட்டங்களிலும் சிங்கள மரபுரிமைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளன.