வடமாகாணம்

மன்னார் - பேசாலை மீன்பிடித் துறைமுகம் எதிர்ப்பினால் கைவிடப்பட்டது

வளங்கள் சூறையாடப்படுமெனவும் கொழும்பின் ஆதிக்கம் ஏற்படுமெனவும் மீனவர்கள் அச்சம்
பதிப்பு: 2019 ஓகஸ்ட் 11 13:26
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: செப். 01 23:25
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#Mannar
#Pesalai
#fishingharbour
#tamils
#srilanka
#lka
மன்னார் மாவட்டம் பேசாலையில் நிர்மாணிக்கப்படவிருந்த மீன்பிடி துறைமுக நிர்மாணப் பணிகள் பிரதேச மக்களின் கடும் எதிர்ப்பினால் கைவிடப்பட்டுள்ளது. மன்னார் மாவட்டத்தில் அரசியல் செல்வாக்குள்ள சிலர், குறித்த மீன்பிடித் துறைமுகத்தை பேசாலையில் அமைப்பதற்குத் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டிருந்தனர். ஆனால் மீனவர்களின் ஒட்டுமொத்த எதிர்ப்புக் காரணமாக திட்டம் கைவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கைக் கடற்தொழில் அமைச்சு, பேசாலையில் சுமார் நான்காயிரம் கோடி ரூபா பெறுமதியில் மீன்பிடி இறங்குதுறையை அமைப்பதற்குக் கடந்த 2018 ஆம் ஆண்டு திட்டங்களை வகுத்திருந்தது. இதனையடுத்து இந்தத் திட்டத்திற்கான ஆரம்பகட்ட பணிகளை மேற்கொள்வது தொடர்பாக மன்னார் மாவட்ட செயலகத்தில் மீனவர்களும் அதிகாரிகளும் சந்தித்து உரையாடியிருந்தனர்.
 
ஆனாலும் மீனவர்கள் பேசாலை மீன்பிடித் துறைமுக நிர்மாணப்பணிகள் தொடர்பாக பலத்த ஆட்சேபனைகளைத் தெரிவித்திருந்தனர்.

எனினும் துறைமுகத்தைப் பேசாலையில் நிறுவுவதற்கு கொழும்பு உயர்மட்டத்திலிருந்து தொடர்ச்சியாகப் பிரயோகிக்கப்பட்ட அழுத்தங்கள் காரணமாக இலங்கைத் துறைமுக அபிவிருத்தி அதிகாரசபை, கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சு, கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்களம், இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனம் மற்றும் மன்னார் மாவட்டச் செயலக அதிகாரிகள் ஆகியோர் துறைமுகம் நிறுவுவதற்கான ஆரம்ப கட்ட பணிகளை மேற்கொண்டிருந்தனர்.

ஆனாலும் பேசாலை மற்றும் அதனைச் சூழவுள்ள மீனவக் கிராமங்களைச் சேர்ந்த மீனவர்களின் தொடர்ச்சியான ஒட்டுமொத்த எதிர்ப்பின் காரணமாக குறித்த முயற்சியும் கைவிடப்பட்டது.

குறித்த மீனபிடித் துறைமுக நிர்மாணப் பணிகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பேசாலை பகுதியில் பாரிய துறைமுகம் ஒன்று அமைக்கப்படும் பட்சத்தில் பேசாலை உட்பட முழு மன்னார் மாவட்டமும் அபிவிருத்தி அடைவதுடன் பொருளாதார நன்மைகளை மாவட்ட மக்கள் பெறக் கூடிய வாய்ப்புள்ளதாக அதிகாாிகளால் கூறப்பட்டது.

ஆனாலும் பேசாலை பகுதியில் பாரிய மீன்பிடித் துறைமுகம் ஒன்று அமைக்கப்படும் பட்சத்தில் பேசாலையும் முழு மன்னார்த் தீவும் இயற்கைப் பேரனர்த்தம் ஒன்றுக்கு முகம்கொடுக்கும் அபாயம் ஏற்படும் என மீனவர்கள் சுட்டிக்காட்டினர்.

அத்துடன் பேசாலை மற்றும் அதனைச் சூழவுள்ள தமிழ் மீனவர்கள் ஆண்டாண்டு காலமாக மேற்கொள்ளும் பாரம்பரியமான மீன்பிடி முறைமைகள் பெரும் அழிவுக்கு உட்படும். கடற்கேளிக்கைகள் மற்றும் கலாசார சீர்கேடுகள் பேசாலை தொடக்கம் தலைமன்னார் பியர் வரை உள்ள அனைத்துத் தமிழ்க் கிராமங்களையும் ஆக்கிரமிக்கும் அபாயம் ஏற்படும் என்றும் மீனவர்கள் குறிப்பிட்டனர்.

தென்னிலங்கையில் நீண்ட நாட்கள் தங்கியிருந்து ஆழ்கடலில் தொழிலில் ஈடுபடும் நவீன வசதிகள் கொண்ட பாரிய மீன்பிடிக் கலங்கள் பேசாலை இறங்கு துறையில் நிறுத்தப்படுவதால் சிறிய மீன்பிடி கலங்களை வைத்துள்ள பேசாலை மீனவர்கள் கடும் பாதிப்பை எதிர்கொள்வார்கள்.

இலங்கையின் வடமேற்கில் அமைந்துள்ள புத்தளம் இரனவிலவில் வாய்ஸ் ஒப் அமெரிக்கா நிறுவனத்தினால் நிறுவப்பட்டுள்ள வானொலிப் பரிவர்த்தனை நிலையத்தினால் அப்பகுதி மக்கள் பல்வேறு பாதிப்புகளை எதிர்கொண்டது போல திருகோணமலை சம்பூர் துறைமுகத்தினால் அப்பகுதி தமிழ் மக்கள் இடம்பெயர்ந்து பல்வேறு இன்னல்களுக்கு இன்றுவரை முகம்கொடுத்து வருவதுபோல பேசாலை மீன்பிடி துறைமுகத்தினால் பேசாலை மக்களும் பெரும் பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிடுமெனவும் மீனவர்கள் கூறியுள்ளனர்.

தென்னிலங்கை சிங்கள மீனவர்கள் பேசாலையில் முகாமிடுவதால் தேவையற்ற முரண்பாடுகளும் குழப்பங்களும் ஏற்படும். அத்துடன் பேசாலை மக்கள் பின்பற்றி வரும் கத்தோலிக்க மதவழிபாட்டு முறைகளுக்கு ஏதேனும் இடையூறு ஏற்படும் என்ற அச்சம் காரணமாகவே மீனவர்களும் பொதுமக்களும் மீன்பிடித் துறைமுகம் அமைப்பதற்குக் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளதாக மீனவர்கள் அதிகாரிகளிடம் கூறியுள்ளனர்.