இலங்கையில் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக

மாகாண சபைத் தேர்தல்களை நடத்த மைத்திரி உயர் நீதிமன்றத்திடம் வியாக்கியானம் கோரினார்

23 ஆம் திகதி பரிசீலனை - 30 ஆம் திகதி சட்ட விளக்கம் கையளிக்கப்படும் - நீதிமன்றப் பதிவாளர்
பதிப்பு: 2019 ஓகஸ்ட் 13 23:13
புலம்: மட்டக்களப்பு, ஈழம்
புதுப்பிப்பு: ஓகஸ்ட் 14 23:33
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#MaithripalaSirisena
#GotabayaRajapaksa
இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள நிலையில் அதற்கு முன்னதாகப் பதவிக் காலம் முடிவடைந்துள்ள ஒன்பது மாகாண சபைகளுக்கும் தேர்தலை நடத்துவது குறித்து இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆலோசித்து வருகிறார். ஜனாதிபதித் தேர்தலை மேலும் பிற்போட்டு அமைச்சர் சஜித் பிரேமதாசவை பொது வேட்பாளராகக் களமிறக்கும் நோக்கிலேயே மாகாண சபைத் தேர்தல்களை நடத்த மைத்திரிபால சிறிசேன முற்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. இந்த ஆண்டு முடிவடைவதற்குள் மாகாண சபைத் தேர்தல்கள் நடத்த வேண்டுமென சுயாதீனத் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய வலியுறுத்தியிருந்தார்.
 
இந்த நிலையிலேயே ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் மாகாண சபைத் தேர்தல்களை நடத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆலோசித்து வருகிறார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக ஒன்பது மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்த முடியுமா என்பது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயர் நீதிமன்றிடம் இன்று செவ்வாய்க்கிழமை சட்ட வியாக்கியானம் கோரியுள்ளார்.

மாகாண சபைகளுக்கான எல்லை நிர்ணய அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை. இந்த நிலையில் மாகாண சபைகளுக்குரிய தேர்தலை நடத்த முடியுமா என்பது தொடர்பாகவே மைத்திரிபால சிறிசேன விளக்கம் கேட்டுள்ளார்.

சட்ட மா அதிபர் மூலமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விண்ணப்பம் ஒன்றை உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார். எதிர்வரும் 23 ஆம் திகதி இந்த விண்ணப்பம் குறித்து உயர் நீதிமன்றம் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளவுள்ளது.

தேர்தலை நடத்த முடியுமா என்ற சட்ட வியாக்கியானம் தொடர்பான விளக்கம் எதிர்வரும் 30 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு உயர் நிதிமன்ற நீதியரசர்களினால் அனுப்பிவைக்கப்படுமென நீதிமன்றப் பதிவாளர் தெரிவித்துள்ளார்.