கிழக்கு மாகாணம் - மட்டக்களப்பு

வாகனேரிப் பிரதேசத்தில் கடனை மீளச் செலுத்த முடியாமல் தற்கொலை செய்ய முயற்சி

வழங்கப்பட்ட நுண்கடன் திட்டங்களை மானியமாக மாற்றுமாறு கோரிக்கை
பதிப்பு: 2019 ஓகஸ்ட் 21 11:11
புலம்: மட்டக்களப்பு, ஈழம்
புதுப்பிப்பு: ஓகஸ்ட் 24 14:28
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#Microcredit
#Northandeast
#Batticaloa
#tamils
#LTTE
#srilanka
#lka
இலங்கை அரசாங்கத்தின் அனுமதியோடு வடக்குக் - கிழக்குத் தாயகப் பிரதேசங்களில் இயங்கும் அரச, தனியார் நிதி நிறுவனங்கள் வழங்கிவரும் நுண்கடன் திட்டங்களினால் போரினால் பாதிக்கப்பட்ட பல குடும்பங்கள் பெரும் இன்னல்களை எதிர்நோக்குவதாக இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றம் சுமத்தியிருந்தனர். இந்த நிலையில் தொடர்ந்தும் மக்களை ஏமாற்றி நிதி நிறுவனங்கள் நுண்கடன்களை வழங்கி வருகின்றன. தொழில் வாய்ப்புகள் இன்றி வறுமையில் வாழும் முன்னாள் போராளி்கள் பெற்ற நுண்கடன்களை மீளச் செலுத்த முடியாமல் தற்கொலை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளதாக மட்டக்களப்பு - வாகனேரி கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் போராளியான ஓவியராசா கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார்.
 
முன்னாள் போராளிகள் பலர் தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக வழங்கப்பட்ட நுண்கடன் திட்டத்தில் பெறப்பட்ட கடனை மீளச் செலுத்த முடியாமல் மிகவும் கஷ்டங்களை எதிர்நோக்குவதாகவும் உயர் அதிகாரிகளிடம் முறையிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

கால்நடை வளர்ப்பு, விவசாயம், மீன்பிடி மற்றும் சுயதொழில்களை ஊக்குவிக்கும் நோக்கில் இலங்கை வங்கி, மக்கள் வங்கி உள்ளிட்ட அரச வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்களினால் நுண்கடன்கள் வழங்கப்பட்டன.

ஆனால் மாவட்டத்தில் ஏற்பட்ட அசாதாரண காலநிலை மாற்றத்தினால் தொழில் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் போராளிகள் கூறுகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டம் கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செலயாளர் பிரிவிலுள்ள வாகனேரிக் கிராமத்தில் 540 குடும்பங்கள் வாழ்கின்றனர். வறுமைக் கோட்டின் கீழ் உள்ள இங்குள்ள மக்கள் அனைவரும் அன்றாடம் கூலித்தொழில் செய்து வருமானத்தைத் தேடிக் கொள்பவர்கள். இவர்களும் நுண்கடன்களைப் பெற்றுள்ளார்கள். தற்போது கடனை மீளச் செலுத்துவதில் பெரும் இன்னல்களை எதிர்நோக்குகின்றார்கள்.

தொழில் முயற்சிகளினுடாக பெறப்படும் வருமானத்தைக் கொண்டு தமது வாழ்வாதாரத்தை மட்டுமன்றி பெறப்பட்ட கடனின் சிறுதொகையையும் மீளச் செலுத்திவந்த நிலையில் கடும் வரட்சியினால் கால்நடைகள் இறந்துள்ளன.

இதனால் வாகனேரிப் பகுதி மக்களுக்குக் குடிப்பதற்குக் கூட நீர்த்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அனைத்து தொழில் நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் போராளிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இவர்களில் அங்கவீனமடைந்த போராளிகளும் உள்ளனர். அவர்கள் தமக்குத் தெரிந்த தொழிலை மேற்கொண்டு வரும் நிலையில், இவ்வாறு பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளதால் வேறு தொழில்களைக் கூட செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, கடன்களை வழங்கிய நிறுவனங்கள் தற்போதைய நிலவரங்களை கவனத்தில் கொண்டு கடன் அறவிடுவதை மீள்பரிசீலனை செய்ய வேண்டும். அத்துடன், இலங்கை அரசாங்கம் இதனைக் கவனத்தில் கொண்டு இக்கடன் திட்டத்தை மானியமாக அறிவிக்க வேண்டும் எனவும் முன்னாள் போராளிகள் கோரிக்கை விடுத்துள்ளதாக ஓவியராசா கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார்.