இலங்கை ஜனாதிபதித் தேர்தல்

தமிழ் வாக்குகள் - ரணில் தரப்புக்கும் நம்பிக்கையற்ற நிலை

ஐக்கிய தேசியக் கட்சியில் நான்கு வேட்பாளர்கள் உள்ளதாக கட்சி உறுப்பினர்கள் கூறுகின்றனர்
பதிப்பு: 2019 ஓகஸ்ட் 21 23:19
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஓகஸ்ட் 22 13:38
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#RanilWickramasinghe
#UNP
#Tamils
#prespollsl
#SajithPremadasa
#srilanka
#lka
இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட வேட்பாளரைத் தெரிவு செய்வதில் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இழுபறி நீடிக்கின்றது. ஆனாலும் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தானே என்று அமைச்சர் சஜித் பிரேமதாச கொழும்பில் ஊடகங்களிடம் கூறியுள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது உறுதி என்று சஜித் பிரேமதாச நம்பிக்கை வெளியிட்டுள்ளார். ஆனால் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் கட்சியின் தலைவர் என்ற அடிப்படையின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியதன்படி கரு ஜயசூரியவே ஜனாதிபதி வேட்பாளர் என்பது உறுதியாகியுள்ளதாக அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல கூறுகின்றார். கரு ஜயசூரிய சபாநாயகர் பதவியில் இருந்து விலகவுள்ளதாக சபாநாயகர் அலுவலகத் தகவல்கள் கூறுகின்றன.
 
அதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடிதம் எழுதியுள்ளனர். சஜித் பிரேமதாசவை வேட்பாளராக நியமிக்க வேண்டுமென அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கட்சியின் பின் வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் ரணில் விக்கிரமசிங்கவை இன்று சந்தித்து உரையாடியுள்ளதாகவும் கட்சித் தகவல்கள் கூறுகின்றன.

எனினும் சஜித் பிரேமதாசவை வேட்பாளராக நியமிக்க முடியாதென ரணில் விக்கிரமசிங்க உறுதியாகக் கூறியுள்ளதாக கட்சியின் உயர்மட்டத் தகவல்கள் கூறுகின்றன.

அதேவேளை, ரணில் விக்கிரமசிங்க. சஜித் பிரேமதாச கரு ஜயசூரிய சரத் பொன்சேகா ஆகிய நான்கு பேரில் ஒருவர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட வேட்பாளராகத் தெரிவு செய்யப்படுவார்கள் என்றும் எனினும் தற்போதைக்கு வேட்பாளர் யார் என்பது அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லையென்றும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹேஷா விதானகே, சமிந்த விஜயசிறி, பாலித ரங்கே பண்டார பேராசரியர் ஆசு மாரசிங்க ஆகியோர் ஊடகவியலாளர்களிடம் கூறியுள்ளனர்.

கொழும்பில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட இந்த உறுப்பினர்கள், இந்த நான்கு பேரிலும் யார் போட்டியிட்டாலும் அவர்களுக்கு ஆதரவு வழங்கப்படுமெனவும் இந்த நான்கு உறுப்பினர்களும் செய்தியாளர்களிடம் கூறியுள்ளனர்.

இதேவேளை, தமிழ் முஸ்லிம் கட்சிககள் இதுவரை தங்கள் நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை. ஆனாலும் வடக்குக் கிழக்குத் தமிழ் பேசும் மக்களின் வாக்குகளும் மலையகத் தமிழர்களின் வாக்குகளும் இம்முறை யார் பக்கம் செல்லுமெனக் கூற முடியாது.

எனினும் இந்த வாக்குகள் ஐக்கிய தேசியக் கட்சிக்குக் கிடைக்குமென கட்சியின் மூத்த உறுப்பினர்கள் நம்புவதாக உயர்மட்டத் தகவல்கள் கூறுகின்றன. ஆனாலும் வடக்குக் கிழக்கு தமிழ் மக்களின் வாக்குகளைப் பெறுவதில் ஐக்கிய தேசியக் கட்சியும் பெரும் சிரமங்களை எதிர்நோக்குமென கட்சியின் அனுபவமுள்ள மூத்த உறுப்பினர்கள் ரணில் விக்கிரமசிங்கவிடம் கூறியதாகவும் உ்ள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.