வடமாகாணம்

சர்வதேச நீதியை வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் எழுக தமிழ்

மக்களுக்குத் துண்டுப்பிரசுரங்கள் விநியோகம்-
பதிப்பு: 2019 ஓகஸ்ட் 23 13:06
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: ஓகஸ்ட் 23 21:43
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
வடக்குக் கிழக்கு தாயகப் பிரதேசங்களில் இலங்கை இராணுவம் அதிகளவு குவிக்கப்பட்டு இராணுவ மயமாக்கல் செய்யப்பட்டுள்ளதைக் கண்டித்தும் சர்வதேச நீதி விசாரணையை வலியுறுத்தியும் நடத்தப்படவுள்ள எழுக தமிழ் நிகழ்வுக்கான பிரச்சார நடவடிக்கைகள் இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வடமாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர், நீதியரசர் சீ.வி.விக்னேஸ்வரன் தலைமையில் யாழ் பேருந்து நிலையத்தில் எழுக தமிழ் நிகழ்வின் முக்கியத்துவத்தை உணர்த்தி துண்டுப்பிரசுரங்கள் பொது மக்களுக்கு விநியோகிக்கப்பட்டன. எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் 16 ஆம் திகதி நடைபெறவுள்ள எழுக தமிழ் நிகழ்வில் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள் வெளிப்படுத்தப்படுமென விக்னேஸ்வரன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
 
சர்வதேச போர்க்குற்ற விசாரணையை நடாத்துவது, தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்வது, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக நீதி விசாரணையைக் கோருவது, வடக்கு கிழக்கில் இராணுவ மயமாக்கலை நிறுத்துமாறு வலியுறுத்துவது, இடம்பெயர்ந்த மக்களை அவர்களின் பாரம்பரியப் பிரதேசங்களில் குடியமர்த்துவது ஆகிய கோரிக்கைகளை முன்வைத்தே எழுக தமிழ் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார்.

இன்று காலை யாழ் நல்லூர் ஆலய வளாகத்திலும் எழுக தமிழ் நிகழ்வுக்கான துண்டுப்பிரசுரங்கள் வழங்கப்பட்டன. ஆலய வழிபாடுகளுடன் பிரச்சார நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதாக சிவசக்தி ஆனந்தன் கூறினார்.

தமிழ் மக்கள் கூட்டணி என்ற கட்சியை புதிய அரசியல் அணியாக உருவாக்கவுள்ளதாக கடந்த ஆண்டு ஒக்ரோபர் மாதம் விக்னேஸ்வரன் யாழ்ப்பாணத்தில் அறிவித்திருந்தார்.

ஒக்ரோபர் 24 ஆம் திகதி நள்ளிரவு வடமாகாண சபையின் பதவிக் காலம் முடிவடைவதற்கு முன்னர் அன்றைய தினம் பிற்பகல் தமிழ் மக்கள் கூட்டணி என்ற புதிய அரசியல் கட்சி தொடர்பாக விக்னேஸ்வரன் அறிவித்திருந்தார். அத்துடன் சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவதாகவும் விக்னேஸ்வரன் அப்போது கூறியிருந்தார்.

2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தமிழ் மக்கள் பேரவை என்ற குழு ஒன்றை விக்னேஸ்வரன் ஆரம்பித்திருந்தார். அதில் கஜேந்திரக்குமார் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, சுரேஸ் பிரேமச் சந்திரன் தலைமையிலான ஈபிஆர்எல்எப், சித்தாத்தன் தலைமையிலான புளொட் ஆகிய கட்சிகளும் கல்வியாளர்கள், சட்டத்தரணிகள், வைத்தியர்கள். மதகுருமார் எனப் பல பிரமுகர்களும் அங்கம் வகித்திருந்தனர்.

தேர்தல் அரசியலில் ஈடுபடாமல் தமிழ் மக்களின் அரசியல் விடுதலைக்கான பயணத்தை சர்வதேச அரங்கில் இடித்துரைக்கும் நோக்கில் தமிழ் மக்கள் பேரவை ஆரம்பிக்கப்பட்டிருந்தது. அதன் முதல் நிகழ்வாக 2016 ஆம் ஆண்டு மே மாதம் எழுக தமிழ் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்டிருந்தது.

பின்னர் 2016 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் மட்டக்களப்பிலும் எழுக தமிழ் நிகழ்வு நடத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் விக்னேஸ்வரனின் புதிய அரசியல் கட்சி அறிவிப்போடு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தமிழ் மக்கள் பேரவையில் இருந்து கடந்த ஆண்டு இறுதியில் வெளியேறியது.

கஜேந்திரக்குமார் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி விக்னேஸ்வரனின் புதிய அரசியல் கட்சியில் இணையவுமில்லை. இந்த நிலையில் எழுக தமிழ் நிகழ்வு எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் 16 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. தமிழ் மக்கள் பேரவையும் இந்த நிகழ்வுக்கு ஆதரவு வழங்கியுள்ளது.