இலங்கைத் தேசியத்துடன் சேர்ந்து பயணிக்க முடியுமா?

சுதந்திரக் கட்சியோடு இணையவில்லை- அனந்தி மறுப்பு-கண்டனம்

மலையக மக்களின் பிரச்சனைகள் மாத்திரமே பேசப்பட்டதாகவும் கூறுகின்றார்
பதிப்பு: 2019 ஓகஸ்ட் 23 20:12
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: ஓகஸ்ட் 25 00:01
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#Ananthi
#Sasitharan
#Denied
#SLFP
#Maithripala
#Sirisena
#ஸ்ரீலங்கா
#சுதந்திரக்
#கட்சி
மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தமிழ்ப் பிரிவோடு இணைந்து செயற்படவுள்ளதாக செய்திகளை வெளியிட்ட சில செய்தி ஊடகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகத்தின் பொதுச் செயலாளரும் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினருமான அனந்தி சசிதரன் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்துள்ளார். தன்னுடைய சட்டத்தரணிகளோடு இந்த விடயம் தொடர்பாகப் பேசவுள்ளதாகவும் அவர் கூறினார். மலையக மக்கள் முன்னேற்றக் கழக உறுப்பினர்களுடன் நேற்று வியாழக்கிழமை சந்திப்பொன்றை நடத்திய பின்னர், செய்தியாளர்களிடம் வெளியிட்ட கருத்தை சில இலத்திரனியல் ஊடகங்கள், சில செய்தி இணையத் தளங்கள், சில நாளேடுகள் திரிபுபடுத்தி செய்தி வெளியிட்டுள்ளமை கவலையளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
 
மலையக மக்களின் பிரச்சனைகளை வெளிக்கொணர்ந்து உரிய தீர்வைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் அவர்களுடன் இணைந்து பயணிக்கவுள்ளதாக மாத்திரமே தான் கூறியதாகவும் ஆனால் அந்தக் கருத்தை சில செய்தி ஊடகங்கள் வேறு வகையான அர்த்தத்தைக் கொடுத்துள்ளதாகவும் அனந்தி சசிதரன் தெரிவித்தார்.

மலையகத்தில் தொழிற் சங்க நடவடிக்கைகளில் ஈடுபடும் பல கட்சிகளில் இருந்து வெளியேறியவர்கள் மலைகயக மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் இணைய விருப்பம் தெரிவித்துள்ளதை அதன் தலைவர் குமார் தன்னிடம் கூறியதாகவும் அனந்தி சசிதரன் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு கலந்துரையாடப்பட்ட செய்தியைத் திரிபு படுத்தி, மைத்திரிபால சிறிசேனவின் தமிழ்பிரிவுக் கட்சியுடன் ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் இணைந்ததாக செய்தி வெளியாகியுள்ளதென்றும் தனக்கு எதிரான இவ்வாறான செய்திகள் முன்னரும் செய்தி ஊடகங்கள் சிலவற்றில் வெளிவந்ததாகவும் அவர் கூறினார்.

மலையகத் தமிழர்களின் பிரச்சனைக்கான தீர்வுகளைப் பெற்றுக் கொடுப்பதைத் தவிர இலங்கைத் தேசத்துடன் இணைந்து போக வேண்டிய எந்தவொரு தேவையும் சந்தர்ப்பமும் தனக்கு இல்லையென்றும் அனந்தி சசிதரன் கூறினார்.

2013 ஆம் ஆண்டு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்ட போதும் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்துவிட்டதாக சில தீய சக்திகள் உதயன் நாளேடு போன்று போலியாக வடிவமைத்து தலைப்புச் செய்தியாக வெளியிட்டதாகவும் அவர் கூர்மைச் செய்தித் தளத்திற்கு சுட்டிக்காட்டினார்.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னர் இலங்கை இராணுவம் வடக்குக்- கிழக்கில் மக்களின் பாதுகாப்புக்காக நிலை கொண்டிருக்க வேண்டுமெனத் தான கூறியதாகப் பொய்யான செய்தி ஒன்று முன்னர் வெளியிடப்பட்டிருந்ததாகவும் சுட்டிக்காட்டிய அவர், மொழிபுரியாத சிங்கள ஊடகவியலாளர் ஒருவர் தன்னோடு உரையாடிய பின்னர் அந்தச் செய்தியைத் தவறான அர்த்தத்தோடு வெளியிட்டிருந்தாரென்றும் கூறினார்.

எனவே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியோடு இணையவுள்ளதாக செய்தி வெளியிட்ட ஊடகங்கள் சரியான செய்தியை வெளியிட வேண்டுமென்றும் அது தொடர்பாக அறிக்கை ஒன்றை தான் வெளியிட்டுள்ளதாகவும் அனந்தி சசிதரன் கூறியுள்ளார்.

குமார் தலைமையிலான மலையக மக்கள் முன்னேற்றக் கழகம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கிளை அமைப்பாகச் செயற்பட்டு வருகின்றது. ஸ்ரீலங்ா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த கொழும்பு மாநகர சபை உறுப்பினர் உமா சந்திரப் பிரகாஷ் போன்ற பல பெண்கள் அந்தக் கழகத்தில் உறுப்பினர்களாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.