இலங்கை ஒற்றையாட்சி அரசின்

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பற்றிய அலுவலகம் யாழ் நகரில் அதிகாலை திறக்கப்பட்டது

எதிர்ப்புப் போராட்டம் காரணமாக நிகழ்ச்சி நிரலில் திடீர் மாற்றம்
பதிப்பு: 2019 ஓகஸ்ட் 24 15:33
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: ஓகஸ்ட் 25 01:50
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#disappearances
#abductions
#information
#of
#missing
#persons
இலங்கை ஒற்றையாட்சி அரசின் அங்கீகாரத்துடன் ஆரம்பிக்கப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பற்றிய அலுவலகத்தின் (Office on Missing Persons) (OMP) கிளையை யாழ்ப்பாணத்தில் திறப்பதற்கு மக்கள் எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர். அலுவலகத்தைத் திறப்பதற்காக ஏற்கனவே திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்கு மாறாக அவசர அவசரமாக இன்று சனிக்கிழமை அதிகாலை குறித்த அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. போர்க்காலத்திலும் 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னரான சூழலிலும வடக்குக்- கிழக்குத் தாயகப் பிரதேசங்களில் இலங்கைப் படையினராலும் ஆயுதக் குழுக்களினாலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பற்றி இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஜெனீவா மனித உரிமைச் சபையில் 2014 ஆம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.
 
அந்தத் தீர்மானத்தில் பரிந்துரைக்கப்பட்டிருந்த பல அம்சங்கள் வெட்டிக் குறைக்கப்பட்டு 2016 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இலங்கை நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டிருந்தது. 2017 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் அலுவலகத்தின் செயற்பாடுகள் கொழும்பை மையமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

இந்த அலுவலகத்தின் செயற்பாடுகளுக்காக கடந்த 2018 ஆம் ஆண்டுக்கான வருடாந்த செலவாக 1.3 பில்லியன் (1.3 billion INR) நிதி இலங்கை நாடாளுமன்றத்தினால் ஒதுக்கப்பட்டிருந்தது.

ஓம்பி
போரின்போதும் 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பி;ன்னரான சூழலிலும் வடக்குக்-கிழக்குத் தாயகம் மற்றும் கொழும்பு அதன் புநகர் பகுதிகளில் இலங்கை இராணுவத்தாலும் ஆயுதக் குழுக்களினாலும் தமிழ் இளைஞர் யுவதிகள் பலர் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்டுள்ளமை தொடர்பாக ஜெனீவா மனித உரிமைச் சபை உள்ளிட்ட சர்வதேச அரங்கில் பல்வேறு முறைப்பாடுகள், வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றிய அலுவலகம் (Office on Missing Persons) (OMP) ஒன்றை இலங்கை அரசாங்கம் கொழும்பில் அமைத்துள்ளது. ஏற்கனவே மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் அமைக்கப்பட்ட இலங்கையின் முன்னாள் நீதியரசர் மஸ்வல் பரணகம தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு 23 ஆயிரத்தி 586 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக மீள்நல்லிணக்க அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத் தளத்தில் கூறப்பட்டுள்ளது. எனினும் இலங்கை ஒற்றை ஆட்சி அரசின் நீதி விசாரணைகளில் தமக்கு நம்பிக்கையில்லையென தமிழ்த் தரப்புக் கூறுகின்றது. ஆனாலும் இந்த அலுவலகத்தின் கிளைகளை வடக்குக் கிழக்குத் தாயகப் பிரதேசங்களில் பாதிக்கப்பட்ட மக்களின் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் இலங்கை அரசாங்கம் திறந்து வருகின்றது. யாழ்ப்பாணம் ஆடியபாதம் வீதியில் இன்று இந்த அலுவலகம் திறக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட படம் இது.

இந்த நிலையில் வடக்குக் கிழக்குத் தாயகப் பகுதிகளில் பிராந்திய அலுவலகங்களைத் திறக்க இலங்கை அரசாங்கம் ஏற்பாடு செய்திருந்தது. ஆனால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கம் இந்த அலுவலகத்தில் நம்பிக்கை இல்லையென்றும் இது சர்வதேச சமூகத்தை திருப்திப்படுத்தித் திசை திருப்பும் செயற்பாடு என்றும் குற்றம் சுமத்தியிருந்தது.

இந்த நிலையில் இந்த அலுவலகத்தை இன்று சனிக்கிழமை முற்பகல் 10.30க்கு இலங்கை நாடாளுமன்றச் சபாநாயகர் கரு ஜயசூரிய, அமைச்சர் மனோ கணேசன் ஆகியோரால் திறந்து வைக்கப்படுமென ஏற்கனவே கூறப்பட்டிருந்தது.

ஆனால் இன்று அதிகாலை குறித்த அலுவலகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சட்டத்தரணி சாலிய பீரிஸ் அலுவலகத்தை திறந்து வைத்தார். திறப்பு விழாவின்போது மக்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாகத் தெரிவித்திருந்தனர். இதன் காரணத்தால் அலுவலகம் இன்று அதிகாலை அவசர அவசரமாகத் திறந்து வைக்கப்பட்டிருக்கலாமென காணாமல் ஆக்கப்பட்ட உறவினர் சங்கம் கூறுகின்றது.

இந்த அலுவலகம் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பற்றிய விபரங்களையும் உறவினர்களின் வாய்மூல முறைப்பாடுகளையும் மாத்திரமே பதிவு செய்கின்றது. ஆனால் இலங்கை இராணுவ முகாம்களையோ, இரகசிய முகாம்களையோ நேரடியாகச் சென்று பார்வையிட்டு இலங்கைப் படை உயர் அதிகாரிகளையும் விசாரணை செய்யும் அதிகாரம் இந்த அலுவலகத்திற்கு இல்லை.

விசாரணைக்காக சர்வதேச உதவிகள் சர்வதேச நிபுணத்துவம் உள்ளவர்களின் உதவிகள் போன்றவற்றைக் கூட இந்த அலுவலகம் பெற்றுக் கொள்ள முடியாது. கொழும்பை மையப்படுத்தி இலங்கை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலேயே இந்த அலுவலகம் செயற்பட்டு வருகின்றது.

இதனால் இலங்கைப் படையினர் மற்றும் ஆயுதக் குழுக்களினால் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இந்த அலுவலகத்திற்குத் தொடர்ந்தும் எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றனர். வவுனியாவில் தொள்ளாயிரம் நாட்களைத் தாண்டி இவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டும் வருகின்றனர்.