வடக்குக்- கிழக்கில் தமிழ் பேசும் மக்களின் தாயகப் பிரதேசங்களில்

போராடிக் களைத்த நிலையில் காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கப் பிரதிநிதிகள் பலர் உயிரிழப்பு

நீதி கிடைக்கவில்லை என்கிறார் சங்கத்தின் இணைப்பாளர்
பதிப்பு: 2019 ஓகஸ்ட் 27 21:47
புலம்: கிளிநொச்சி. ஈழம்
புதுப்பிப்பு: ஓகஸ்ட் 28 22:25
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#Sri
#Lankan
#Army
#Disappearance
#Abductions
#North
#East
#death
#LKA
இலங்கைப் படையினரால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் பலர் தமது பிள்ளைகள், கணவன்மார் மீண்டும் கிடைப்பார்கள் என்ற நம்பிக்கையோடு போராடி எதுவிதமான பலன்களும் இன்றி மரணித்துள்ளதாக சங்கத்தின் பிரதிநிதிகள் கூறுகின்றனர். இதுவரை 48 முதல் ஐம்பது பேர்வரை உயிரிழந்துள்ளதாக அவர்கள் கூறுகின்றனர். அதேவேளை வேறு சிலர் விபத்துக்களுக்கு உள்ளாகி காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் உறவினர் சங்கப் பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர். கடந்த வியாழக்கிழமை முல்லைத்தீவைச் சேர்ந்த தந்தை ஒருவர் கொழும்புக்குச் சென்று திரும்பும்போது விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். அவருடைய மனைவி படுகாயமடைந்துள்ளார்.
 
இவை தொடர்பாகக் கூர்மைச் செய்தித் தளத்திற்குக் கருத்து வெளியிட்ட உறவினர் சங்கத்தின் வடக்குக் கிழக்கு இணைப்பாளர் யோகராசா கனகரஞ்சினி தமது போராட்டம் தொடரும் என்று கூறினார்.

கடந்த மூன்று ஆண்டுகளாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் சங்கம் வடக்குக்- கிழக்குத் தாயகப் பிரதேசங்களில் தொடர்ச்சியாகப் போராடி வருகின்றது. நீதிகேட்டுப் போராடி இலங்கை அரசாங்கத்திடம் இருந்து உரிய பதில் கிடைக்கவில்லை என்றும் அவர் கவலை வெளியிட்டார்.

மூன்று வருட போராட்டத்திற்கு நீதிகிடைக்கவில்லையென்பதால் சர்வதேச சமூகம் உரிய நீதியைப் பெற்றுத்தர வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

இங்கை இராணுவத்திடம் விசாரணைக்காகக் கையளித்த தமது பிள்ளைகள் எங்கே என்றுதான் கேட்பதாகவும், வேறு சிலரை இராணுவம் கைது செய்து சென்றதாகவும் அவர்கள் இதுவரை விடுவிக்கப்படவில்லை என்றும் அவா் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தொிவித்தாா்.

இலங்கை அரசாங்கத்தினால் வடக்குக்- கிழக்குத் தாயகப் பகுதிகளில் திறக்கப்பட்டுள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றிய அலுவலகத்திற்கும் இந்த உறவினர் சங்கம் கடும் எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றது.

2009 ஆம் ஆண்டு மே மாதம் இடம்பெற்ற இறுதிப் போரில் சுமார் ஒன்றரை இலட்சம் பேர் காணாமல் போயிருந்ததாக மன்னார் மறை மாவட்ட முன்னாள் ஆயர் இராஜப்பு யோசப் ஜெனீவா மனித உரிமைச் சபைக்கு வழங்கிய வாக்குமூலத்தில் கூறியிருந்தார்.