இலங்கை ஒற்றையாட்சி அரசின் யாப்பின் பிரகாரம்

ஜனாதிபதி பெயரளவில்- அதிகாரம் பிரதமருக்கே என்கிறார் மைத்திரி

எனவே ஜனாதிபதித் தேர்தல் முக்கியமல்ல- நாடாளுமன்றத் தேர்தலே பிரதானம் என்கிறார் மைத்திரி
பதிப்பு: 2019 ஓகஸ்ட் 27 22:50
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஓகஸ்ட் 28 22:59
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#Chandrika
#Kumaratunga
#Maithripala
#Sirisena
#President
#Election
#LKA
ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு தொடர்பாகத் தற்போது பேச வேண்டிய அவசியம் இல்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தல் பற்றிய அறிவிப்பு வெளியான பின்னரே வேட்பாளர் நியமனம் குறித்துப் பேசவுள்ளதாகவும் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களுடனான சந்திப்பு இன்று செவ்வாய்க்கிழமை கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவும் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டார். அங்கு விளக்கமளித்த மைத்திரிபால சிறிசேன 19 ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் பிரதமருக்கே அதிகளவு அதிகாரங்கள் உண்டு என்றும் அதனால் பிரதமர் பதவி தொடர்பாகவே முக்கியமாகப் பேச வேண்டும் எனவும் கூறினார்.
 
இதன் காரணமாக ஜனாதிபதித் தேர்தலை விட பொதுத் தேர்தலிலேயே கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் மைத்திரிபால சிறிசேன கூறினார். ஜனாதிபதித் தேர்தல் குறித்து தற்போதைக்கு யாரும் சிந்திக்க வேண்டிய அவசியம் இல்லை.

ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் வெற்றி பெற்றுப் பதவிக்கு வந்தாலும் அவருக்கு அதிகாரங்களே இல்லையென்றும் மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளாா்.

பிரதமருக்கும் நாடாளுமன்றத்திற்கும் மாத்திரமே அதிகாரங்கள் உள்ளன. ஆகவே நாடாளுமன்றத் தேர்தல்தான் முக்கியமான தேர்தலாக அமையப் போகின்றது என்றும் மைத்திரிபால சிறிசேன கூறினார்.

ஜனாதிபதித் தேர்தல் முக்கியமற்றது. அதற்காகப் போட்டியிட்டு கருத்து வேறுபாடுகளை உருவாக்க வேண்டாமெனவும் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களிடம் மைத்திரிபால சிறிசேன கூறினார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளர் ஒருவரை களமிறக்குமா அல்லது ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அல்லது மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்காப் பொதுஜன முன்னணிக்கு ஆதரவு அளிக்குமா என்பது தொடர்பாக எந்தவொரு முடிவும் இதுவரை எடுக்கவில்லை. ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னரே அது குறித்த தீர்மானங்கள் எடுக்கப்படும் என்றும்மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருக்கின்றார்.

ஜனாதிபதித் தேர்தல் முக்கியமற்றது என்று சந்திரிக்காவும் இந்த நிகழ்வில் உரையாற்றும் போது கூறினார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் போஷகர் என்ற முறையிலும் கட்சியின் ஸ்தாபக உறுப்பினர் பண்டாரநாயக்காவின் மகள் என்ற அடிப்படையிலும் சந்திரிக்காவுக்கு இந்தச் சந்திப்பில் கௌரம் வழங்கப்பட்டது. மைத்திரிபால சிறிசேன கௌரவித்து உரையாற்றினார்.