இலங்கைப் படையினரால் அபகரிக்கப்பட்டுள்ள

காணிகளைக் கையளிக்குமாறு கோரி கிளிநொச்சி, முல்லைத்தீவில் போராட்டம்

தொழில் நடவடிக்கைகள் எதுவுமே இல்லையென மக்கள் கோசம்- மகஜர் கையளிப்பு
பதிப்பு: 2019 ஓகஸ்ட் 28 14:04
புலம்: கிளிநொச்சி. ஈழம்
புதுப்பிப்பு: செப். 20 22:36
main photo main photo main photo main photo main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#landgrab
#lka
#tamil
இலங்கைப் படையினரால் கிளிநொச்சி மாவட்டத்தில் அபகரிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகளை உடனடியாகக் கையளிக்குமாறு வலியுறுத்தி இன்று புதன்கிழமை முற்பகல் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. காலை 9.30க்கு கிளிநொச்சி பிள்ளையார் ஆலயம் முன்பாக போராட்டம் ஆரம்பமாகிது. போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மாவட்டச் செயலகம் வரை பேரணியாகச் சென்றனர். 2009 ஆம் ஆண்டு மே மாதத்தில் இருந்து இன்று வரையான பத்து ஆண்டுகள் சென்ற நிலையிலும் இலங்கை இராணுவம் காணிகளைக் முழுமையாகக் கையளிக்கவில்லையென போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் குற்றம் சுமத்தினர். தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் இந்தப் போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.
 
வடமாகாணத்தில் செயற்படும் ஏனைய அமைப்புகளின் பிரதிநிதிகளும் இந்தப் போராட்டத்தில் பங்கு கொண்டனர். அபகரிக்கப்பட்ட காணிகளை பொது மக்களிடம் கையளிக்குமாறு வலியுறுத்தி தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் ஒவ்வொரு மாவட்டங்களிலும் போராட்டங்களைத் தொடர்ச்சியாக நடத்தி வருகின்றது.

முல்லைத்தீவு
முல்லைத்தீவுப் பிரதேசத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மாவட்டச் செயலகம் வரை சென்று மேலதிக அரச அதிபர் கோ.தனபாலசுந்தரத்திடம் மகஜர் கையளித்தபோது எடுக்கப்பட்ட படம் இது. இலங்கை இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்ட காணிகளை மக்களிடம் கையளிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமது தொழில் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக மகஜரில் கூறப்பட்டுள்ளது.
இன்று கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய இடங்களில் நடைபெற்ற போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு காணிகளை கையளிக்குமாறு வலியுறுத்தினர். பதாதைகளையும் கைகளில் ஏந்தியிருந்தனர்.

கிளிநொச்சியில் இடம்பெற்ற பேரணியில் கலந்துகொண்ட மக்கள் மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகத்திடம் மகஜர் ஒன்றைக் கையளித்தனர்.

இலங்கை அரசாங்கத்தின் வனவள திணைக்களமும் மக்களுக்குச் சொந்தமான காணிகளை அபகரித்துள்ளது. அந்தக் காணிகளையும் கையளிக்க நடவடிக்கை எடுக்குமாறு போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகத்திடம் வலியுறுத்தினர்.

போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் மீளக் குடியமர்த்தப்பட்டுள்ள நிலையிலும் அவர்களுடைய சொந்தக் காணிகளில் பெருமளவு காணிகள் இன்று வரை இலங்கை இராணுவத்தின் கட்டுப்பாட்டிலேயே உள்ளன.

அந்தக் காணிகளை மீளக் கையளிக்கமாறு கோரி மக்கள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வருகின்றனர். காணிகளை இராணுவம் தமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதால் தமது விவசாயத் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட முடியவில்லை என மக்கள் கூறி வருகின்றனர்.

அதேவேளை இலங்கைப் படையினர் அபகரித்துள்ள காணிகளை கையளிக்குமாறு கோரி முல்லைத்தீவு மாவட்டத்திலும் இன்று புதன்கிழமை போராட்டம் இடம்பெற்றது.

முல்லைத்தீவு மாவடடத்தின் கேப்பாபுலவு- வட்டுவாகல்-முள்ளிவாய்க்கால் அளம்பில், செம்மலை, புதுக்குடியிருப்பு உள்ளிட்ட பிரதேசங்களை சேர்ந்த மீணவ குடும்பங்கள் மற்றும் கேப்பாபுலவில் தமது நிலங்களைக் கையளிக்குமாறு கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களே இன்றைய போராட்டத்திலும் கலந்துகொண்டனர்.

இலங்கையின் தேசிய பாதுகாப்பு என்னும் போர்வைக்குள் இலங்கை இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்ட மக்களின் பாரம்பரிய காணிகளில் இருந்து இராணுவம் இதுவரை வெளியேறாமல் உள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் குற்றம் சுமத்தினர்.

போராட்டத்தின் முடிவில் முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரச அதிபர் கோ.தனபாலசுந்தரிடம் மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டது. மாவட்ட செயலக வளாகத்துக்குள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை பொலிஸார் அனுமதிக்கவில்லை.

ஆனாலும் பெரும் இழுபறிக்கு மத்தியில் மேலதிகச் செயலாளரிடம் மகஜர் கையளிக்கப்பட்டது. இலங்கை அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இல்லை என்றும் சர்வதேச சமூகம் நீதியை நிலைநாட்ட வேண்டுமெனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.