வடமாகாணத்தில் கிளிநொச்சி வலிகாமம் பிரதேசங்களில்

மீளக் குடியேறாத குடும்பங்களையும் வாக்காளர்களாகப் பதிவு செய்ய ஏற்பாடு

இலங்கைச் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு உத்தரவு
பதிப்பு: 2019 ஓகஸ்ட் 28 23:02
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: ஓகஸ்ட் 30 11:23
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#Voters
#Tamil
#LKA
#SriLanka
தமிழ் பேசும் மக்களின் தாயகமான வட மாகாணத்தில் போரினால் இடம் பெயர்ந்து இதுவரை மீளக்குடியமர்த்தப்படாத குடும்பங்களையும் வாக்காளர்களாகப் பதிவு செய்யும் நடவடிக்கைகள் இலங்கைச் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்கழுவின் ஆலோசணைகளுக்கு அமைவாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் குறிப்பிடத்தக்களவு மக்கள் மீளக் குடியமர்த்தப்பட்டனர். எனினும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார் மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள் நிலக்கன்னி வெடி அகற்றப்படாமையினாலும் அவர்களின் சொந்தக் கிராமங்களை இலங்கைக் கடற்படையினரும், இராணுவத்தினரும் ஆக்கிரமித்துள்ளதாலும் மீளக் குடியேற்றப்படவில்லை.
 
ஆனாலும் இப்பகுதிகளில் முன்பு வாழ்ந்த மக்களில் தற்பொழுது உயிரோடுள்ளவர்களை 2019 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யுமாறு இலங்கை;ச் சுயாதீன தேர்தல்கள் ஆணைக் குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவின் பிரகாரம் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மன்னார் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த உதவித் தேர்தல்கள் ஆணையாளர்கள் இடப்பெயர்வு காரணமாக இதுவரை வாக்காளர்களாக பதிவு செய்யப்படாதவர்களை 2019ம் ஆண்டின் வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.

யாழ் மாவட்டத்தில் காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் நகுலேஸ்வரம், காங்கேசன்துறை மத்தி, மேற்கு, தெற்கு, தையிட்டி வடக்கு, மயிலிட்டி வடக்கு மற்றும் தெற்கு, குறும்பச்சிட்டி, கட்டுவான், தென்மயிலை, பாலாலி தெற்கு, வசாவிளான் மேற்கு, பாலாலி கிழக்கு மற்றும் வடமேற்கு, ஆகிய கிராமங்களிலும் கிளிநொச்சி தேர்தல் தொகுதியில் ஆனையிறவு, இத்தாவில், முகமாலை, வேம்போடுகேனி உட்பட மன்னார் தேர்தல் தொகுதியில் முள்ளிக்குளம் ஆகிய கிராமங்களிலேயே வாக்காளர்களாக புதியவர்களை பதிவு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தனர்.

இந்த மூன்று நிர்வாக மாவட்டங்களிலும் 26 கிராமங்களில் புதிய வாக்காளர்களை பதிவு செய்யும் நடவடிக்கைகள் அந்தந்தப் பகுதி கிராமசேவையாளர்கள் ஊடாக உதவி தேர்தல் ஆணையாளர்களால் மேற்கொள்ளப்படுவதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.