மைத்திரி- ரணில்

ஜனாதிபதித் தேர்தலை பிற்போடுவது தொடர்பாக ஆலோனை!

கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவைத் திரட்டும் குழு
பதிப்பு: 2019 ஓகஸ்ட் 29 17:42
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: செப். 01 00:15
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#PresPollSL
#LKA
இலங்கையில் தற்போது பிரதான அரசியல் கட்சிகளிடையே ஏற்பட்டுள்ள நெருக்கடியால் ஜனாதிபதித் தேர்தலை பிற்போடுவது குறித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் ஆலோசித்துள்ளதாக கொழும்பு உயர்மட்ட அரசியல் தகவல்கள் கூறுகின்றன. ரணில் விக்கிரமசிங்கவைப் பொறுத்தவரை ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள், அவருடைய கட்சித் தலைமைப் பதவிக்கும் ஆபத்தை விளைலிக்கக் கூடுமென கட்சி ஆதரவாளர்கள் கூறுகின்றனர். ஜனாதிபதி வேட்பாளர் தெரிவில் சஜித் பிரேமதாசவுக்கு இடமில்லை என்பதில் உறுதியாக இருப்பதால் ஜனாதிபதித் தேர்தலையும் பிற்போட்டால் சற்று நிம்மதியாக இருக்குமென ரணில் விக்கிரமசிங்க ஆலோசிப்பதாகக் கட்சித் தகவல்கள் கூறுகின்றன.
 
அதேபோன்றதொரு பிரச்சனையை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் எதிர்நோக்கியிருப்பதால் தேர்தலை பிற்போட்டால் நல்லதென மைத்திரிபால சிறிசேனவும் ஆலோசிப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறானதொரு நிலையில் தேர்தலை பிற்போடுமாறு ரணில் விக்கிரமசிங்க முன்வைத்த யோசனையை சாதகமாகப் பயன்படுத்தி மைத்திரிபால சிறிசேன தனது கட்சியின் மூத்த உறுப்பினர்களோடு ஆலோசிப்பதாகக் கூறப்படுகின்றது.

எவ்வாறாயினும் 19 ஆவது திருத்தச் சட்டத்திற்கு அமைவாக ஜனாதிபதித் தேர்தலை ஜனவரி எட்டாம் திகதிக்கு முன்னதாக நடத்த வேண்டும். ஆகவே மாற்று வழிகள் குறித்து இலங்கைச் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் மைத்திரிபால சிறிசேன ஆலோசிப்பதாகவும் உயர்மட்டத் தகவல்கள் கூறுகின்றன.

கோட்டாபய ராஜபக்சவை ஆதரிக்க முடியாதென மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளதால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து ஸ்ரீலங்காப் பொதுஜன பெரமுனக் கட்சியோடு இணைந்துள்ள உறுப்பினர்களின் உறுப்புரிமையை நீக்குவது தொடர்பாகவும் மைத்திரிபால சிறிசேன ஆலோசிக்கின்றார். இன்று வியாழக்கிழமை கட்சியின் முக்கிய பதவிகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

அதேபோன்று சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிப்பதில்லை என்ற முடிவோடு கட்சியின் உறுப்புரிமையில் இருந்து சஜித் பிரேமதாசவையும் அவருக்கு ஆதரவான உறுப்பினர்களின் உறுப்புரிமையையும் நீக்குவது தொடர்பாகவும் ரணில் தீவிரமாக ஆலோசிக்கின்றார்.

அதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சிக்குள் பிளவுகள் ஏற்படாமல் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு இடம்பெறுமென கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் காசிம் இன்று வியாழக்கிழமை கொழும்பில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

இந்த நிலையில் ஸ்ரீலங்கா பொதுஜனப் பெருமனக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவாக வடக்குக் கிழக்குத் தமிழ் முஸ்லிம் மக்களின் ஆதரவைப் பெறும் நோக்கில், சிறப்புக்குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாக உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.

ஆனால் கோட்டாபய ராஜபக்சவை மாத்திரமல்ல இலங்கை ஒற்றை ஆட்சி அரசின் ஆட்சியாளர்கள் எவரையுமே ஆதரிக்க முடியாதென யாழ் ஆயர் இல்லம் கொழும்பை மையமாகக் கொண்ட சிங்களக் கட்சிகளின் முகவர்களிடம் கூறியதாக உயர்மட்டத் தகவல்கள் கூறுகின்றன.

கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவாக தமிழ் மக்களிடம் சென்று பேசிய முன்னாள் அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸவிதாரனவிடம் யாழ்ப்பாணத்தில் உள்ள மூத்த ஊடகவியலாளர்கள் சிலர் எதிர்ப்பை வெளியிட்டதாக யாழ் ஊடக மையத் தகவல்கள் கூறுகின்றன.