இலங்கை ஜனாதிபதித் தேர்தல்

ரணிலுடன் 22 வெளிநாட்டுத் தூதுவர்கள் உரையாடல்

ரவி கருணாநாயக்காவின் ஏற்பாட்டில் கொழும்பில் இரவு விருந்துபசாரம்
பதிப்பு: 2019 ஓகஸ்ட் 30 11:47
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: செப். 01 00:09
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#PresPollSL
#LKA
இலங்கையில் எதிர்வரும் டிசம்பர் மாதம் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுமா இல்லையா என்ற சந்தேகங்களின் மத்தியில் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி ஜனாதிபதி வேட்பாளரைத் தெரிவு செய்வதில் இழுபறி நிலையை எதிர்நோக்கியுள்ளது. கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்க முடியாதென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதியாகவுள்ளார். இந்த நிலையில், கொழும்பில் உள்ள வெளிநாட்டுத் தூதுவர்கள் ரணில் விக்கிரமசிங்கவுடன் சந்தித்துப் பேசியுள்ளனர். கட்சியின் மூத்த உறுப்பினர் அமைச்சர் ரவி கருணாநாயக்காவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இராப்போசன விருந்துபசாரம் ஒன்றில் இந்த உரையாடல் இடம்பெற்றது.
 
ரவி கருணாநாயக்காவி்ன் கொழும்பில் உள்ள இல்லத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற இந்த இரவு விருந்துபசாரத்தில் கொழும்பில் உள்ள வெளிநாட்டுத் தூதுவர்கள் இருபத்து இரண்டுபேர் கலந்துகொண்டதாக உயர்மட்டத் தகவல்கள் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தன.

அமெரிக்கா, பிரித்தானியா, இந்தியா, கனடா, ஜப்பான் மற்றும் ஸ்கண்டிநேவிய நாடுகளின் தூதுவர்களும் விருந்துபசாரத்தில் கலந்து கொண்டு ரணில் விக்கிரமசிங்கவோடு ஜனாதிபதி வேட்பாளரைத் தெரிவு செய்வது குறித்து உரையாடியுள்ளனர்.

இந்த உரையாடலின்போது பூகோள அரசியல் செயற்பாடுகளை மையமாக் கொண்டு இலங்கை அரசியலின் தற்போதைய நிலைமை, ஜனாதிபதித் தேர்தல், உலகத்தின் புதிய பொருளாதாரம், அரசியல், சமூக மாற்றங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளன.

அமைச்சர் மங்கள சமரவீர அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் நெருங்கிய நண்பனாக இருந்தபோதும் இந்த விருந்துபசாரத்திலும் சந்திப்பிலும் அவர் கலந்து கொள்ளவில்லை. ஏனெனில் அமைச்சர் மங்கள சமரவீர சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க வேண்டுமென வலியுறுத்தி வருகின்றார்.

புதன்கிழமை இரவு இடம்பெற்ற இராப் போசன விருந்துபசாரத்தில் கலந்து கொண்ட அமெரிக்க. இந்திய ஜப்பான் தூதரகங்களின் பிரதிநிதிகள் ஐக்கிய தேசியக் கட்சி பொருத்தமான ஒருவரை வேட்பாளராக நியமிக்க வேண்டுமென வலியுறுத்தியதாக கட்சியின் மூத்த உறுப்பினர் ஒருவர் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார்.

மகிந்த ராஜபக்சவைத் தலைவராகக் கொண்ட ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளரும் அமெரிக்க இராணுவத் தலைமையகமான பென்ரகனோடு நேரடித் தொடர்புகளை வைத்திருப்பவருமான கோட்டாபய ராஜபக்சவுக்குக் கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் ஏலவே ஆதரவை வழங்கியிருந்தது.

இந்த நிலையில் ரவி கருணாநாயக்காவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இராப்போசன விருந்துபசாரத்தில் கலந்துகொண்ட அமெரிக்கத் தூதரகப் பிரதிநிதியொருவர் ஐக்கிய தேசியக் கட்சி பொருத்தமான வேட்பாளர் ஒருவரை நியமிக்க வேண்டுமெனக் கூறியுள்ளார்.

ஆனாலும் இது குறித்துக் கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் இதுவரை அதிகாரபூர்வமாக எந்தவொரு செய்தி ஊடகங்களுக்கும் கருத்து வெளியிடவில்லை. மக்கள் ஆதரவுடன் ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயக ரீதியாகத் தெரிவாகும் எந்தவொரு வேட்பாளரையும் அமெரிக்கா ஆதரிக்குமென அமெரிக்கத் தூதுவர் அலெய்னா ஏலவே கொழும்பில் கூறியிருந்தார்.

எனினும் கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக வருவதையே அமெரிக்கப் பென்ரகன் விரும்புவதாக கொழும்பு உயர்மட்ட அரசியல் தகவல்கள் கூறுகின்றன.

இந்தோ பசுபிக் பிராந்தியத்தில் தமது பூகோள அரசியல் தேவைகளுக்காக இலங்கை அரசியல் அதிகாரத்தில் செல்வாக்குச் செலுத்தி வரும் கண்டி பௌத்த மகாநாயகத் தேரர்களோடும் கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் ஏற்கனவே தொடர்புகளை பேண ஆரம்பித்துள்ளது.

இலங்கை நாடாளுமன்றத்தின் சபாநாயகரும் ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினருமான கரு ஜயசூரிவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிப்பது குறித்து ரணில் விக்கிரமசிங்க கட்சியின் மத்திய குழுவில் ஆலோசித்தவேளை, கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவர் அலெய்னா கடந்த மாதம் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.