காணாமல் போனோரை நினைவு கூரும் சர்வதேச நாள் இன்று-

சர்வதேச நீதி கோரி தாயகப் பிரதேசங்களில் போராட்டங்கள்

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், பொது அமைப்புகள் பங்கேற்பு
பதிப்பு: 2019 ஓகஸ்ட் 30 14:39
புலம்: கிளிநொச்சி. ஈழம்
புதுப்பிப்பு: ஓகஸ்ட் 30 19:49
main photo main photo main photo main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#OMPSL
#Tamil
#LKA
காணாமல் ஆக்கப்பட்டோரை நினைவு கூரும் சர்வதேச நாளான இன்று வெள்ளிக்கிழமை இலங்கைப் படையினரால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கம் வடக்குக் கிழக்குத் தாயகப் பகுதிகளில் போராட்டங்களை நடத்தியுள்ளது. வவுனியா பன்றிக்கெய்த குளம் பிள்ளையார் ஆலயத்தில் காலை 10.30க்குத் தேங்காய் உடைத்து வழிபாட்டில் ஈடுபட்ட உறவினர் சங்கப் பிரதிநிதிகள், பின்னர் ஆலய முன்றலில் இருந்து ஓமந்தை இறம்பைக்குளம் வரை பேரணியாகச் சென்றனர். வடமாகாணத்தில் உள்ள பொது அமைப்புகள் அனைத்தும் இந்தப் பேரணியில் கலந்துகொண்டன. கிழக்கு மாகாணம் அம்பாறை கல்முனை தரவைப்பிள்ளையார் ஆலயத்தில் பூசைகளுடன் ஆரம்பமான வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் பேரணி கல்முனை பிரதான வீதியூடாகக் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் வரை சென்றது.
 
அங்கு கல்முனை வடக்குப் பிரதேசச் செயலாளர் ரீ.ஜெ.அதிசயராஜ் மகஜரைப் பெற்றுக் கொண்டார். கிழக்கு மாகாணத்தை சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், உறவினர்கள், பொது அமைப்புக்கள், பொதுமக்கள் எனப் பலரும் பங்குபற்றித் தமது ஆதங்கங்களை வெளிப்படுத்தினர்.

Batti
கிழக்கு மாகாணம் அம்பாறை கல்முனைப் பிரதேசத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கவனயீர்ப்புப் போராட்டத்தின்போது எடுக்கப்பட்ட படம் இது. போர் நடைபெற்றபோது இலங்கை ஒற்றையாட்சி அரசுக்கு கனரக ஆயுதங்களை வழங்கி உதவியளித்த சர்வதேச சமூகம், இலங்கைப் படையினரால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் நீதியைப் பெற்றுத்தர வேண்டுமெனவும் பொறுப்புக் கூறுமாறும் வலியுறுத்தப்பட்டது. இலங்கைப் படையினரால் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்ட நூற்றுக்கும் அதிகமான பிள்ளைகள், கணவன்மாரை மீட்டுத் தருமாறு கோரி கடந்த மூன்று ஆண்டுகளாகத் தொடர்ச்சியாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் உறவினர் சங்கப் பிரதிநிதிகள், காணாமல் போனோரை நினைவு கூரும் சர்வதேச நாளான இன்று வடக்குக்- கிழக்குத் தாயகப் பிரதேசங்களில் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
right photo
கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலிலும் இன்று போராட்டம் இடம்பெற்றது. தீச்சட்டி எடுக்கப்பட்டு தேங்காய் உடைத்து வழிபாடுகளுடன் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

நீதி கோரி பத்து வருடங்களாகப் போராட்டத்தை முன்னெடுத்து வருவதாகவும் கடந்த மூன்று ஆண்டுகளில் ஐம்பது பெற்றோர் தமது பிள்ளைகளைத் தேடிக் களைத்து நோய்வாய்ப்பட்டு இறுதியில் உயிரிழந்து விட்டதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர் சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

இலங்கை அரசாங்கத்திடம் பல மகஜர்களைக் கையளித்ததாகவும் விபரங்களை வழங்கியதாகவும் ஆனாலும் இதுவரை உரிய பதில் கிடைக்கவில்லை எனவும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் செய்தி ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டனர்.

ஜெனீவா மனித உரிமைச் சபை உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளைத் திருப்திப்படுத்த இலங்கை அரசாங்கம் காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் ஒன்றை அமைத்துள்ளது. ஆனால் அந்த அலுவலகத்தில் நம்பிக்கையில்லை என்றும் கூறிய உறவினர்கள், தமது விருப்பத்துக்கு மாறாக வடக்குக்- கிழக்குத் தாயகப் பகுதிகளில் கிளை அலுவலகங்களைத் திறந்து வருவதாகவும் குற்றம் சுமத்தினர்.

வடக்கில் கிளிநொச்சி, ஓமந்தை்ப் பிரதேசத்திலும் கிழக்கில் கல்முனையிலும் இடம்பெற்ற போராட்டத்தில் நூற்றுக்கும் அதிகமான உறவினர்களும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளும் பங்குபற்றியதாக ஏற்பாட்டாளர் ஒருவர் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார்.

இலங்கைப் புலனாய்வுத் துறையைச் சேர்ந்த சிலர் போராட்டம் நடைபெற்றபோது சிவில் உடைகளில் நின்று தம்மை அவதானித்ததாக ஏற்பாட்டாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.