காணாமல் போனோரை நினைவு கூரும் சர்வதேச நாள் இன்று-

வெளிநாட்டுத் தூதரகங்களில் மகஜர் கையளிப்பு- மைத்திரி- ரணில் மீது குற்றச்சாட்டு

கொழும்புக்கு அழைத்து வந்து ஏமாற்ற வேண்டாமென்கிறார் பிறிற்றோ பெர்ணாண்டோ
பதிப்பு: 2019 ஓகஸ்ட் 30 22:04
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: செப். 09 22:38
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#OMPSL
#Tamil
#LKA
#SriLanka
வடக்குக் கிழக்குத் தாயகப் பகுதிகளில் இலங்கை இராணுவத்தால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக இலங்கை அரசாங்கம் எந்தவொரு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லையெனக் கண்டித்து கொழும்பில் உள்ள வெளிநாட்டுத் தூதரகங்களிடம் மனித உரிமைச் செயற்பாட்டாளர் பிற்றோ பெர்ணாண்டோ மகஜர் கையளித்துள்ளார். காணாமல் போனோரை நினைவு கூரும் சர்வதேச நாளான இன்று வெள்ளிக்கிழமை அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டுத் தூதரகங்களில் இந்த மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது. 2009 ஆம் ஆண்டு மே மாதத்தில் இருந்து, இன்று பத்து ஆண்டுகள் சென்றுவிட்ட பின்னரான சூழலிலும் இலங்கை அரசாங்கம் காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் அக்கறையீனமாகச் செயற்படுவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
 
இலங்கை அரசாங்கம் அமைத்துள்ள காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றிய அலுவலகம் அதிகாரமற்றது என்றும் அவர் தனது மகஜரில் கூறியுள்ளார். சர்வதேச ஆதரவோடு 2015 ஆம் ஆண்டு பதவிக்கு வந்த மைத்திரி- ரணில் அரசாங்கத்தின் மீது அவர் கடும் விமர்சனங்களை முன்வைத்தார்.

Saliya pirris
கொழும்பை மையமாகக் கொண்டு செயற்படும் இலங்கை அரசாங்கத்தின் காணாமல் போனோர் பற்றிய அலுவலகம், சர்வதேச நாள் நிகழ்வை இன்று வெள்ளிக்கிழமை நடத்தியது. பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முன்னிலையில் அலுவலகத்தின் தலைவர் சட்டத்தரணி சாலிய பீரிஸ் உரையாற்றும்போது எடுக்கப்பட்ட படம் இது. தமது அலுவலகத்தின் செயற்பாட்டுக்குரிய தடைகள் பற்றியும் சாலிய பீரிஸ் தனது உரையில் வெளிப்படையாகக் கூறுகின்றார். இந்த அலுவலகம் 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் இயங்குகின்றது. இந்த அலுவலகத்தின் மீது தமக்கு நம்பிக்கையில்லையென இலங்கை இராணுவத்தால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கம் கூறுகின்றது. சர்வதேச நீதி விசாரணை ஒன்றையே கோருவதாகவும் ஆனால் இலங்கை அரசாங்கம் அதனைப் புறக்கணிப்பதாகவும் உறவினர்கள் குற்றம் சுமத்துகின்றனர். வவுனியாவில் தொள்ளாயிரம் நாட்களையும் கடந்து உறவினர்கள் சங்கம் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றது.
கொழும்பில் உள்ள வெளிநாட்டு அலுவலகங்களுக்குச் சென்று மகஜர் கையளிக்கும் போது அவருடன் சென்ற ஊடகவியலாளர்களை இலங்கைப் புலனாய்வுத் துறையினர் சிலர் படம் எடுத்ததாக மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

பிறிற்றோ பெர்ணாண்டோ காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்ப அங்கத்தவர்கள் சங்கத்தின் தலைவராகவும் கிறிஸ்தவ சமய விவகாரங்களுக்கான மனித உரிமைச் செயற்பாட்டாளராகவும் விளங்குகிறார்.

போர்க் காலங்களில் இலங்கை இராணுவத்தின் போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் போன்றவற்றையும் சர்வதேச அரங்கில் வெளிப்படுத்தியிருந்தார். இலங்கை ஆட்சியாளர்களின் செயற்பாடுகள் பற்றியும் இவர் கடுமையாக விமர்சித்து வருகின்றார்.

இதேவேளை, காணாமல் போனோரை நினைவு கூரும் சர்வதேச நாளான இன்று இலங்கை அரசாங்கத்தின் காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் கொழும்பில் நிகழ்வு ஒன்றை நடத்தியது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சிலரை வடக்குக்- கிழக்குப் பகுதிகளில் இருந்து அழைத்துச் சென்று இந்த நிகழ்வு நடத்தப்பட்டதாக உறவினர்கள் கூறுகின்றனர்.

நிகழ்வில் உரையாற்றிய இந்த அலுவலகத்தின் தலைவர் சட்டத்தரணி சாலிய பீரிஸ், காணாமல் போனோர் பற்றிய தகவல்கள் இலங்கைப் பாதுகாப்பு அமைச்சிடம் இருந்து கோரப்பட்டதாகவும், ஆனால் இதுவரை அந்தத் தகவல்கள் வழங்கப்படவில்லையெனவும் குற்றம் சுமத்தினார்.

காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தின் செயற்பாட்டுக்கு ஆட்சி அதிகாரத்திலுள்ளவர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்த நிகழ்வுக்கு அழைத்துச் செல்லப்பட்ட உறவினர்கள் சிலரை பிறிற்றோ பெர்ணாண்டோ சந்தித்து உரையாடினார். நிகழ்வுக்குச் சென்ற பிறிற்றோ பெர்ணாண்டோ, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை அழைத்து வந்து ஏமாற்ற வேண்டாமென்றும் கூறியதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

இலங்கை அரசாங்கத்தின் காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் 2016 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இலங்கை நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டிருந்தது. 2017 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் கொழும்பில் அலுவலகம் ஸ்தாபிக்கப்பட்டது.

2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தனது பணிகளை இந்த அலுவலகம் முழுமையாக ஆரம்பித்திருந்தது. 2018 ஆம் ஆண்டுக்கான வருடாந்த செலவாக 1.3 பில்லியன் (1.3 billion INR) நிதி இலங்கை நாடாளுமன்றத்தினால் ஒதுக்கப்பட்டிருந்தது.