வடக்குக் கிழக்குத் தாயகப் பிரதேசங்களில் மக்களிடம் கையளிக்கப்படும்

தமிழர்களுக்கான வீடமைப்புத் திட்டங்களில் சிங்கள மரபுரிமைகள்

சஜித் பிரேமதாசவின் திட்டமிடப்பட்ட நடவடிக்கையெனத் தெரிவிப்பு
பதிப்பு: 2019 செப். 01 23:09
புலம்: மட்டக்களப்பு, ஈழம்
புதுப்பிப்பு: செப். 20 22:41
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
எதிர்வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக நியமிக்கப்படுவாரென எதிர்பார்க்கப்படும் கட்சியின் பிரதித் தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாச, வடக்குக் கிழக்குத் தமிழர் தாயகப் பிரதேசங்களில் சிங்கள பௌத்த மரபுரிமைகளை வெளிப்படுத்தி வீடமைப்புத் திட்டங்களை மேற்கொண்டு வருகிறார். தனது வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சின் மூலமாகவே இவ்வாறான சிங்கள மரபுரிமைகளை வெளிப்படுத்தி வருவதாக வீடுகளைப் பெற்றுக்கொள்ளும் மக்கள் கூறுகின்றனர். கம்முதாவ செமட்ட செவன என்று சிங்களத்தில் பெயரிடப்பட்டுள்ள வீடமைப்புத் திட்டத்தின் மற்றுமொரு பகுதி மட்டக்களப்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
 
மட்டக்களப்பு மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தாந்தாமலை, மாவடி முன்மாரி ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்ட 269ஆவது, 270ஆவது வீடமைப்புத் திட்டங்கள் மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.

தாந்தா மலைப் பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட குமரன் குடியிருப்பு, மாவடி முன்மாரியில் அமைக்கப்பட்ட காளிகாபுரம் குடியிருப்பு ஆகியவற்றை அமைச்சர் சஜித் பிரேமதாச அதிகாரபூர்வமாகத் திறந்துவைத்தார்.

நிகழ்வில் ஐக்கிய தேசியக் கட்சியின் பட்டிருப்புத் தொகுதியின் அமைப்பாளர் சோ.கணேசமூர்த்தி, மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந், மண்முனை தென் மேற்கு பிரதேச செயலாளர் திருமதி தட்சணகௌரி தினேஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

கட்டிமுடிக்கப்பட்ட ஐம்பது வீடுகளும் அமைந்துள்ள வளாகத்தில் நாட்டப்பட்டுள்ள நினைவுக் கல்லில் சிங்கள பௌத்த மரபுரிமைகளான சந்திவட்டக்கல், பௌத்த சமயத்தை அடையாளப்படுத்தும் வடிவங்கள் நினைவுக் கல்லில் பொறிக்கப்பட்டுள்ளன.

தமிழ் மக்கள் வாழும் இடங்களில் அமைக்கப்படும் வீட்டுத் திட்டங்களில் தமிழர் மரபுரிமைகளுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். ஆனால் பிரதேச அபிவிருத்தி, அனைவருக்கும் வீ;டுகள் என்ற பெயரில் சிங்களச் சொல்லாடல்களும் சிங்கள மரபுரிமைகளும் தமிழ் மக்கள் மத்தியில் வலிந்து திணிக்கப்படுவதாக மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார், ஆகிய மாவட்டங்களில் உள்ள பல கிராமங்களிலும் ஏற்கனவே திறந்து வைக்கப்பட்ட வீடமைப்புத் திட்டங்களுக்கான நினைவுக் கல்லில் சிங்கள மரபுரிமைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பட்டிருந்ததை கூர்மைச் செய்தித் தளம் சுட்டிக்காட்டியிருந்தது.

அமைச்சர் சஜித் பிரேமதாசவின் அமைச்சின் கீழ் செயற்படும் தேசிய வீடமைப்பு அதிகார சபை இந்த வீடமைப்புத் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.

.