ஜனாதிபதித் தேர்தல் நெருங்கும் நிலையில்- இலங்கை

ஒற்றையாட்சி அரசின் புதிய அரசியல் யாப்பு- மைத்திரி- ரணில் மோதல்

அதிகாரப் பங்கீடு எதுவுமே இல்லாத நிலையில் தமிழர்களுக்காக இருவரும் நீலிக் கண்ணீர்
பதிப்பு: 2019 செப். 03 18:26
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: செப். 04 00:46
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#PresPollSL
#LKA
மைத்திரி- ரணில் அரசாங்கம் உருவாக்கிய புதிய அரசியல் யாப்பில் இனப்பிரச்சனைக்குத் தீர்வு இல்லை என்றும் வடக்குக் கிழக்கு இணைந்த சுயாட்சியோடு கூடிய அதிகாரப் பங்கீடுகள் பற்றிய பேச்சுக்களுக்கே இடமில்லை எனவும் தமிழ்த் தரப்பு இலங்கை அரசாங்கத்தின் மீது பகிரங்கமாகவே குற்றம் சுமத்தி வருகின்றது. இந்த நிலையில், தமிழ் மக்களின் அரசியல் பிரச்சனைக்கான தீர்வு உள்ளிட்ட புதிய அரசியல் யாப்பை ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கமே நடைமுறைப்படுத்தத் தடையாக உள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றம் சுமத்தியுள்ளார்.மறுபுறத்தில் மைத்திரிபால சிறிசேனவே தடுத்ததாக ரணில் விக்கிரமசிங்கவும் அவர் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியும் வடக்குக்-கிழக்குத் தாயகப் பிரதேசத்தில் பிரச்சாரம் செய்து வருகின்றது.
 
இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 68 ஆவது தேசிய மாநாட்டில் உரையாற்றிய மைத்திரிபால சிறிசேன, தமிழ் மக்களை ரணில் விக்கிரமசிங்க ஏமாற்றியுள்ளதாகக் கூறியுள்ளார்.

SLFP
இலங்கையில் ஒற்றையாட்சிக் கட்டமைப்பை வலியுறுத்தி வரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 68 ஆவது தேசிய மாநாட்டில், கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன கட்சியின் மூத்த உறுப்பினர்களோடு மேடையில் நின்று மக்களுக்குக் கையசைத்தபோது எடுக்கப்பட்ட படம் இது. மாநாட்டில் உரையாற்றிய மைத்திரிபால சிறிசேன, சிங்கள பௌத்த தேசியத்தைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் குறித்து அறிவுறுத்தியிருந்தார். ஜனாதிபதித் தேர்தலைவிட நாடாளுமன்றத் தேர்தலே முக்கியமானது என்றும் 19 ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் பிரதமர் பதவி மாத்திரமே அதிகாரமுள்ளதாகவும் கூறிய அவர், 2020 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிரதமர் தலைமையிலான அரசாங்கத்தை அமைக்கும் என்றும் தெரிவித்தார். கொழும்பு சுகதாச உள்ளரங்க விளையாட்டு மைத்தானத்தில் இடம்பெற்ற மாநாட்டில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவும் பங்குபற்றியிருந்தார்.
right photo
ஆனால் புதிய அரசியலமைப்பு உருவாக்கல் பணிகளுக்கான முயற்சிகள் தடைப்பட்டுள்ளதாக மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட கருத்தை சட்டத்தரணி லால் விஜேநாயக்க கண்டித்துள்ளார்.

புதிய அரசியல் யாப்புத் தொடர்பாக தனக்கு எதுவுமே தெரியாதென மைத்திரிபால சிறிசேன ஆரம்பத்தில் கூறியிருந்தார். ஆனால் ரணில் விக்கிரமசிங்கவே தடுப்பதாகத் தற்போது கூறுகிறார். ஆகவே மைத்திரிபால சிறிசேன மாறி மாறி இவ்வாறு கூறுவதைக் கண்டிப்பதாகவும் லால் விஜேநாயக்கா தெரிவித்து்ள்ளார்.

புதிய யாப்புக்கான மக்கள் கருத்தறியும் குழுவின் தலைவரான சட்டத்தரணி லால் விஜேநாயக்கா, புதிய அரசியல் யாப்பில் இனப்பிரச்சனைக்கான தீர்வு இருப்பதாகவும் கொழும்பில் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கூறியுள்ளார்.

இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு ஜனாதிபதியை மையப்படுத்திய வழிகாட்டல் குழு புதிய யாப்புப் பற்றி ஆராய்ந்துள்ளது எனவும் அடுத்த ஆண்டு பதவியேற்கவுள்ள புதிய அரசாங்கம் அதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் லால் விஜேநாயக்கா தெரிவித்துள்ளார்.

அதேவேளை, ஒற்றையாட்சி அரசியல் யாப்பின் பிரகாரமே இனப்பிரச்சினைக்குத் தீர்வை முன்வைக்க முடியும் என்றும் சமஸ்டி ஆட்சி முறையை ஏற்க முடியாதெனவும் லால் விஜேநாயக்கா தமிழ் மக்கள் பேரவையிடம் 2017 ஆம் ஆண்டு கூறியிருந்தார்.

தமிழ் மக்களின் அரசியல் விடுதலை தொடர்பான தீர்வுப் பொதி ஒன்றை தமிழ் மக்கள் பேரவை புதிய யாப்புக்கான மக்கள் கருத்தறியும் குழுவின் தலைவரான சட்டத்தரணி லால் விஜேநாயக்காவிடம் 2017 ஆம் ஆண்டு மே மாதம் கொழும்பில் கையளித்திருந்தது.

அந்தத் தீர்வுப் பொதியைப் பெற்றுக் கொண்ட லால் விஜேநாயக்கா ஒற்றையாட்சி அரசியலமைப்பையே வலியுறுத்தியிருந்ததாக கஜேந்திரகுமார், நீதியரசர் விக்னேஸ்வரன் ஆகியோரின் இணைத் தலைமையிலான தமிழ் மக்கள் பேரவை அப்போது கூறியிருந்தது.

அத்துடன் வடக்குக்- கிழக்கில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பின் மூலம் தமிழ் மக்கள் சமஷ்டியை விரும்பவில்லை என்றும் ஒற்றையாட்சிக் கட்டமைப்புக்குள் வாழ விரும்பியதாகவும் லால் விஜேநாயக்கா தம்மிடம் கூறியதாகவும் தமிழ் மக்கள் பேரவை தெரிவித்திருந்தது.

ஆகவே லால் விஜேநாயக்கா ஒற்றையாட்சிச் சிந்தனையோடு செயற்படுகிறார் என்றும் தமிழ் மக்கள் பேரவை அப்போது குற்றம் சுமத்தியிருந்தது.

புதிய அரசியல் யாப்பு ஒற்றையாட்சி்த் தன்மை கொண்டிருந்தாலும் அதற்குள் தமிழ் மக்களுக்கான சமஷ்டி ஆட்சி முறை இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சட்டத்தரணி சுமந்திரன் இலங்கை நாடாளுமன்றத்தில், 2017 ஆம் ஆண்டு மே மாதம் இடம்பெற்ற புதிய அரசியல் யாப்புத் தொடர்பான விவாதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

அதேவேளை. புதிய அரசியல் யாப்பை நடைமுறைப்படுத்த இன்னமும் காலம் போகவில்லை. மைத்திாிபால சிறிசேன அதனைச் செய்ய முடியும் என்று சுமந்திரன் கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் கூறியிருந்தார்.

மைத்திரிபால சிறிசேனவை புதிய யாப்பு விடயத்தில் நம்புவதாகவும் சுமந்திரன் கூறினார். ஆனால் புதிய யாப்புத் தடைப்பட்டமைக்குக் காரணம் மைத்திரிபால சிறிசேனவே என்று தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிரா கடந்த ஞாயிற்றுக்கிழமை வடமராட்சி புலோலிப் பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வில் தெரிவித்திருந்தார்.