வடமாகாணம் கிளிநொச்சி

பூநகரி பல்லவராயன்கட்டுச் சோலைப் பிரதேச மக்களின் பரிதாபம்

குடிநீர், சுகாதார வசதிகளின்றித் தவிப்பதாகக் கூறுகின்றனர்.
பதிப்பு: 2019 செப். 06 16:16
புலம்: கிளிநொச்சி, ஈழம்
புதுப்பிப்பு: செப். 20 22:42
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#kilinochchi
#eelam
#lka
#tamil
வடமாகாணம் கிளிநொச்சி பூநகரி பிரதேச சபைக்குட்பட்ட பல்லவராயன்கட்டுச் சோலைக் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் நீண்டகாலமாக இடம்பெயர்ந்து வேறு பிரதேசங்களில் வாழ்ந்து வந்தனர். போரினால் பாதிக்கப்பட்ட நிலையில் 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் தமது கிராமங்களில் மீள் குடியேறினர். ஆனால் பத்து வருடங்கள் சென்ற நிலையிலும் இதுவரை அடிப்படை வசதிகள் எதுவும் இன்றி அவதியுறுவதாக அவர்கள் முறையிட்டுள்ளனர். கொழும்பில் உள்ள இலங்கை அரச அதிகாரிகள் தொடர்ச்சியாகப் புறக்கணித்து வருவதாக அரசசார்பற்ற நிறுவனம் ஒன்று ஒழுங்கு செய்த மக்கள் கருத்து கேட்கும் நிகழ்சியில் இவ்வாறு மக்கள் தெரிவித்துள்ளனர். போக்குவரத்து வசதிகள் இல்லையெனவும் மக்கள் குறை கூறினர்.
 
சுத்தமான குடிநீர், சுகாதார வசதிகள் கூட இல்லையெனவும் தொழில் நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பதற்குரிய ஏற்பாடுகள் எதுவுமேஇல்லை எனவும் மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

போரினால் இடம்பெயர்ந்த பல்லவராயன்கட்டுச் சோலை கிராமத்தைச் சேர்ந்த மக்கள், தற்காலிகமாக ஆணைவிழுந்தான், கந்தபுரம், கோணாவில் முறிப்பு விஸ்வமடு, இருட்டுமடு ஆகிய கிராமங்களில் குடியமர்த்தப்பட்டிருந்தனர்.

2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் இலங்கை அரசாங்கம் இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்தும் நடவடிக்கைகளை ஆரம்பித்திருந்த போது இந்தக் கிராமத்தைச் சேர்ந்த மக்களும் மீளக் குடியமர்த்தப்பட்டிருந்தனர்.

மீளக்குடியமர்த்தப்பட்டபோது அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படுமென இலங்கை அரச அதிகாரிகள் உறுதியளித்திருந்தனர். நிவாரணங்களும் வழங்கப்படுமென்றும் கூறப்பட்டிருந்ததாக மக்கள் தெரிவித்தனர்.

ஆனால் மீள்குடியேறி 10 வருடங்கள் சென்ற நிலையிலும் தங்கள் கிராமத்துக்குச் சென்று வருவதற்கான சீரான போக்குவரத்துக்கள் கூட இல்லை என்றும் அடிப்படை சுகாதார வசதிகள், சுத்தமான குடிநீர் எதுவுமே இல்லை எனவும் இது பற்றி பல தடவைகள் உரிய அதிகாரிகளிடம் முறையிட்டிருந்ததாகவும் பல்லவராயன் கட்டு மக்கள் கூறினர்.

காட்டு யானைகளின் தொல்லை தாங்க முடியாதென்றும் பயிர்ச் செய்கைகளை யானைகள் நாசம் செய்வதாகவும் கூறிய மக்கள் இரவு நேரங்களில் அச்சத்துடன் இருப்பதாகவும் மின்சார வசதிகள் கூட இல்லையெனவும் கூறியுள்ளனர்.

மாணவர்கள் பத்துக் கிலோ மீற்றருக்கும் அதிகமான தூரம் காட்டு பாதைகள் மூலம் நடந்து சென்றே பாடசாலைக்குச் செல்ல வேண்டுமெனவும் குறிப்பாக ஆண்டு ஐந்து படிக்கும் மாணவர்கள் இதனால் பாதிக்கப்படுவதாகவும் மக்கள் கவலை வெளியிட்டனர்.