இலங்கை ஜனாதிபதித் தேர்தல்-

ரணில் வேட்பாளராக அறிவிப்பு- மைத்திரி- சஜித் புதிய அரசியல் கூட்டு?

பிரதான சிங்கள அரசியல் கட்சிகளிடையே பிளவுகள், குழப்பங்கள் அதிகரிப்பு
பதிப்பு: 2019 செப். 06 21:53
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: செப். 08 22:35
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#PresPollSL
#LKA
#ranilwickremesinghe
#SajithPremadasa
நடைபெறவுள்ள இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிடவுள்ளதாக கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார். இன்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் இந்த அறிவிப்பை ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டார். கட்சியில் இருந்து போட்டியிட வேறு மூத்த உறுப்பினர்கள் யாரும் சவால் விடுத்தால் அது குறித்து கட்சியின் மத்திய குழுவில் பேசி முடிவு எடுக்கப்படும் எனவும் ரணில் விக்கிரமசிங்க கூறினார். ஆனால் இதற்கு எதிர்ப்பு வெளியிட்ட கட்சியின் மூத்த உறுப்பினர்கள் சிலர் சஜித் பிரேமதாசவின் கூட்டங்களுக்கு அதிகளவு மக்கள் வருவதால் அவரையே வேட்பாளராக நியமிக்க வேண்டுமெனக் கேட்டுக் கொண்டனர்.
 
இதனால் மத்திய குழு உறுப்பினர்களிடையே வாய்த்தர்க்கம் எழுந்தது. கட்சியின் மூத்த உறுப்பினர்களான அமைச்சர்கள் கபீர் ஹாசிம், மலிக் சமரவிக்ரம, ரஞ்ஜித் மத்தும பண்டார ஆகியோர், ரணில் விக்கிரமசிங்கவின் அறிவிப்புக்கு எதிராகக் கருத்துக் கூறினர். சஜித் பிரேமதாசவின் கூட்டங்களுக்கு அதிகளவு மக்கள் வருவதாகவும் கூறினர்.

இதன்போது கருத்து வெளியிட்ட அமைச்சர் தயா கமகே, போட்டியிடுவதற்கான நிலைப்பாட்டை ரணில் விக்கிரமசிங்க உத்தியோகபூர்வமாக அறிவித்த பின்னர் அவருடைய கூட்டங்களுக்கும் அதிகளவான மக்கள் வருவார்கள் எனக் தெரிவித்தார்.

வாக்குவாதங்களுக்கு மத்தியிலும் ரணில் விக்கிரமசிங்கவே ஜனாதிபதி வேட்பாளரென கட்சியின் மத்திய குழு முடிவு செய்துள்ளது. விரைவில் அதிகாரபூர்வமாக மக்களுக்கு அறிவிக்கப்படுமென ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினர் அமைச்சர் லக்ஸ்மான் கிரியெல்ல கொழும்பில் செய்தியாளர்களிடம் கூறினார்.

இதேவேளை, சஜித் பிரேமதாச ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து வெளியேறாமலேயே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மையப்படுத்தி புதிய அரசியல் கூட்டணி ஒன்றை உருவாக்கி ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடக் கூடிய வாய்புள்ளதாகக் கொழும்பு அரசியல் தகவல்கள் கூறுகின்றன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமென கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர நேற்று வியாழக்கிழமை இரவு இலங்கைச் சுயாதீனத் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் ரணில் விக்கிரமசிங்கவின் அறிவிப்பால் அதிருப்தியடைந்தள்ள சஜித் பிரேமதாசவும் அவருக்கு ஆதரவான கட்சி உறுப்பினர்களும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மையப்படுத்திய புதிய அரசியல் அணியில் இணைந்து போட்டியிடக் கூடுமென கொழும்பு அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மையப்படுத்திய புதிய அரசியல் அணியின் பொது வேட்பாளராக சஜித் பிரேமதாசவை போட்டியிடவைக்க மைத்திரிபால சிறிசேன முயற்சிப்பதாக கூர்மைச் செய்தித் தளம் ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.