தமிழ் பேசும் கிழக்கு மாகாணம் மட்டக்களப்புத் தரவை

நீர்பாசனத் திணைக்களக் கட்டடத்தில் இராணுவம்- விவசாயிகள் பாதிப்பு

விடுதியாகவும் தமது இருப்பிடமாகவும் பயன்படுத்துவதாக விவசாயிகள் குற்றச்சாட்டு
பதிப்பு: 2019 செப். 09 18:38
புலம்: மட்டக்களப்பு, ஈழம்
புதுப்பிப்பு: செப். 10 19:43
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#slmilitary
#batticaloa
#lka
#tamil
கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு தரவை பகுதியில் நிலைகொண்டுள்ள இலங்கை இராணுவத்தினர் விவசாய நீர்பாசனத் திணைக்களகத்திற்குச் சொந்தமான அலுவலகத்தைக் கையளிக்காமல் தங்கள் சொந்தத் தேவைக்காக பயன்படுத்தி வருகின்றனர். இதனால் போரினால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் பெரும் சிரமத்தின் மத்தியில் தமது சேவைகளை நிறைவேற்றிக் கொள்வதாக விவசாய அமைப்புக்கள் தெரிவி்த்துள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கிரான் கமநல நிலையத்திற்குரிய சுமார் 25 விவசாய அமைப்புக்களில் ஆயிரத்தி 500 விவசாயிகள் பயன்படுத்தும் விவசாய நீர்ப்பாசன திணைக்களகத்தின் அலுவலகக் கட்டடமே இராணுவ உயர் அதிகாரியின் தங்குமிடமாக பயன்படுத்தப்படுகின்றது.
 
இதனால் குடும்பிமலை, மியான்குளம், தரவை, சின்ன மியாங்குளம், பேரில்லாவெளி, குழாவடி, போன்ற கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் சுமார் 15 கிலோமீற்றர் தூரம் சென்று கிரானில் தமது கடமைகளை நிறைவேற்றிக் கொள்வதாக தெரிவிக்கின்றனர்.

2007ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தை இலங்கை இராணுவம் ஆக்கிரமித்த பின்னர் விடுதலைப் புலிகளின் துயிலும் இல்லம் அமைந்துள்ள பகுதியில் நிலை கொண்டுள்ள 232 ஆவது ஆட்லறி படைப் பிரிவின் உயிர் அதிகாரியின் விடுதியாக நீர்ப்பாசன அலுவலக கட்டடம் பயன்படுத்தப்படுகிறது.

இந்த அலுவலகக் கட்டடத்தை இராணுவத்திடம் இருந்து மீட்டெடுத்து விவசாயிகளுக்கான சேவையை தங்கள் பகுதியில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாய அமைப்புக்கள் நீர்ப்பானச திணைக்களத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதேவேளை, தரவை, அல்லி ஓடைச் சந்தி ஆகிய பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமில் உள்ள இராணுவத்தின் உறவினர்கள் மற்றும் சிங்கள மக்கள் இப்பகுதிக்குச் சுற்றுலாப் பயனிகளாக வருகைதரும் போது இந்த அலுவலகக் கட்டடங்கள் தங்குமிடத்திற்காகப் பயன்படுத்தப்படுவதாகவும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் முறையிட்டுள்ளனர்.