வடக்குக் கிழக்கு

ஈழத் தமிழர் மரபுரிமைக் கைத்தொழில் உற்பத்திகள்- கிளிநொச்சியில் கண்காட்சி

பெண் தலைமைக் குடும்பங்களை ஊக்குவிக்க முயற்சி
பதிப்பு: 2019 செப். 07 23:05
புலம்: கிளிநொச்சி, ஈழம்
புதுப்பிப்பு: செப். 20 22:35
main photo main photo main photo main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#heritage
#lka
#tamil
வடக்குக்- கிழக்குத் தாயகப் பகுதிகளில் போருக்குப் பின்னரான நிலையில், உள்ளூர் வளங்களைக் கொண்டு உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் அதிகளவாகக் காணப்பட்டாலும் அவற்றை ஊக்குவிப்பதற்குப் போதிய ஏற்பாடுகள் இல்லையெனக் குற்றம் சுமத்தப்பட்டு வந்தது. வடமாகாண சபை 2013 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் முதன் முதலாக செயற்பட ஆரம்பித்ததும் உள்ளூர் உற்பத்திப் பொருட்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வந்தது. இலங்கை அரசாங்கமும் திட்டமிட்ட முறையில் வடக்குக்- கிழக்கு உற்பத்திப் பொருட்களை கொழும்புக்கும் வெளிநாடுகளுக்கும் கணிசமான அளவு ஏற்றுமதி செய்து வருகின்றது.
 
ஆனாலும் அதன் மூலம் கிடைக்கும் வருமானங்களை மீளவும் வடக்குக்- கிழக்குப் பகுதிகளில் உள்ளூர் உறபத்தியாளர்களின் வளர்ச்சிக்காகப் பயன்படுத்துவதில்லையென நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குற்றம் சுமத்தியிருந்தார்.

இலங்கை நாடாளுமன்றத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இடம்பெற்ற வரவுசெலவுத் திட்ட விவாதத்தில் வடக்குக் கிழக்கு உற்பத்திப் பொருட்களுக்கு இலங்கை அரசாங்கம் உரிய பெறுமதிகளை வழங்க வேண்டுமென தமிழரசுக் கட்சித் தலைவர் சம்பந்தன் கோரிக்கையும் விடுத்திருந்தார்.

ஆனால் இதுவரையும் இலங்கை அரசாங்கம் உரிய நடவடிக்கை எதனையும் எடுக்கவில்லை. இந்த நிலையில் பெண் சிறுகைத் தொழில் உற்பத்தியாளர்களின் உற்பத்திப் பொருட்களின் கண்காட்சியில் ஈழத் தமிழர்களின் பண்பாட்டைச் சித்தரிக்கும் உணவுகள் கைத்தொழில் உற்பத்திப் பொருட்கள் காணப்பட்டன.

இன்று சனிக்கிழமை கிளிநொச்சியில் இடம்பெற்ற இந்தக் கண்காட்சி காலை 9.30க்கு ஆரம்பமாகியது. கரைச்சி, பூநகரி பிரதேசத்தில் பெண் கைத் தொழிலாளர்களினால் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களே கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தன.

போரினால் பாதிக்கப்பட்ட இந்தப் பெண்கள் செய்த உற்பத்திப் பொருட்கள் விற்பனையும் செய்யப்பட்டன. தனியார் பொது அமைப்புகளின் ஏற்பாட்டிலும் நிதியுதவிகளினாலும் இந்த உற்பத்திப் பொருட்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தனர்.

போரினால் பாதிக்கப்பட்ட பெண்களையும் குறிப்பாக பெண் தலைமைத்துவக் குடும்பங்களையும் மையமாகக் கொண்டு ஈழத் தமிழர் மரபுவழி உணவுப் பொருட்கள், மரபுரிமைகளை வெளிப்படுத்தும் கைப்பணிப் பொருட்கள் ஆகியவற்றை உள்ளூர் வளங்களைக் கொண்டே உற்பத்தி செய்து சந்தைகளில் விற்பனை செய்வதே தமது நோக்கம் எனவும் ஏற்பாட்டாளர்கள் கூறினர்.