இலங்கை ஜனாதிபதித் தேர்தல்

மைத்திரி- சஜித் தொலைபேசி உரையாடல்- ரணில் அதிருப்தி

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய அரசியல் அணியில் போட்டியிடுவாரா சஜித்?
பதிப்பு: 2019 செப். 08 22:10
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: செப். 13 16:05
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#PresPollSL
#LKA
#SajithPremadasa
நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிடவுள்ளதாக அதன் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடந்த ஆறாம் திகதி வெள்ளிக்கிழமை அறிவித்த பின்னர் அதிருப்தியடைந்துள்ள கட்சியின் பிரதித் தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாச, மாற்று நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்து வருகின்றார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய அரசியல் கூட்டணியில் இணைந்து எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக சஜித் போட்டியிடுவாரென ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்தன. இந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொலைபேசியில் சஜித் பிரேமதாசாவுடன் உரையாடியுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய அரசியல் அணியில் இணையுமாறு மைத்திரிபால சிறிசேன கேட்டுள்ளதாக உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.
 
சஜித் பிரேமதாசவுடன் சுமார் பதினைந்து நிமிடங்கள் மைத்திரிபால சிறிசேன உரையாடியுள்ளார். புத்தளம் மாவட்டத்தில் கிறிஸ்தவ மாணவர்களின் அறநெறிப் பாடசாலைக் கட்டடத் திறப்பு விழாவில் சஜித் பிரேமதாச கலந்துகொண்டிருந்தார்.

அப்போது மைத்திரிபால சிறிசேன தொலைபேசி அழைப்பை எடுத்துள்ளதாகக் கூறி சஜித் பிரேமதாசவின் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரி தொலைபேசியை அவரிடம் கையளித்தார்.

உடனடியாகத் தனது வாகனத்திற்குள் சென்ற சஜித் பிரேமதாச சுமார் பதினைந்து நிமிடங்கள் வரை உரையாடியதாகவும் ஆனால் என்ன விடயம் குறித்துப் பேசப்பட்டதென அவர் ஊடகங்களுக்குக் கூறவில்லையென்றும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன.

எனினும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது பற்றியே இருவரும் பேசியதாகவும் ஆனால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மையப்படுத்திய புதிய அரசியல் அணியின் பொது வேட்பாளராகப் போட்டியிடுவது தொடர்பாக சஜித் பிரேமதாச இதுவரை சமிக்ஞை எதுவுமே கொடுக்கவில்லை எனவும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் மேலும் கூறுகின்றன.

சஜித் பிரேமதாசவின் இந்த செயற்பாடுகளினால் ரணில் விக்கிரமசிங்க உட்பட ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் சிலர் அதிருப்தியடைந்துள்ளனர்.

இதேவேளை, நாளை திங்கட்கிழமை யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களுக்கு சஜித் பிரேமதாச பயணம் செய்யவுள்ளார்.