ஈழத் தமிழர் அரசியலில் கடும்

சர்ச்சைக்குள்ளன ஆனந்த சங்கரி தனது காணிகளை மக்களிடம் பகிர்ந்தளித்தார்

புதுக்குடியிருப்புப் பிரதேசச் செயலாளருக்கு அறிவிப்பு
பதிப்பு: 2019 செப். 09 14:57
புலம்: முல்லைத்தீவு, ஈழம்
புதுப்பிப்பு: செப். 10 19:25
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
#elam
#tulf
முல்லைத்தீவு சுதந்திரபுரம் கிராமத்தில் அமைந்துள்ள தனக்குச் சொந்தமான இருபது ஏக்கர் காணியை போரால் பாதிக்கப்பட்டுக் காணிகள் இல்லாத மக்களிற்குப் பகிர்ந்தளிக்குமாறு தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி புதுக்குடியிருப்புப் பிரதேசச் செயலாளர் எம் பிரதீபன் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார். ஈழ விடுதலைப் போராட்டத்தின்போது கடுமையான எதிர் விமர்சனங்களுக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் உள்ளான ஆனந்த சங்கரி, இலங்கை நாடாளுமன்றத்தின் உறுப்பினராகவும் நீண்டகாலம் பதவி வகித்திருந்தார். 2004 ஆம் ஆண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து வெளியேறி தமிழர் விடுதலைக் கூட்டணியைத் தனியாகச் செயற்படுத்தி வரும் நிலையில் தனக்குச் சொந்தமான காணிகளைப் பகிர்ந்தளிக்க இணக்கம் தெரிவித்துள்ளார்.
 
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட சுதந்திரபுரம் பகுதியில் உள்ள தனக்குச் சொந்தமான இருபது ஏக்கர் காணிகளையே அவர் பகிர்ந்தளிக்க இணங்கியுள்ளார்.

குறித்த காணியில் 1988ம் ஆண்டுக்கு பிற்பட்ட காலப்பகுதியிலிருந்து சுமார் இருபதுக்கும் அதிகமான குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. ஆனாலும் அவர்கள் குடியிருக்கும் காணிகளுக்கான உரிமம் வழங்கப்பட்டிருக்கவில்லை.

இதனால் இலங்கை அரசாங்கத்தின் வீட்டுத்திட்டம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளைப் பெற்றுக்கொள்வதில் அந்த மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வந்தனர். இது தொடர்பாக ஆனந்த சங்கரியுடன் அந்த மக்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை சந்தித்து உரையாடி காணிகளுக்குரிய உரிமங்களை தம்முடைய பெயர்களுக்கு மாற்றித் தருமாறு கோரினர்.

இதனால் தனது காணிகளில் குடியிருக்கும் மக்களுக்கே அவற்றை எழுதிக் கொடுக்குமாறு பிரதேசச் செயலாளருக்கு ஆனந்த சங்கரி இன்று திங்கட்கிழமை அறிவித்துள்ளார்.

2002 ஆம் ஆண்டு யூன் மாதம் மூத்த தமிழ்த் தலைவர் சிவசிதம்பரம் இறந்த பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருந்த ஆனந்த சங்கரி, 2003 ஆம் ஆண்டு சம்பந்தன், மாவை சேனாதிராஜா உள்ளிட்ட மூத்த தமிழ் அரசியல் பிரதிநிதிகளோடு முரண்பட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து வெளியேறினார்.

ஆனந்த சங்கரி வெளியேறியதால் தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 2004 ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டிருந்தது.

இதனால் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக தமிழரசுக் கட்சியை மீளவும் புதுப்பித்து அதன் வீட்டுச் சின்னத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிட்டிருந்தது.

2015 ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் கொழும்பிலும் வடக்குக்- கிழக்கிலும் போட்டியிட்ட ஆனந்த சங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணி எந்தவொரு ஆசனங்களையும் பெறவில்லை.

2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈபிஆர்எல்எப், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைந்து போட்டியிடாமல், தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் சேர்ந்து போட்டியிட்டு வடக்குக்- கிழக்கில் உள்ள உள்ளூராட்சி சபைகளில் எண்பத்தியிரண்டு ஆசனங்களைக் கைப்பற்றியிருந்தது.

ஈபிஆா்எல்எப் தற்போது விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணியோடு இணைந்து பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ளது. ஆனந்த சங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணி தற்போது எந்தக் கட்சியோடும் கூட்டுச் சேரவில்லை.