கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு

சத்துருக்கொண்டான் படுகொலைகளுக்கு நீதிகோரிய மக்கள்

நூற்றி 86 தமிழர்கள் கொல்லப்பட்டமை குறித்து இதுவரை உரிய நடவடிக்கைகள் இல்லை
பதிப்பு: 2019 செப். 09 22:06
புலம்: மட்டக்களப்பு, ஈழம்
புதுப்பிப்பு: செப். 20 22:36
main photo main photo main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#slmilitary
#batticaloa
#lka
#tamil
#genocide
தமிழ் பேசும் மக்களின் தாயகமான கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு சத்துருக்கொண்டான், பிள்ளையாரடி, பனிச்சையடி, கொக்குவில் போன்ற கிராமங்களில் இலங்கை இராணுவத்தினராலும் ஆயுதக்குழுக்களினாலும் திட்டமிட்டு நடத்தப்பட்ட இனப்படுகொலையின் 29 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று திங்கட்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. ஆண்கள். பெண்கள், சிறுவர்கள், குழந்தைகள், வயோதிபர்கள் என நூற்றி 86 தமிழர்கள் அடித்தும் வெட்டியும் கொலை செய்யப்பட்டிருந்தனர். 1990 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் ஒன்பதாம் திகதி இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றிருந்தது. அதனை நினைவு கூர்ந்து சத்துருக்கொண்டான் சந்தியில் உள்ள நினைவுத் தூபியில் நிகழ்வுகள் இடம்பெற்றதாக ஏற்பாட்டாளர்கள் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தனர்.
 
கட்சி அரசியல் வேறுபாடுகள் எதுவுமேயின்றி பொதுமக்கள் உட்படப் பலரும் கலந்துகொண்டனர். கொல்லப்பட்டவர்களின் உறவினர்களும் நிகழ்வில் பங்கேற்றனர். நினைவுத் தூபியில் தீபங்களும் ஏற்றப்பட்டன.

Batticola
மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் கிராமத்தில் 1990 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் ஒன்பதாம் திகதி இலங்கை இராணுவம் திட்டமிட்டு மேற்கொண்ட தமிழ் இனப் படுகொலையின் போது உயிர் தப்பிய பலர் தமது நேரடிச் சாட்சியங்களை அப்போது இடம்பெற்ற விசாரணைகளில் வழங்கியிருந்தனர். குழி ஒன்றை வெட்டி இளைஞர், யுவதிகளை அதற்குள் தள்ளி விழுத்திக் கொலை செய்ய முற்பட்டபோது அந்தக் குழியில் இருந்து காயங்களோடு உயிர் தப்பிய ஒருவர் அருட் தந்தையொருவரின் உதவியுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பின்னர் அவரைக் கொலை செய்வதற்கும் இலங்கைப் புலனாய்வுப் பிரிவு முயற்சி எடுத்திருந்தது. இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கம் உள்ளிட்ட பொது அமைப்புகள் அப்போது கொலைகள் நடந்த கிராமத்துக்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை இராணுவத்தினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளில் விசேட தேவையுடைய ஐந்து பிள்ளைகள், பத்து வயதுக்குக் கீழ்ப்பட்ட 42 சிறுவர்கள், 85 பெண்கள், 28 வயோதிபர்கள் உட்பட நூற்றி 86 பேர் திட்டமிட்டுப் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

இந்தக் கொலைகள் தொடர்பாக ஆராய்வதற்கு 2016 ஆம் ஆண்டு மைத்திரி- ரணில் அரசாங்கத்தில் ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டு அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

இலங்கை இராணுவத்தினர் இந்தப் படுகொலையுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டிருந்தமை குறித்து கிராம மக்கள் பலர் வழங்கிய வாக்குமூலத்தில் கூறியிருந்தனர்.

இந்தப் படுகொலைகளுக்கு அன்று சத்துருக்கொண்டான் இராணுவ முகாமின் பொறுப்பதிகாரியாகப் பதவி வகித்திருந்த கப்ரன் காமினி வர்ணகுலசூரிய, இராணுவ அதிகாரிகளான கெரத், விஜயநாயக்க மற்றும் கட்டளை அதிகாரி கேணல் பெசி பெனாண்டோ ஆகியோர் பிரதான எதிரிகளாக அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

நூற்றி 86 தமிழர்கள் கொல்லப்பட்டதை நினைவு கூருவதற்காக அமைக்கப்பட்ட நினைவுத் தூபியில் பொது மக்கள் மலா் தூவி வணக்க நிகழ்வுகளில் பங்குகொண்டதாக ஏற்பாட்டாளர் ஒருவர் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார்.