இலங்கை ஜனாதிபதித் தேர்தல்

ரணில், சஜித் முரண்பாடு- ரூபவாஹினி பாதுகாப்பு அமைச்சின் கீழ்

மைத்திரியின் செயற்பாடுகளினால் ஐக்கிய தேசியக் கட்சிக்குச் சந்தேகம்- பெளத்த பிக்குமார் சிலரும் காரணமா?
பதிப்பு: 2019 செப். 10 10:30
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: செப். 10 19:18
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#PresPollSL
#LKA
#maithripalasrisena
#SajithPremadasa
இலங்கை ஒற்றையாட்சி அரச தொலைக்காட்சி நிறுவனமான ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம் நேற்றுத் திங்கட்கிழமை நள்ளிரவு முதல் இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கையொப்பமிட்டு வெளியிடப்பட்டுள்ள அரச வர்த்தமானி இதழில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. இலங்கைப் பாதுகாப்பு அமைச்சராக மைத்திரிபால சிறிசேனவே பதவி வகிக்கிறார். இந்த நிலையில் இலங்கை ஊடகத்துறை அமைச்சின் கீழ் இதுவரைகாலமும் செயற்பட்டு வந்த மூபவாஹினிக் கூட்டுத்தாபனம் திடீரெனப் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளமை தொடர்பான காரணங்கள் எதுவுமே கூறப்படவில்லை.
 
ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் வேட்பாளரைத் தெரிவு செய்வதில் இழுபறி நிலை ஏற்பட்டு வருகின்றது.

இதனால் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் ஊடகத்துறை அமைச்சின் கீழ் செயற்பட்டு வந்த ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவான செய்திகளை வெளியிட்டு வந்தது.

இதன் காரணமாகவே பாதுகாப்பு அமைச்சின் கீழ் ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம் கொண்டுவரப்பட்டிருக்கலாமெனக் கூறப்படுகின்றது.

சஜித் பிரேமதாசவை மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மையப்படுத்திய புதிய அரசியல் கூட்டணியில் இணையுமாறு வற்புறுத்தி வரும் நிலையிலும் ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளமை தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சி சந்தேகம் எழுப்பியுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மையப்படுத்திய புதிய அரசியல் அணியை உருவாக்கி சஜித் பிரேமதாசவை பொது வேட்பாளராக நியமிக்குமாறு கட்சிக்கு ஆதரவான பௌத்த குருமார் சிலரும் மைத்திரிபால சிறிசேனவு்க்கு அழுத்தம் கொடுத்து வருவதாக கொழும்பு அரசியல் தகவல்கள் கூறுகின்றன.

போர் நடைபெற்றபோது மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்திலும் இலங்கை அரசு ஊடகங்கள் இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் நேரடிக் கண்காணிப்பில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, பாதுகாப்பு அமைச்சின் கீழ் ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம் கொண்டுவரப்பட்டமைக்கு சுதந்திர ஊடக இயக்கம் உள்ளிட்ட ஊடக அமைப்புகள் கண்டனம் வெளியிட்டுள்ளனர்.