வடமாகாணம் கிளிநொச்சி

முகமாலை வடக்கில் மனித எலும்புகள், எச்சங்கள் மீட்பு

சம்பவ இடத்திற்கு நாளை கிளிநொச்சி நீதிபதி சென்று விசாரணை
பதிப்பு: 2019 செப். 11 21:46
புலம்: கிளிநொச்சி. ஈழம்
புதுப்பிப்பு: செப். 12 17:08
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#human
#residues
#lka
#tamil
#genocide
வடமாகாணம் கிளிநொச்சி முகமாலை வடக்குப் பிரதேசத்தில் கண்ணிவெடி அகற்றும் பிரிவினர் இன்று புதன்கிழமை இடம்பெற்ற மீட்புப் பணியின்போது மனித எலும்புகள், எச்சங்கள் சிலவற்றைக் கண்டெடுத்துள்ளனர். கண்ணிவெடி அகழ்வுப் பணியில் ஈடுபடும் சர்வதேசத் தொண்டு நிறுவனப் பணியாளர்கள் வழமைபோன்று இன்றும் அகழ்வுப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோதே நண்பகல் அளவில் மனித எலும்புகள், எச்சங்களைக் கண்டதாகத் தெரிவித்தனர். பளை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது. பிற்பகல் அளவில் சம்பவ இடத்துக்கு வந்த இலங்கைப் பொலிஸார் மனித எச்சங்கள் மீட்க்கப்பட்டமை தொடர்பாகக் கண்ணிவெடி அகற்றும் பணியாளர்களிடம் வாக்குமூலங்களைப் பெற்றுக்கொண்டனர். மீட்கப்பட்ட மனித எச்சங்களையும் பார்வையிட்டனர்.
 
சம்பவ இடத்துக்கு ஊடகவியலாளர்கள் எவரும் உடனடியாக அனுமதிக்கப்படவில்லை. கண்ணிவெடி மீட்புப் பணியின்போது மனித எலும்புகள், எச்சங்கள் மீட்கப்பட்டமை தொடர்பாக நாளை வியாழக்கிழமை கிளிநொச்சி நீதிமன்றத்திற்கு அறிவிக்கவுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

முகமாலை
கிளிநொச்சி முகமாலை வடக்குப் பிரதேசத்தில் கண்ணி வெடி அகற்றும் பணியில் ஈடுபட்ட பணியாளர்களினால் மீட்கப்பட்ட மனித எச்சங்களையே படத்தில் காண்கிறீர்கள். ஊடகவியலாளர்கள் எவரும் உடனடியாக அனுமதிக்கப்படாதபோதும் அங்கு பணியாற்றும் ஒருவரினால் இந்தப் படம் எடுக்கப்பட்டிருந்தது.
கண்ணிவெடி மீட்கப்பட்டுக் கொண்டிருக்கும் பிரதேசத்துக்கு கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதிபதி ரி சரவணறாஜா சென்று மனித எச்சங்களைப் பார்வையிட்ட பின்னரே அது பற்றிய விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுமெனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மீட்கப்பட்ட மனித எலும்புகள், எச்சங்களை நீதிபதி பார்வையிடும்போது ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்படுவார்களென எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போது மனித எலும்புகள், எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மனித எலும்புகள், எச்சங்கள் மீட்கப்பட்ட முகமாலை வடக்குப் பிரதேசம் போர் நடைபெற்றபோது சூனியப் பிரதேசமாக இருந்தது. எனினும் 2009 ஆம் ஆண்டு முதல் குறித்த பிரதேசம் இலங்கை இராணுவத்தின் முழுமையான கட்டுப்பாட்டில் இருந்ததாக பிரதேச மக்கள் கூறுகின்றனர்.

கண்ணிவெடிகள் அகற்றப்படாமையினால் இதுவரை அங்கு மீள் குடியேற்றமும் இடம்பெறவில்லை.

இதேவேளை, மன்னார் நகர நுழை வாசலில் இலங்கை அரசுக்குச் சொந்தமான சதோச விற்பனை நிலையக் கட்டடத்தி்ன் அடித் தளத்தில் இருந்து மீட்கப்பட்ட சுமார் இருநூறுக்கும் அதிகமான மனித எலும்புக் கூடுகள். மனித எச்சங்கள் தொடர்பான விசாரணை அப்படியே கைவிடப்பட்டுள்ளன.

அந்த மனித எலும்புக் கூடுகள் காபன் பரிசோதனைக்காக அமெரிக்காவுக்கு அனுப்பி ஆய்வுகள் செய்யப்பட்டபோதும் அந்த ஆய்வு அறிக்கையின் முடிவுகள் குறித்து தமிழ் மக்கள் சந்தேகம் வெளியிட்டிருந்தனர்.

மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயச் சுற்றாடலிலும் மீட்கப்பட்ட சுமார் இருநூற்றுக்கும் அதிகமான மனித எலும்புக்கூடுகள் பற்றிய விசாரணைகள் இலங்கை அரசாங்கத்தினால் அப்படியே மூடி மறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.