வடமாகாணம் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் இலங்கைப்

படையினர் அபகரித்துள்ள காணிகளைக் கையளிப்பது குறித்து உரையாடல்

மக்களின் தொழில்த்துறை பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் எடுத்துக் கூறினர்
பதிப்பு: 2019 செப். 12 16:37
புதுப்பிப்பு: செப். 14 03:34
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#landgrab
#lka
#tamil
வடமாகாணத்தில் உள்ள கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் இலங்கை இராணுவத்தினர் சுவீகரித்துள்ள காணிகளை மீண்டும் பொது மக்களிடம் கையளிப்பதற்கான கலந்துரையாடல்கள் இன்று வியாழக்கிழமை முற்பகல் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன், கிளிநொச்சி படைகளின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் ரவிப்பிரிய, வன்னி படைகளின் கட்டளை அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர். அத்துடன் உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சார்ள்ஸ் நிர்மலநாதன், சாந்தி சிறிஸ்காந்தராசா ஆகியோரும் பங்குகொண்டனர்.
 
வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் கலந்துரையாடல்களுக்குத் தலைமை தாங்கினார். பொதுமக்களுக்குச் சொந்தமான பல காணிகள் இலங்கைப் படையினர் வசமுள்ளது. அந்தக் காணிகளுக்குள் இருக்கின்ற வளங்கள் அனைத்தையும் இராணுவத்தினரே பெற்றுக் கொள்வதாகவும் கலந்துரையாடலில் கூறப்பட்டுள்ளது.

அந்தக் காணிகள் பற்றிய விபரங்கள் இன்றைய கலந்துரையாடலில் அடையாளமிடப்பட்டுள்ளன. இந்தக் கணிகளை உடனடியாகக் கையளிக்க வேண்டுமெனவும் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் தொழில்துறையின்றி காணப்படுவதாகவும் கலந்துரையாடலில் பங்குகொண்ட அரச அதிகாரிகள் கூறியுள்ளனர்.

படையினரின் கட்டுப்பாட்டில் பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகள் இருப்பதால் பல குடும்பங்கள் மீளக்குடியேற முடியாதுள்ளதாகவும் கலந்துரையாடலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்தக் காணிகளை பொதுமக்களிடம் மீளவும் கையளிக்க வேண்டிய அவசியம் குறித்து ஆளுநர் சுரேன் ராகவன் கூட்டத்தில் கலந்துகொண்ட இலங்கைப் படை அதிகாரிகளிடம் எடுத்துக் கூறினார்.

கலந்துரையாடல் சுமுகமாக இடம்பெற்றதாகவும் அடையாளமிடப்பட்டுள்ள பொது மக்களின் காணிகள் விரைவில் கையளிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுமெனவும் ஆளுநர் சுரேன் ராகவன் ஊடகங்களிடம் தெரிவித்தார்.