இலங்கை ஜனாதிபதித் தேர்தல்-

வாக்காளர் பதிவுப் புத்தகத்தில் பெயர் வந்தது எப்படி? கோட்டாபயவுக்கு எதிராக விசாரணை

இலங்கைக் கடவுச் சீட்டைப் பெற்றமை குறித்தும் சந்தேகம்- நீதிமன்றத்திற்கு அறிவிப்பு
பதிப்பு: 2019 செப். 20 23:28
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: செப். 23 20:19
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#PresPollSL
#LKA
#gotabayarajapaksa
இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக இலங்கைக் குற்றப்புலனாய்வுப் பிரிவு கொழும்புப் பிரதான நீதவான் லங்கா ஜயரட்னவுக்கு இன்று வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது. கோட்டாபய ராஜபக்ச 2005 ஆம் ஆண்டு அமெரிக்கப் பிரஜையாக இருந்தபோது அம்பாந்தோட்டை மெதமுலன வாக்காளர் பதிவுப் புத்தகத்தில் எவ்வாறு பெயர் உள்வாங்கப்பட்டிருந்தது என்பது குறித்தும், அதே ஆண்டில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் நடவடிக்கையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டதன் மூலம் சட்டத்திற்கு மாறான குற்றச் செயல் ஒன்றை புரிந்துள்ளதாகவும் தனது பெயரில் இலங்கை கடவுச் சீட்டொன்றைப் பெற்றுக்கொண்ட முறைகள் தொடர்பாகவுமே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுப் பிரிவு அறிவித்துள்ளது.
 
இலங்கைக் குடிவரவு குடியகல்வு, குடியுரிமைச் சட்டம், தேர்தல்கள் சட்டம் ஆகியவற்றின் கீழேயே விஷேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கொழும்புப் பிரதான நீதவான் லங்கா ஜயரட்னவுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவு கூறியுள்ளது.

சிவில் சமூக செயற்பாட்டாளர்களான சந்ர குப்த தேனுவர, காமினி வெயங்கொட ஆகியோர் கடந்த ஓகஸ்ட் ஐந்தாம் திகதி இலங்கைப் பதில் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவுக்கு எழுத்து மூலம் முன்வைத்த முறைப்பாட்டுக்கு அமைவாக இந்த விசாரணைகள் இடம்பெறுகின்றன.

இந்த முறைப்பாடுகளை விசாரணை செய்யும் பொறுப்பு கொழும்பு குற்றத் தடுப்புப் பொலிஸாரிடம் முதலில் கையளிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் கோட்டாபாய ராஜபக்ச மீதான குறித்த குற்றச்சாட்டுக்கள் மிகவும் பாரதூரமான குற்றங்களாகக் கருதப்படுகின்றமையினால், கொழும்புப் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சம்பிக்க சிறிவர்தன, அவற்றை குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் கையளிக்குமாறு பதில் பொலிஸ் மா அதிபரிடம் கேட்டிருந்தார்.

இதனடிப்படையிலேயே விசாரணைகள் தம்மிடம் ஒப்படைக்கப்பட்டதாக இலங்கைக் குற்றப் புலனாய்வுப் பிரிவு கொழும்பில் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளது.

கோட்டாபய ராஜபக்ச ஸ்ரீலங்காப் பொதுஜனப் பெரமுனக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக கடந்த ஓகஸ்ட் மாதம் 16 ஆம் திகதி அறிவிக்கப்பட்டிருந்தார்.

மகிந்த ராஜபக்சவைத் தலைவராகக் கொண்டு செயற்பட்டு வரும் ஸ்ரீலங்காப் பொதுஜனப் பெரமுனக் கட்சி, ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரங்களுக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வரும் நிலையில் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.