இலங்கை ஜனாதிபதித் தேர்தல்

கோட்டாபயவுக்கு வாக்களிக்க வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வரவுள்ள சிங்கள மக்கள்

மகிந்த ராஜபக்ச தரப்பு ஏற்பாடு
பதிப்பு: 2019 செப். 21 15:03
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: செப். 22 20:48
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#PresPollSL
#LKA
#gotabayarajapaksa
ஸ்ரீலங்காப் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபாய ராஜபக்ச தேர்தலில் போட்டியிடுவதைத் தடுக்கும் நோக்கில் அவரைக் கைது செய்து சிறையில் அடைக்க முற்படுவதாக மகிந்த ராஜபக்சவுக்கு நெருக்கமான நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். இந்த நிலையில் கோட்டாபய ராஜபக்சவை வெற்றிபெறச் செய்வதற்காக வெளிநாடுகளில் வாழும் சுமார் இரண்டு இலட்சம் சிங்கள மக்களை இலங்கைக்கு அழைத்து வாக்களிக்கச் செய்யும் முயற்சியில் ஸ்ரீலங்காப் பொதுஜனப் பெரமுனக் கட்சி ஈடுபட்டுள்ளதாக கொழும்பு உயர்மட்ட அரசியல் தகவல்கள் கூறுகின்றன. இவ்வாறானதொரு சூழலிலேயே கோட்டாபய ராஜபக்சவைக் கைது செய்ய ரணில் அரசாங்கம் முற்படுவதாக மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவான தரப்பு சந்தேகம் வெளியிட்டுள்ளது.
 
2005 ஆம் ஆண்டு வாக்காளர் பதிவு, இலங்கைக் கடவுச் சீட்டொன்றைப் பெற்றமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் கோட்டாபயவை கைது செய்ய ரணில் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக விமல் வீரவன்ச இன்று சனிக்கிழமை கொழும்பில் குற்றம் சுமத்தியுள்ளார்.

கோட்டாபய ராஜபக்சவை எவரும் விழுத்த முடியாதெனக் கூறியுள்ள பொதுஜனப் பெரமுனக் கட்சியின் தவிசாளர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், ஜனாதிபதித் தேர்தலில் அவர் வெற்றிபெறுவது உறுதியெனவும் தெரிவித்தார்.

கொழும்பில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் விளக்கமளித்த பீரிஸ், கோட்டாபய ராஜபக்சவைக் கைது செய்ய முடியாதென்றும் கூறினார்.

தாய் நாட்டைக் காப்பாற்றுவோம். கோட்டாவை வெற்றி பெறச் செய்வோம். நவம்பர் 16 ஆம் திகதி தேர்தலுக்காக இலங்கைக்குச் செல்வோம் என்ற கருப்பொருளில் கொழும்பிலும் புறநகர் பகுதிகளிலும் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

மத்திய கிழக்கு நாடுகள் உள்ளிட்ட வெளிநாடுகளில் விழிப்புணர்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு இலங்கைப் பிரஜாவுரிமையோடு அங்கு வாழும் சிங்கள மக்களை இலங்கைக்கு வரவழைத்து நவம்பர் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கச் செய்வதெனவும் கூறப்படுகின்றது.

பேராசிரியர் சன்ன ஜயசுமன உட்பட சிங்களப் புத்திஜீவிகள் ஆகியோர் வெளிநாடுகளில் வாழும் சிங்கள மக்கள் மத்தியில் விழிப்புணர்வுக் கூட்டங்களை நடத்தவுள்ளதாகவும் கொழும்புத் தகவல்கள் கூறுகின்றன.

முதலாவது கூட்டம் பிரான்ஸில் நடைபெறவுள்ளதாகவும் அதனையடுத்து அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து, அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் பிரச்சாரம் கூட்டங்கள் நடத்தப்படுமெனவும் கொழும்புத் தகவல்கள் கூறுகின்றன.