வடமாகாணம் முல்லைத்தீவு

நீதிமன்ற உத்தரவை மீறித் தேரரின் உடல் பிள்ளையார் ஆலயத் தீர்த்தக்கேணியடியில் தகனம்

ஞானசார தேரர் தலைமையிலான பௌத்த பிக்குமார் மக்கள் மீது தாக்குதல்- அச்சுறுத்தல்
பதிப்பு: 2019 செப். 23 14:29
புலம்: முல்லைத்தீவு, ஈழம்
புதுப்பிப்பு: செப். 23 20:19
main photo main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#landgrab
#lka
#tamil
#genocide
#humanrights
#mullaitivu
வடமாகாணம் முல்லைத்தீவு, நீராவியடிப் பிள்ளையார் கோவில் வளாகத்தின் ஒரு பகுதியில் இலங்கை இராணுவத்தின் ஒத்துழைப்புடன் பலாத்காரமாக விகாரை அமைத்து, சர்ச்சைகளை உருவாக்கிய மேதாலங்கார கீர்த்தி தேரரின் (Medhalankara Thero) உடலை முல்லைத்தீவு இராணுவ முகாமுக்கு அருகில் உள்ள கடற்கரையில் தகனம் செய்யுமாறு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டிருந்தது. ஆனாலும் நீதிமன்றத் தீர்ப்பை ஏற்காமல் தேரரின் உடல் பிள்ளையார் ஆலய வளாகத்திற்கு அருகில் உள்ள ஆலயத் தீர்த்தக்கேணியடியில் வைத்துத் தகனம் செய்யப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவை மீறி ஞானசார தேரர் தலைமையிலான பௌத்த பிக்குமாரே தகனம் செய்ததாக பிரதேச மக்கள் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தனர்.
 
நீதிமன்றத் தீர்ப்பை மீறி ஆலய வளாகத்திற்குள் தகனம் செய்வதற்கு பிரதேச மக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆலய வளாகத்தில் ஒன்று கூடியிருந்தவேளை பௌத்த பிக்குமார் அச்சுறுத்தித் தாக்குதல் நடத்தியதாக மக்கள் கூறுகின்றனர்.

இலங்கை ஒற்றையாட்சி அரசின் நீதித்துறைக் கட்டமைப்பை பௌத்த பிக்குமாரே மீறுகின்றனர். அதற்கு இலங்கை இராணுவமும் ஒத்துழைப்பு வழங்கியதை முல்லைத்தீவில் நேரடியாகக் காண முடிந்ததாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்

பொதுபல சேனவின் செயலாளர் அத்தே ஞரனசார தேரர் தலைமையிலான பௌத்த குருமாரே இவ்வாறு ஈடுபட்டதாகவும் நீதிமன்றத்தில் வாதாடிய தமிழ்ச் சட்டத்தரணிகளையும் பௌத்த பிக்குமார் தாக்கியதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

முல்லைத்தீவு நீதிமன்ற உத்தரவை எழுத்து மூலம் பெற்றுக் கொள்வதற்கு முன்னர் தேரரின் உடலை ஆலய வளாகத்தில் தகனம் செய்ய ஞானசார தேரர் முற்பட்டிருந்தார் எனவும் இலங்கைப் படையினர் ஆதரவாகச் செயற்படுவதாகவும் மக்கள் கூறுகின்றனர்.

இதனால் பிரதேசத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இலங்கை இராணுவமும் பொலிஸாரும் ஆலய வளாகத்திலும் ஆலயத்திற்கு வெளியிலும் குவிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக அமைச்சர் மனோ கணேசன் மற்றும் உயர் அதிகாரிகளிடம் பிரதேச மக்கள் முறையிட்டிருந்தனர். ஆனாலும் எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருக்கவில்லை.

Mulllithivu23
இன வன்முறைகளைத் தூண்டும் வகையிலான கொலை மிரட்டல். அச்சுறுத்தல் குற்றச்சாட்டில் கைதாகி ஹோமகம நீதிமன்றத்தால் ஆறு ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுக் கொழும்பு மகசீன் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அத்தே ஞர்னசார தேரர், கடந்த மே மாதம் இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டிருந்தார். விடுதலையான நாள் முதல் பௌத்த சிங்கள இனவாதத்தை முன்நிறுத்திச் செயற்பட்டு வரும் ஞானசார தேரர், தனது குழுவுடன் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மேதாலங்கார கீர்த்தி தேரரின் உடலைத் தகனம் செய்வது குறித்த விசாரணையைப் பார்வையிட முல்லைத்தீவு நீதிமன்றம் வந்தபோது எடுக்கப்பட்ட படம் இது. தேரர் தலைமையிலான பொதுபல சேன அமைப்பின் பிக்குமாரே தமிழ் மக்களையும் சட்டத்தரணிகளையும் நீதிமன்ற வளாகத்தில் வைத்து தாக்கியிருந்ததாக மக்கள் கூறுகின்றனர்.

இலங்கை ஒற்றையாட்சி அரசின் நீதித்துறைக் கட்டமைப்பை பௌத்த பிக்குமாரே மீறுகின்றனர். அதற்கு இலங்கை இராணுவமும் ஒத்துழைப்பு வழங்குவதை நேரடியாகக் காண முடிவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

ஞானசாரர் தலைமையிலான பௌத்த பிக்குமார் தொடர்ந்தும் ஆலய வளாகத்தில் நின்று மக்களை அச்சுறுத்துவதாகவும் இதனால் பிள்ளையார் ஆலய வழிபாடுகள் தடைப்பட்டுள்ளதெனவும் மக்கள் கூறுகின்றனர்.

ஞானசார தேரர் தமிழ் முஸ்லிம் மக்களுக்கு எதிரான வன்முறைகளை கட்டவிழ்த்து விடுகின்றமை உள்ளிட்ட கொலை. அச்சுறுத்தல் மற்றும் நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டிருந்தது.

ஆனால் இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொது மன்னிப்பு அடிப்படையில் அவரை கடந்த மே மாதம் விடுதலை செய்திருந்தார்.

குறிப்பாக நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டிலேயே ஞானசார தேரருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு மன்னிப்பு அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார். ஆனால் மீண்டும் நீதிமன்ற அவமதிப்பில் ஞானசார தேரர் ஈடுபட்டிருக்கிறாரென சட்டத்தரணிகள் கூறுகின்றனர்.

நீதிமன்றக் கட்டளையை மீறி மேதாலங்கார கீர்த்தி தேரரின் உடலை ஆலயத்தின் தீர்த்தக்கேணியடியில் தகனம் செய்தமை நீதிமன்ற அவமதிப்பு என்றே சட்டத்தரணிகள் தெரிவிக்கின்றனர்.