இலங்கை ஜனாதிபதித் தேர்தல்

வேட்பாளர் தெரிவு- ஐக்கிய தேசியக் கட்சிக்குள் வாக்கெடுப்பு

ரணில் விக்கிரமசிங்க போட்டியிடுவதற்கான வாய்ப்புகளே அதிகம் என்று தெரிவிப்பு
பதிப்பு: 2019 செப். 23 23:18
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: செப். 26 02:08
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#PresPollSL
#LKA
#ranilwickremesinghe
#SajithPremadasa
ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு தொடர்பாக எதிர்வரும் வியாழக்கிழமை கட்சியின் மத்திய குழு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளதாக கட்சியின் மூத்த உறுப்பினர் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல கூறியுள்ளார். இலங்கை ஒற்றை ஆட்சி அரசின் ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ளது. ஆனால் இதுவரையும் ஐக்கிய தேசியக் கட்சி தமது வேட்பாளரை அறிவிக்கவில்லை. கட்சியின் பிரதித் தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாச தன்னை வேட்பாளராக அறிவிக்க வேண்டுமென தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், கட்சித் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அதற்கு இணக்கம் தெரிவிக்கவில்லை.
 
கட்சியின் மூத்த உறுப்பினர் சபாநாயகர் கரு ஜயசூரிய வேட்பாளராகப் போட்டியிடுவாரெனக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் ஒன்றில் ரணில் விக்கிரமசிங்க முன்னர் கூறியிருந்தார்.

அதன் பின்னரான நிலையில் ரணில் விக்கிரமசிங்க தேர்தலில் போட்டியிடலாமெனவும் ஐக்கியதேசியக் கட்சித் தகவல்கள் தெரிவித்திருந்தன. இந்த நிலையிலேயே வேட்பாளர் தெரிவு தொடர்பாக கட்சிக்குள் வாக்கெடுப்பு நடத்தவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனாலும் வாக்கெடுப்பு நடத்துவது தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சி அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. இதனால் ரணில் விக்கிரமசிங்கவே தேர்தலில் போட்டியிடுவாரெனக் கட்சியின் உயர்மட்டத் தகவல்கள் கூறுகின்றன.

அவ்வாறானதொரு நிலை ஏற்படுமானால் சஜித் பிரேமதாச கட்சியில் தன்கு ஆதரவான உறுப்பினர்களோடு சேர்ந்து வேறொரு தனிச் சின்னத்தில் போட்டியிடுவாரென அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மையப்படுத்திய புதிய அரசியல் அணி ஒன்றை உருவாக்கி சஜித் பிரேமதாசவை பொது வேட்பாளராக அறிவிக்கத் திட்டமிடுவதாகக் கட்சித் தகவல்கள் கூறுகின்றன.

ஆனால் சஜித் பிரேமதாச அதற்கு இதுவரை இணக்கம் தெரிவிக்கவில்லை என்றும் கட்சியின் உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.