வடமாகாணம் முல்லைத்தீவு நீராவியடிப் பிள்ளையார் ஆலய விவகாரம்

சட்டதரணி மீது பிக்குமார் தாக்குதல்- வடக்குக்- கிழக்கில் கண்டனப் போராட்டம்

நீதிமன்றச் செயற்பாடுகள் முடக்கம்- வெள்ளிக்கிழமை வரை பணிப் பகிஸ்கரிப்பு
பதிப்பு: 2019 செப். 24 13:04
புலம்: முல்லைத்தீவு, ஈழம்
புதுப்பிப்பு: செப். 24 19:54
main photo main photo main photo main photo main photo main photo main photo main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
#genocide
#Humanrights
#mullaitivu
தமிழர் தாயகம் வடமாகாணம் முல்லைத்தீவு செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத் தீர்த்தக் கேணியடியில் உயிரிழந்த மேதாலங்கார கீர்த்தி தேரரின் உடலைத் தகனம் செய்யக் கூடாதென்ற முல்லைத்தீவு நீதிமன்றக் கட்டளையை அவமதித்தமை மற்றும் பௌத்த குருமாரின் அடாவடித்தனங்களைக் கண்டித்தும் எதிர்ப்பு தெரிவித்தும் வடக்குக்- கிழக்குத் தாயகப் பிரதேசங்களில் இன்று செவ்வாய்க்கிழமை சட்டத்தரணிகள் பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். பௌத்த பிக்குமாருக்கு ஆதரவாகச் செயற்பட்ட இலங்கைப் பொலிஸாரை நீதியின் முன் நிறுத்துமாறு வலியுறுத்தியும், சட்டத்தரணி கே.சுகாஸ் மீது தாக்குதல் நடத்திய பிக்குமாரு்க்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரியும் இந்தப் பணிப் பகிஸ்கரிப்புப் போராட்டம் இன்று இடம்பெற்றது.
 
இதனால் நீதிமன்ற நடவடிக்கைகள் அனைத்தும் செயலிழந்துள்ளன. வழக்கு விசாரணைகள் பாதிக்கப்பட்டதுடன் நீதிமன்றத்திற்கு வருகை தந்த மக்களும் சட்டத்தரணிகளின் எதிர்ப்புப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். பெருமளவு பொலிஸார் நீதிமன்றங்களின் முன்னால் குவிக்கப்பட்டிருந்தனர்.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா. ஆகிய நீதிமன்றங்களின் முன்பாக ஒன்று கூடிய சட்டத்தரணிகள் அங்கிருந்து முல்லைத்தீவுக்குச் சென்று நீதிமன்றத்திற்கு முன்பாக நின்று வாய்களில் கறுப்புத் துணிகளைக் கட்டியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சச்சிதானந்தம்
சர்ச்சைக்குரிய சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தம் போராட்டத்தில் கலந்து கொண்டபோது எடுக்கப்பட்ட படம் இது. சைவ சமய, கிறிஸ்தவ சமயக் குருக்களுடன் இணைந்து இவரும் சட்டத்தரணிகள் நடத்திய போராட்டத்தில் பங்குபற்றியிருந்தார். முல்லைத்தீவு நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் இலங்கைப் படையின் ஒத்துழைப்புடன் உயிரிழந்த மேதாலங்கார கீர்த்தி தேரர் விகாரை கட்டியபோது தமிழ் மக்கள் பெரும் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர். நீதிமன்ற வரை இந்த விவகாரம் சென்றிருந்தது. தற்போதும் வழக்கு விசாரணைகள் இடம்பெறுகின்றன. ஆனால் பிக்குமாரின் சைவ சமயத்துக்கு எதிரான செயற்பாடுகளைக் கண்டித்து அறிக்கை கூட வெளியிடாத சிவசேனை அமைப்பின் தலைவரான மறவன்புலவு சச்சிதானந்தம் இன்று செவ்யாக்கிழமை முல்லைத்தீவில் இடம்பெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டமை குறித்துச் சட்டத்தரணிகள், மக்கள் மத்தியில் பல கேள்விகள் எழுந்துள்ளன. ஏனெனில் ஈழத்தமிழ் மக்களின் அரசியல் விடுதலைக்கான ஜனநாயகப் போராட்டங்கள் பலவற்றுக்கு எதிரான பௌத்த பிக்குமாரோடு இணைந்து இவர் செயற்பட்டிருந்தார். பௌத்த சமயத்தை முதன்மை மதமாகக் கொண்ட அரசியல் தீர்வையே தமிழ் மக்கள் ஏற்க வேண்டுமெனவும் சச்சிதானந்தன் கூறியிருந்தார். இந்த நிலையில் பௌத்த பிக்குமாரின் சைவ சமய அவமதிப்புக்கு எதிரான இன்றைய போராட்டத்தில் இவர் கலந்துகொண்டார். சிவசேனை இயக்கம் நரேந்திரமோடியின் இந்துத்துவா அமைப்பின் பின்னணியோடு செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தமிழர் மரபுரிமைப் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட சட்டத்தரணிகள், பொது மக்கள் இலங்கைப் பொலிஸார், பௌத்த பிக்குமார் மீது பலத்த கண்டனங்களை வெளிப்படுத்தியிருந்தனர்.

பௌத்த பிக்குகள் இலங்கை நீதித்துறைக்குக் கட்டுப்பட்டவர்கள் இல்லையா என முல்லைத்தீவு நீதிமன்ற வளாகத்துக்கு முன்னால் நின்று போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்கள் கோசம் எழுப்பினர்.

பௌத்த பிக்குமாருக்கு ஆதரவாகச் செயற்பட்ட பொலிஸார் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டுமென மட்டக்களப்பு, கல்முனை நீதிமன்றங்களின் முன்னால் நின்று கோசம் எழுப்பிய சட்டத்தரணிகள் சிலர் சுலோக அட்டைகளையும் கைகளில் ஏந்தியிருந்தனர்.

ஏற்கனவே நீதிமன்ற அவமதிப்புக்கு உள்ளாகி சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்த ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யப்பட்டமை அநீதியானதென்று மட்டக்களப்பு நீதிமன்றத்தின் முன்னால் நின்று போராட்டங்களில் ஈடுபட்ட சட்டத்தரணிகள் கோசம் எழுப்பினர்.

மட்டக்களப்பு சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் என்.நாராயனப்பிள்ளை தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் மட்டக்களப்பு நீதவான் நீதமன்றம் மாவட்ட நீதிமன்றம், உயர்நீதிமன்றம் தொழில் நீதிமன்றம் ஆகிய நீதிமன்றங்களை சேர்ந்த நாற்பதுக்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள் நீதிமன்ற கட்டிடத் தொகுதிக்கு முன்னால் ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஞானசார தேரர் மீண்டுமொரு முறை நீதிமன்ற அவமதிப்பைச் செய்துள்ளதாகவும் இலங்கை அரசாங்கம் கண்டுகொள்ளாமல் அமைதியாக இருப்பதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட சட்டத்தரணிகள் குற்றம் சுமத்தியிருந்தனர்.

இதேவேளை இந்தப் போராட்டம் தொடர்பாகக் கருத்து வெளியிட்ட யாழ் பல்கலைக்கழக சட்டத்துறை விரிவுரையாளர் குமாரவேல் குருபரன், இலங்கை நீதித்துறையை விட பௌத்த பிக்குகளின் அதிகாரம் மேலானதா என்று கேள்வியை எழுப்பினார்.

நீதிமன்றக் கட்டளையை மீறி உயிரிழந்த பிக்குவின் சடலத்தை நிராவியடிப் பிள்ளையாளர் ஆலயத்தின் தீர்த்தக்கேணியடியில் தகனம் செய்துள்ளதாகவும் இலங்கைப் பொலிஸார் அதற்கு ஒத்துழைப்பு வழங்கியிருந்ததாகவும் இது சட்ட ஆட்சிக்கு முரணானது என்றும் கூறினார்.

இலங்கை நீதித்துறை மீது பொது மக்களுக்கு இருந்த சொற்ப நம்பிக்கையும் இல்லாமல் போய்விட்டதென்றும் சட்டத்தரணிகளின் இந்தப் போராட்டத்திற்கு இலங்கை அரசாங்கம் பதில் கூற வேண்டும் எனவும் கூறிய அவர், அவ்வாறு இல்லையேல் வேறு நடவடிக்கைகளில் சட்டத்தரணிகள் ஈடுபட வேண்டிய நிலை ஏற்படும் என்றும் கூறினார்.

ஞானசார தேரரையும். சம்மந்தப்பட்ட பொலிஸாரையும் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

அத்துடன் இலங்கைச் சட்ட மா அதிபர் திணைக்களமும் இலங்கைத் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவும் உறுதிமொழி வழங்க வேண்டுமெனவும் குருபரன் கோரிக்கை விடுத்தார்.

இதேவேளை, இலங்கைச் சட்டமா அதிபர் ஞானசார தேரருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்ய வேண்டுமெனவும் அது தொடர்பாக எழுத்து மூல உறுதிமொழி வழங்க வேண்டுமெனவும் வடமாகாண சட்டத்தரணிகள் முல்லைத்தீவில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளனர்.

வெள்ளிக்கிழமை வரை வட மாகாண சட்டத்தரணிகள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவார்கள் என்றும் இல்லையேல் பணிப் புறக்கணிப்பை தொடர்வதா இல்லையா என்பது குறித்து மீளாய்வு செய்யப்படுமெனவும் சட்டத்தரணிகள் கூறியுள்ளனர்.

இந்தப் போராட்டத்தில் வடமாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர் உள்ளிட்ட அரசியல் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

இந்தப் போராட்டத்தில் பங்குபற்றுமாறு எவருக்கும் தனிப்பட்ட அழைப்பு விடுக்கவில்லை எனவும் இது தமிழ்த் தேசியத்திற்கு எதிரான பௌத்த மேலாதிக்கப் பிரச்சினை என்பதால் அனைவரும் உணர்வுடன் பங்குபற்றியதாகவும் தமிழர் மரபுரிமையின் இணைத் தலைவர்களில் ஒருவரான நவனீதன் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார்.