முல்லைத்தீவு நீராவியடிப் பிள்ளையார் ஆலய விவகாரம்-இலங்கை

ஒற்றையாட்சி அரசின் உயர் நீதிமன்றத்தில் ஞானசார தேரருக்கு எதிராக இடையீட்டு மனு

தமிழ்ச் சட்டத்தரணிகள் இன்று புதன்கிழமை தீர்மானம்- இரண்டாவது நாளாகவும் பணிப் பகிஸ்கரிப்பு
பதிப்பு: 2019 செப். 25 16:25
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: செப். 26 02:08
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#landgrab
#lka
#tamil
#genocide
#tamillawyers
#mullaitivu
இலங்கை ஒற்றையாட்சி அரசின் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த ஞானசார தேரருக்கு எதிரான வழக்கில் இடையீட்டு மனுதாரராக இணைவதற்கு வடமாகாணத் தமிழ்ச் சட்டத்தரணிகள் முடிவு செய்துள்ளனர். நீதிமன்ற அவமதிப்புக் குற்றத்துக்கு ஆறு ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில் ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கியிருந்த பொது மன்னிப்புக்கு எதிராக உயர் நீதிமன்றில் மனு ஒன்று ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு மீதான விசாரணையின்போதே இடையீட்டு மனுதாரராக இணைவதற்கு தமிழ்ச் சட்டத்தரணிகள் தீர்மானித்துள்ளனர்.
 
முல்லைத்தீவு நீராவியடிப் பிள்ளையார் ஆலயத் தீர்த்தக்கேணியடியில் உயிரிழந்த மேதாலங்கார கீர்த்தி தேரரின் உடலை முல்லைத்தீவு நீதிமன்ற கட்டளையை மீறி ஞானசார தேரர் தலைமையிலான பௌத்த பிக்குகள் தகனம் செய்திருந்தனர்.

இது தொடர்பாக இன்று புதன்கிழமை ஒன்று கூடி ஆராய்ந்த சட்டத்தரணிகள் இடையீட்டு மனுதாரராக இணைவது குறித்து ஆலோசித்துள்ளனர். வடக்குக்- கிழக்கில் உள்ள அனைத்துத் தமிழ்ச் சட்டத்தரணிகளும் இது தொடர்பாக ஆராய்ந்துள்ளனர்.

இலங்கைப் படையினரால் கொழும்பில் காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட பற்றிய வழக்கு ஹோமகம நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டிருந்தபோது, நீதிமன்றத்துக்குள் குழப்பம் விளைவித்த குற்றச்சாட்டில், ஞானசார தேரருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் 2018 ஆம் ஆண்டு ஆறு ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை வழங்கியிருந்தது.

கொழும்பு வெலிக்கடைச் சிறைச்சாலையில் ஞானசார தேரர் சிறைவைக்கப்பட்டிருந்தார். எனினும் மைத்திரிபால சிறிசேன வழங்கிய பொது மன்னிப்பு அடிப்படையில் ஒன்பது மாதங்களின் பின்னர் ஞானசார தேரர் கடந்த மே மாதம் 24 ஆம் திகதி விடுதலையானார்.

பொது அமைப்புகள். ஊடகவியலாளர் சங்கங்கள் உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர். இதனால் பொது அமைப்புகளின் உதவியோடு பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொட பொது மன்னிப்பில் ஞானசார தேரர் விடுதலை செய்யப்பட்டமைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

இவ்வாறானதொரு நிலையில் ஞானசார தேரர் முல்லைத்தீவு நீதிமன்றத்தின் கட்டளை ஒன்றை மீறிச் செயற்பட்டமை தொடர்பாக வடமாகாண சட்டத்தரணிகள் இலங்கைச் சட்டமா அதிபர், இலங்கைச் சுயாதீன நீதிச் சேவை ஆணைக்குழு, இலங்கைத் தேசிய பொலிஸ் ஆணைக்குழு ஆகியவற்றுக்கு அறவித்துள்ளனர்.

இலங்கை ஒற்றையாட்சிக் கட்டமைப்பின் நீதித்துறையில் வடக்குக்- கிழக்குத் தமிழ் மக்கள் ஏற்கனவே நம்பிக்கையிழந்திருந்த நிலையில், ஞானசார தேரரின் இவ்வாறு அத்துமீறல் செயற்பாடுகளினால் தமிழ் மக்கள் மேலும் நம்பிக்கையிழந்துள்ளதாகவும் சைவ சமயம் பௌத்த பிக்குகளினால் அவமதிக்கப்பட்டதை ஏற்றுக் கொள்ள முடியாதென்றும் தமிழ்ச் சட்டத்தரணிகள் கூறியுள்ளனர்.

இதேவேளை. இன்று இரண்டாவது நாளாகவும் சட்டத்தரணிகள் வடக்குக் கிழக்கு நீதிமன்றங்களில் சேவைப் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர். நீதிமன்றங்களின் முன்பாக நின்று எதிர்ப்பு நடவடிக்கைளில் ஈடுபட்ட சட்டத்தரணிகள், இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகளையும் விமர்சித்தனர்.