கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு களுமொந்தன்வெளிப் பிரதேசத்தில்

வீடமைப்புக்கு வழங்கப்படும் நிதி போதுமானதல்ல- மக்கள் குற்றச்சாட்டு

அமைச்சர் சஜித் பிரேமதாசவின் வீடமைப்பு அமைச்சு பக்கச்சார்பாகச் செயற்படுவதாக முறைப்பாடு
பதிப்பு: 2019 செப். 27 11:11
புலம்: மட்டக்களப்பு, ஈழம்
புதுப்பிப்பு: செப். 28 02:27
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
#genocide
#SajithPremadasa
வடக்குக்- கிழக்குத் தாயகப் பிரதேசங்களில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீட்டுத் திட்டம் என்ற போர்வையில் இலங்கை அரசாங்கத்தின் வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரமதாசவினால் வழங்கப்படும் நிதி போதுமானதாக இல்லையென மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். இந்த வீட்டுத் திட்டத்தினால் மேலும் கடனாளியாக மாற்றியுள்ளதாகவும் மக்கள் கூறுகின்றனர். கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு நகருக்கு 34 கிலோமீற்றர் தென் மேற்காகவுள்ள வெல்லாவெளி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள களுமொந்தன்வெளி கிராமத்தில் கடந்த வருடம் சஜித் பிரமதாசவின் வீடமைப்பு அமைச்சின் கீழ் வழங்கப்பட்ட நிதியுதவியினால் நாற்பது வீடுகள் நிர்மானிக்கப்பட்டு வருகின்றன.
 
ஆனால் அதற்கான நிதி போதுமானதல்ல என்றும் நிதி வழங்கலில் பல்வேறு குறைப்பாடுகள் உள்ளதாகவும் கிராம மக்கள் கூர்மை செய்தி தளத்திற்கு தெரிவித்தனர்.

வீடொன்றைக் கட்டுவதற்கு ஐந்து இலட்சம் ரூபா வழங்கப்படுகின்றது. ஆனால் மேலதிகமாக மூன்று இலட்சம் ரூபாவை மக்கள் செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

மட்டக்களப்பு-27
ஒரு நாளைக்கு நூறு ரூபாவுக்கு அரிசி வேண்டி சமையல் செய்ய முடியாத நிலையில் வாழும் போரினால் பாதிக்கப்பட்ட குடும்பம் ஒன்று எவ்வாறு மேலதிகமாக மூன்று இலட்சம் ரூபாவைச் செலவு செய்து வீடுகட்டி முடிக்க முடியுமெனக் கேள்வி எழுப்பியுள்ளனர். அதேவேளை, இலங்கையின் தென்பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்டுக் கிழக்கு மாகாணத்தில் திடமிட்டு மேற்கொள்ளப்படும் சிங்களக் குடியேற்றங்களில் வாழும் சிங்களக் குடும்பங்களுக்கு மாதாந்தக் கொடுப்பனவுகளை அமைச்சர் சஜித் பிரேமதாசவின் வீடமைப்பு அமைச்சு வழங்குவதாகவும், ஆனால் போரால் பாதிக்கப்பட்ட தமிழ்க் குடும்பங்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இந்த ஐந்து இலட்சம் ரூபா வழங்கத் தீர்மானிக்கப்பட்ட காலத்தைவிட தற்போது பொருட்களின் விலை அதிகரித்துள்ளதாகவும் ஆனால் இந்த அதிகரிப்புத் தொடர்பாக வீடமைப்புத் துறை அமைச்சின் கொழும்பில் உள்ள அதிகாரிகள் கவனம் செலுத்துவதில்லையெனவும் மக்கள் கூறுகின்றனர்.

வீடொன்றுக்கு ஐந்து இலட்சம் வழங்கப்பட்ட போதும் பயனாளிகளுக்கு அந்தத் தொகை கட்டம் கட்டமாகவே வழங்கப்படுகின்றது. அவற்றில் ஐம்பதாயிரம் ரூபா மின்சாரத்திற்கும் தண்ணீருக்கும் எடுக்கப்படுவதாக கிராம சேவகர்களும் பிரதேச செயலக அதிகாரிகளும் மக்களிடம் கூறுன்றனர்.

மின்சாரத்திற்கும் தண்ணீருக்கும் மக்களிடமிருந்து பணம் வசூலிக்கப்பட்ட போதிலும், அடிப்படை வசதிகளின் ஒன்றான குடிநீர் கூட வழங்கப்படவில்லை. வீதி புனரமைப்பு, மின்சாரம் என எவ்விதமான அடிப்படை வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை என வீட்டுத் திட்டப் பயனாளிகள் தெரிவிக்கின்றனர்.

வீட்டுத் திட்ட உதவிகளைப் பெறும் அனைத்து குடும்பங்களும் வறுமைக்கோட்டின் கீழ் வசிப்பவர்கள். அன்றாடம் கூலி வேலை செய்து வாழ்க்கை செலவு செய்யும் மக்கள் தங்கள் வீடுகளைக் கட்டி முடிக்க மேலதிகமாக மூன்று இலட்சம் ரூபாவை செலவு செய்யும் நிலையில் இல்லையெனக் கூறுகின்றனர்.

இதனை அரச அதிகாரிகள் புரிந்துகொள்வதாக இல்லையெனவும் வீட்டைக் கட்டி முடிப்பதற்காக மேலதிக மூன்று இலட்சம் ரூபாவை கடனாகப் பெற்று அந்தக் கடன்களை மீளச் செலுத்த முடியாத அவல நிலைக்குள் சில குடும்பங்கள் இருப்பதாகவும் கூறுகின்றனர்.

ஆனால், கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் பிரதேசங்களில் அத்துமீறிய குடியேற்றங்களை செய்யும் போது, அமைச்சர் சஜித் பிரேமதாசவின் அமைச்சு சிங்கள மக்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்படுவதாக மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

சிங்களப் பிரதேசங்களில் இருந்து கொண்டு வந்து கிழக்கு மாகாணத்தில் குடியேற்றும் சிங்களக் குடும்பங்களுக்கு மாதாந்தக் கொடுப்பனவுகளும் வழங்கப்படுகின்றன. ஆனால் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு எதுவுமே வழங்கப்படுவதில்லையென மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை, மக்களின் இந்த முறைப்பாடு தொடர்பாகக் கூர்மைச் செய்தித் தளத்திடம் கருத்து வெளியிட்ட வெல்லாவெளிப் பிரதேசச் செயலாளர் ராகுலநாயகி, போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தற்போதைக்கு குறைந்தது இரண்டாயிரம் வீடுகள் வரை தேவை என்று கூறினார்.

ஆனால் போரால் பாதிக்கப்பட்ட பதின்மூவாயிரம் குடும்பங்களுக்கு உடனடியாக வீடுகள் தேவை என்றும் அவர் கூறினார்.

திருமணம் முடித்த. பிள்ளைகள் உள்ள குடும்பங்களுக்கு முதலில் வீடமைப்புத் திட்டம் வழங்கப்பட வேண்டும். ஆனால் இந்தத் திட்டத்தின் செயற்பாடுகளினால் பலருக்கு வீடுகள் கிடைக்க இன்னும் ஐந்து வருடங்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலை உள்ளதாகவும் ராகுலநாயகி கூறினார்.