முல்லைத்தீவு நீராவியடிப் பிள்ளையார் ஆலய விவகாரம்

பிக்குமாரின் செயற்பாடுகளைக் கண்டித்து கிளிநொச்சியில் போராட்டம்

ஞானசார தேரருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தல்
பதிப்பு: 2019 செப். 27 10:37
புலம்: கிளிநொச்சி. ஈழம்
புதுப்பிப்பு: செப். 28 02:38
main photo main photo main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
#genocide
#kilinochchi
முல்லைத்தீவில் உயிரிழந்த சர்ச்சைக்குரிய மேதாலங்கார கீர்த்தி தேரரின் உடலை முல்லைத்தீவு நீராவியடிப் பிள்ளையார் ஆலயத் தீர்த்தக்கேணியடியில் தகனம் செய்தமைக்கும், பௌத்த பிக்குமார் தமிழ்ச் சட்டத்தரணிகளையும் தமிழ் மக்களையும் தாக்கி அச்சுறுத்தியமைக்கு கண்டனம் தெரிவித்தும் கிளிநொச்சியில் இன்று வெள்ளிக்கிழமை கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று இடம்பெற்றது. காலை 10.30க்கு ஏ-ஒன்பது வீதியில் அமைந்துள்ள கிளிநொச்சி மாவட்டச் செயலகத்துக்கு முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டு தமது எதிர்ப்பை வெளியிட்டனர். பௌத்த பிக்குமாரின் செயற்பாடுகளுக்கும் கண்டனம் தெரிவித்தனர்.
 
தமிழ் மக்களின் பூர்வீகக் காணிகளை இலங்கைப் படையினரின் ஒத்துழைப்போடு அபகரித்து விகாரை கட்டுதல், புத்தர் சிலை வைத்தல் போன்ற செயற்பாடுகளுக்கும் எதிர்ப்பு வெளியிட்டனர். நிறுத்துமாறும் வலியுறுத்தினர்.

முல்லைத்தீவு ஆலய விவகாரத்தில் இலங்கை அரசாங்கம், இலங்கைப் பொலிஸார் பாராமுகமாகச் செயற்பட்டனர். சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டிய பொலிஸார் பௌத்த பிக்குமாரின் நீதிமன்றக் கட்டளையை மீறிய செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கினர். இவை அனைத்தும் இனவாதச் செயற்பாடெனப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் குற்றம் சுமத்தினர்.

ஏற்கனவே நீதிமன்றத் தீர்ப்புகளை அவமதித்துச் செயற்பட்ட ஞானசார தேரர், பொது மன்னிப்பு வழங்கப்பட்ட பின்னரும் கூட, மீண்டும் நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்துள்ளதாகவும் தேரருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் வலியுறுத்தினர்.

கண்டனம் தெரிவிக்கும் சுலோக அட்டைகளையும் பதாதைகளையும் மக்கள் கைகளில் ஏந்தியிருந்தனர். சுமார் ஒரு மணி நேரமாக கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெற்றது.

பெண்கள் வாழ்வுரிமை இயக்கம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட சிவில் அமைப்புக்கள் இணைந்து இந்தப் போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர். இவ்வாறான கவனயீர்ப்புப் போராட்டங்களை வடக்குக்- கிழக்குத் தாயகப் பகுதிகளில் தொடர்ந்து முன்னெடுக்கவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளனர்.